இந்நாள் – அந்நாள் : ஆகஸ்டு 14 – வகுப்புரிமை நாள்

Viduthalai
2 Min Read

இந்த நாளில், 1950-இல், தந்தை பெரியார், தமிழ்நாட்டு மக்களைத் திரட்டி, ”வகுப்புரிமை நாள்” என போராட்டம் அறிவித்தார். 1928 முதல் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்க நீதிக்கட்சியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட “வகுப்புவாரி உரிமை” இட ஒதுக்கீடு, 1950-இல், உச்ச நீதிமன்றத்தால், செல்லாது என அறிவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நடைமுறைக்கு வந்த அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக “வகுப்புவாரி உரிமை ஆணை” இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்திய வரலாற்றில், தமிழ்நாட்டில், நீதிக்கட்சி ஆட்சியில் தான், அனைத்து பிரிவு மக்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் சேர்த்து, நூறு விழுக்காடு இட ஒதுக்கீடு 1928 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950-இல் நடைமுறைக்கு வந்ததும், மோசடிப் பார்ப்பனர்கள், அடிப்படை உரிமைகளைச் சுட்டிக்காட்டி, வகுப்புவாரி உரிமைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம், வகுப்புவாரி உரிமை ஆணையை ரத்து செய்தது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும், உச்ச நீதிமன்றமும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில் பார்ப்பனர் அல்லாதார் பெற்ற முதல் அடி இது தான்.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தந்தை பெரியார் கண்டனம் செய்ததோடு நில்லாமல், மக்களைத் திரட்டினார். அனைத்து மக்களும், 1950-இல் ஆகஸ்டு 14-ஆம் நாளை “வகுப்புரிமை நாளாக” அறிவித்து போராட அழைத்தார். மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலகர்கள், என அனைத்து மக்களும், போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போராட்டத்தின் வலிமையை உணர்ந்த ஒன்றிய அரசின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சட்ட அமைச்சர் பாபாசாகிப் அம்பேத்கரும், இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், வகுப்புரிமையை நிலை நாட்டவும், அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து, அரசமைப்பு விதி 15 (4) உருவாக்கப்பட்டது. இந்த விதியில் தான், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு, நாடு முழுவதும், கல்வியில் இட ஒதுக்கீடு ஒன்றிய மாநில அரசுகள் இட ஒதுக்கீடு அளிக்கின்றன.
1950-இல் அரசியல் அமைப்புச் சட்டம் வந்தபோது, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் பிரிவான 16(4) மட்டும்தான் இருந்தது. கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு இல்லை.

சமூகப்புரட்சியாளர் தந்தை பெரியாரின் வகுப்புரிமைக்கான போராட்டத்தின் காரணமாகத்தான், கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு சேர்த்திட வாய்ப்பு கிட்டியது. இது தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்திட்டது. அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோரும் உறுதுணையாக இருந்தார்கள்.
ஆகஸ்டு 14, 1950-இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமை நாள் போராட்டத்தையும், அதன் விளைவாக, இன்றளவும், கல்வியில் இட ஒதுக்கீடு பெறும் இளைய சமுதாயம், இந்த வரலாற்றையும், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும் இந்த நாளில் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *