ஸநாதன வழக்கில் உதயநிதி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் விலக்கு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக.15 தமிழ்நாடு அமைச்சர் மீதான ஸநாதனம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில் அவர் நேரில் ஆஜராக வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த ‘ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு,
“இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஸநாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், `ஸநாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா

ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித் துக்கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனம்’”என்று பேசி இருந்தார்.

அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது ராஜஸ்தான், உ.பி. மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்கள் புகாரும், நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை எல்லாம் ஒரே வழக்காக இணைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் உதயநிதி தாக்கல் செய்த மனுவை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்து விசாரணையை தள்ளிவைத்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன், பாதுகாப்பு கருதி அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரினார்.
நீதிபதிகள், “அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் வெவ்வேறு குற்றங்கள் அடிப்படையில், பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே தனியாகத்தான் விசாரிக்கப்பட வேண்டும். அதேசமயம் தமிழ்நாட்டில் விசாரிக்க அனுமதிக்க முடியாது. வேறு மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் தான் விசாரணைக்கு அனுமதிக்க முடியும்” என தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மனுதாரர்களுக்கு தாக்கீது அனுப்பவும், நவம்பர் 18 ஆம் முன் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். இந்த வழக்குகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக ஆஜராக தேவை இல்லை எனவும் நீதிபதிகள் விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *