வேலைக்காரர்கள் நீங்கி விடுவார்கள்; நண்பர்கள் பிரிந்துவிடுவார்கள்; ஆனால், எஜமானன் கீழ்இருக்கின்ற அடிமை என்றைக்கும் அடிமையாக இருக்கவேண்டும்; இப்படித்தான் மதம் சொல்லிற்று; இப்படித்தான் வைதீகம் சொல்லிற்று!
அதை எதிர்த்து பெரியாருடைய சுயமரியாதை இயக்கம், முற்போக்கு இயக்கங்கள் போராடியதால், சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன!
மதுரை, ஆக.13 வேலைக்காரர்கள் நீங்கி விடுவார்கள்; நண்பர்கள் பிரிந்துவிடுவார்கள். ஆனால், எஜமானன் கீழ்இருக்கின்ற அடிமை என்றைக்கும் அடிமையாக இருக்கவேண்டும். இப்படித்தான் மதம் சொல்லிற்று; இப்படித்தான் வைதீகம் சொல்லிற்று. ஆனால், அதை எதிர்த்துப் பெரியாருடைய சுயமரியாதை இயக்கம், முற்போக்கு இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள் எல்லாம் முன்னால் நின்று போராடியதால், சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 4.2.2024 அன்று மதுரையில் மதிவாணன் – சுகுணாதேவி ஆகியோரின் மணவிழாவினைத் தலைமை ஏற்று நடத்தி வாழ்த்துரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
குடந்தை எஸ்.ஆர்.இராதா
எல்லாவற்றையும்விட, ஜாதி உணர்வு இல்லா விட்டாலும், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களாக கீழே இருக்கின்றவர்களுக்கு வாய்ப்பு வரவேண்டும் என்பதற்காக, சுயமரியாதை இயக்கத்தையும், தந்தை பெரியாரையும் பின்பற்றிய ஓர் அற்புதமான தோழர் என்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பிறகு போனாலும்கூட, அடிப்படையில் மாறாத குடந்தை எஸ்.ஆர்.இராதா அவர்கள். அவர் அமைச்சராக இருந்தார்.
எந்த நிலையிலும் இறுதி வரையில், ‘விடுதலை’ யோடும், பெரியாரோடும், எங்களோடும் தொடர்பு மாறாதவர் தோழர் குடந்தை எஸ்.ஆர்.இராதா அவர்கள்.
ஆனால், இன்றைக்கு இந்த மணவிழாவினைப் பொறுத்தவரையில், மணவிழா அழைப்பிதழைப் பார்த்தேன். அதில் ஜாதி மறுப்புத் திருமணம் என்று போடப்பட்டு இருந்தது.
ஜாதி மறுப்புத் திருமணம் என்பது புரட்சிகரமானதாகும்!
இதுவே புரட்சிகரமானதுதான். சுயமரியாதைத் திருமணம் செய்வதே பெரிய விஷயம். ஆனால், அதற்கு மேலும் பார்த்தீர்களேயானால், ஜாதி மறுப்புத் திருமணம் என்று செய்வது புரட்சிகரமானதாகும்.
இதில் மகிழ்ச்சி என்னவென்றால், ஜாதி மறுப்புத் திருமணம் என்பதைவிட, இன்னும் சிறப்பு என்ன வென்றால், பெரிய வாய்ப்பு என்னவென்றால், ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. பல திருமணங்களை நாங்களும் நடத்தி வைக்கின்றோம். அது காதல் திருமணமாக இருந்து, ஜாதி மறுப்புத் திருமணமாக இருக்கும்.
‘‘யாயும், ஞாயும் யாராகியரோ!”
அவ்வளவுதானே தவிர, வேறொன்றுமில்லை!
ஆனால், இந்த மணவிழாவிற்குரிய சிறப்புக்கு சிறப்பு என்னவென்றால், ஏற்பாடு செய்யப்பட்ட ஜாதி மறுப்புத் திருமணமாகும்.
100-க்கு 150 மதிப்பெண் கொடுக்கவேண்டும்
இம்மணவிழாவிற்கு 100-க்கு 150 மதிப்பெண் கொடுக்கவேண்டும். மதிப்பெண்களை கடன் வாங்கி யாவது போடவேண்டும். ஓவர் டிராப்ட் எடுக்கவேண்டும்.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் பதிவு செய்து, அதற்குப் பிறகு மணமகளை – மதி வாணன் அவர்களுக்குக் கண்டறிந்திருக்கின்றார் மோதிலால் அவர்கள்.
மணமகளுடைய தாயார் தன்னுடைய வாழ்விணை யர் இல்லையென்றாலும், துணிவாக முடிவெடுத்து, இது ஒரு நல்ல குடும்பம் என்று தெளிவாகத் தெரிந்து – இந்த நல்ல குடும்பத்தோடு சம்பந்தத்தை ஏற்படுத்தினார் என்றால், கொள்கைக்காக இந்த மண விழாவை நடத்திக் காட்டுகிறோம் என்று மோதிலால் அவர்களும், மணமகன் அவர்களும் உறுதியோடு இங்கே வந்திருக்கின்றார்கள் என்றால், பெரியார் என்றும் தோற்கமாட்டார்; பெரியாருடைய கொள்கைகள் எப்பொழுதும் வெல்லும் என்பதற்கு இம்மணவிழாதான் ஓர் அடையாளம்.
ஏனென்றால், பெரியார் கொள்கை என்பது ஒரு சமூக விஞ்ஞானம்.
விஞ்ஞானம் தோற்பதில்லை. ஆகவே, இது சமூக விஞ்ஞானமாக அமைந்து பெரியார் கொள்கைகள்படியே நடக்கக்கூடிய வாய்ப்பை இன்றைக்குப் பெறுகிறோம்.
எனவேதான், இந்த மணவிழாவினுடைய சிறப்பு என்பது மிகமிக முக்கியமானதாகும்.
மோதிலால் அவர்கள், அவருடைய வாழ்விணையர் கவுசல்யா அம்மா ஆகியோர், அவர்களுடைய பிள்ளைக்கு இம்மண முறையில் மணவிழாவினை நடத்தி வைப்பதில் ஒன்றும் அதிசயமில்லை.
ஆயிரம் முறை பாராட்டத்தகுந்ததாகும்!
ஆனால், தன்னுடைய வாழ்விணையர் இன்றைக்கு உருவமாக இல்லாவிட்டாலும், கொள்கையாக இருக்கி றார் என்று நினைத்துக்கொண்டு, துணிச்சலாக, மண மகளுடைய தாயார் அவர்கள் முன்வந்து இம்முறையில் மணவிழாவினை ஒப்புக்கொண்டதற்காக அந்தக் குடும்பம் ஆயிரம் முறை பாராட்டத்தகுந்ததாகும்.
மணமகன் மதிவாணன் பி.இ., பொறியாளர்; மண மகள் சுகுணாதேவி எம்.ஏ., படித்து, தேன்சிட்டு என்று பள்ளிக் கல்வித் துறை நடத்தக்கூடியதில், அவர்கள் உதவி ஆசிரியராக இருக்கிறார் என்றால், பெண்களுக்கு ஆற்றல் உண்டு எல்லா துறைகளிலும், ஆண்களுக்கு இணையாக, எழுத்தாளர்களாக, கருத்தாளர்களாக, ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.
அதுவே எனக்கு ஒரு தனிப் பற்று – தனியே மண மகளைப் பாராட்டுகிறேன். ஏனென்றால், நாங்கள் எல்லாம் ஆசிரியர் வர்க்கம் பாருங்கள். என்னையும் ‘‘ஆசிரியர், ஆசிரியர்’’ என்றுதானே அழைக்கிறார்கள்.
ஆகவே, இது எங்கள் குடும்பம், நம்முடைய குடும்பம் என்ற பெருமையோடு இம்மணவிழாவினை நடத்தக்கூடிய அந்த வாய்ப்பு இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது. மணமக்கள் தேன்சிட்டுகள் போன்று இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஓர் அருமையான இந்த வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சியை மகிழ்ச்சிகரமாக நடத்துகின்றோம்.
நான் தொடக்கத்தில் சொன்னேன் அல்லவா – 90 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதைத் திருமணம் முறை வந்தபொழுது, அய்யர் இல்லையே, சடங்கு இல்லையே, சம்பிரதாயம் இல்லையே, வேத மந்திரங்கள் ஓதவில்லையே என்றெல்லாம் கேட்டார்கள்.
அவர்கள் எல்லாம் ஒரிஜினல் அய்யர் இல்லை!
சில தாய்மார்களுக்கு, பெரியவர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம். அது என்னவென்றால், குறிப்பாக இந்த சமூகமே அய்யர் பட்டத்தைப் போட்டுக் கொள்ளும். எல்லோரும், அய்யர், அய்யர் என்று போட்டுக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் ஒரிஜினல் அய்யர் இல்லை. அய்யர் என்கிற வார்த்தை பொது வார்த்தை. கிறித்தவர்களில்கூட அய்யர் என்று பாதிரியாருக்குப் போடுகிறார்கள். ஆகவே, அந்த அய்யர் என்பதுகூட மரியாதைக்காகப் போடுகின்ற பட்டமே தவிர, அதை ஜாதி என்றுகூட எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம்கூட கிடையாது.
சடங்குகள், மந்திரங்கள் இல்லாமல் கல்யாணம் நடந்தால், குழந்தை பிறக்குமா?
அவர்கள் என்ன சந்தேகம் கேட்டார்கள் என்றால், ‘‘ஏங்க, பெரியார் தலைமையில் கல்யாணம் நடக்கிறதே, சடங்குகள் இல்லாமல், மந்திரங்கள் சொல்லாமல் கல்யா ணம் நடத்துகிறாரே, குழந்தை பிறக்குமா?” என்று.
சுயமரியாதைத் திருமண முறையில் நடைபெறும் மணவிழாக்களில் எப்படி வாழ்த்துவார்கள் என்றால், ‘‘அளவோடு பெற்று வளமாக இருங்கள்” என்றுதான். அதை அரசாங்கமே சொல்லக்கூடிய அளவிற்கு வந்துவிட்டது.
‘‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று மணமக்களை முன்பெல்லாம் வாழ்த்துவார்கள். ‘‘பதி னாறு” என்றால், தமிழ்ப்புலவர்கள் ‘‘பதினாறும் பெற்று” என்றால், குழந்தைகள் அல்ல; ‘‘பதினாறு பேறுகள்” என்று விளக்கம் சொல்வார்கள்.
சொல்கிறவர்கள் எதை நினைத்துச் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல; புரிந்துகொள்பவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.
வரிசையாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டே இருந்தால், வாழ்க்கையில் துன்பம்தான் ஏற்படும்!
‘‘பதினாறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என்று சொல்லிவிட்டார்களே என்று, புது காலண்டர், புது டைரி போன்று, நம்மாள் வரிசையாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டே இருந்தால், வாழ்க்கையில் துன்பம்தான் ஏற்படும்.
பெயர் வைத்தால், அதுகூட மறந்துவிடும் என்று நினைத்து, “பெரியவனே, சின்னவனே, நடுவுளவனே” என்று சொல்லி சொல்லி கூப்பிடவேண்டி இருக்கும்.
இன்றைக்கு அதுபோன்று இல்லாமல், எல்லா வகை யிலும் இந்த மணமக்கள் வாழ்க்கைத் தர அளவோடு எல்லாவற்றிலும் அளவோடு – உண்ணுவதா, அதில் அளவோடு – செலவழிப்பதா, அளவோடு – வாழ்வதா, அதிலும் அளவோடு இருப்பார்கள்.
அளவு என்பது இருக்கிறதே, அதுதான் மானம். மானம் என்பதற்கு இன்னொரு பொருள் என்னவென்றால், அளவு என்று அர்த்தம்.
கட்டுமானம் என்கிற வார்த்தை வரும்பொழுது, அளவைத் தாண்டக்கூடாது என்பதுதான் அதனுடைய அடிப்படை.
ஆகவேதான், ‘‘மானமும் அறிவும், மனிதர்க்கு அழகு” என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.
அதிலும் இந்த ஜாதி, அந்த ஜாதி, இந்த மதம், அந்த மதம், இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று அவர் சொல்லவில்லை. மனிதன் என்றால், மானமும், அறிவும் அழகு. அதனை உணர்ந்த காரணத்தினால்தான், மண மக்கள் இவ்வளவு சிறப்பாக, இன்றைக்கு வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்திக்கொள்ள விருக்கிறார்கள்.
மணமக்களுக்கு எந்த அறிவுரையும் தேவையில்லை. நம்முடைய எழுத்தாளர், சிறப்பான எழுத்தாளர். அவரு டைய நூலை நான் படித்தேன். வாய்ப்பு இருந்தது என்றால், நீங்கள் எல்லோரும் அந்த நூலைப் படிக்கவேண்டும். ‘‘கழிப்பறையா பெண்கள்?” என்று மிக முக்கியமாக ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்.
மக்கள் தொகையில் சரி பகுதி மகளிர். ஒரு பக்கம் நாம் ‘‘தாய்மை, தாய்மை” என்று புகழ்ந்து மகளிரை மறுபக்கத்தில் அடிமையாக, ஊதியம் கொடுக்காமல் வாழ்நாள் முழுக்க அடிமையாக நடத்துகின்ற நிலை உள்ளது.
பெரியாருடைய சுயமரியாதை இயக்கம்!
வேலைக்காரர்கள் நீங்கி விடுவார்கள்; நண்பர்கள் பிரிந்துவிடுவார்கள். ஆனால், எஜமானன் கீழ்இருக்கின்ற அடிமை என்றைக்கும் அடிமையாக இருக்கவேண்டும்.
இப்படித்தான் மதம் சொல்லிற்று; இப்படித்தான் வைதீகம் சொல்லிற்று.
ஆனால், அதை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம், முற்போக்கு இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள் எல்லாம் முன்னால் நின்று போராடியதால், சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது.
இங்கே சொன்னார்களே, 24 மணிநேரமும் நல்ல நேரம் என்று.
‘‘நல்ல நேரம்’’ என்று நீங்களும் போடுகிறீர்களே?
எங்களுடைய பெரியார் நாட்காட்டியில், நல்ல நேரம் என்று போட்டோம். அதைப் படித்தவுடன் ஒருவர், ‘‘ஏன் சார், மற்ற கட்சிக்காரர்கள்தான் கொள்கையை விட்டுவிட்டார்கள்; நீங்கள் அந்தக் கொள்கையோடு இருப்பீர்கள் என்று பார்த்தால், ‘‘நல்ல நேரம்” என்று நீங்களும் போடுகிறீர்களே? என்று.
‘‘அய்யா, கொஞ்சம் அவசரப்படாமல், அடுத்த வரியைப் படியுங்கள்” என்றேன்.
‘‘நல்ல நேரம், 24 மணிநேரமும்” என்று போட்டிருந்தோம்.
அதேபோன்று, இங்கே அழகாக எழுதியிருக்கிறார்கள் பாருங்கள், 365 நாட்களும் நல்ல நாள்களே!
மூடநம்பிக்கைகளை வளர்க்க முடியாது; வளர்க்கக் கூடாது!
இது ‘பீடை’ மாதம், வெறுக்கின்ற மாதம் என்றெல்லாம் கிடையாது.
எங்களைப் போன்ற பகுத்தறிவாளர்களுக்கு ஒரே ஒரு லாபம் உண்டு – மூடநம்பிக்கையால் ஒரு லாபம்; அது என்னவென்றால், கூட்டம் போடுவதற்கு மண்டபங்களைத் தேடுகின்றபொழுது, மற்ற மாதங்களைவிட ‘பீடை’ மாதங்களில் மண்டபங்களின் வாடகைக் குறைவாக இருக்கும்; ஏனென்றால், அந்த மாதங்களில் எந்த விழாக்களையும் நடத்தமாட்டார்கள். அதற்காக நாம் மூடநம்பிக்கைகளை வளர்க்க முடியாது; வளர்க்கக் கூடாது.
திருக்குறள் முனுசாமி
மணவிழா அழைப்பிதழ் தன்னிடம் கொடுத்தவுடன், திருக்குறள் முனுசாமி அவர்கள் மிக அழகாக கேட்பார்.
யாருக்குக் கல்யாணம்?
மகனுக்கு.
எப்பொழுது கல்யாணம்?
தேதியைச் சொல்வார்கள்.
எங்கே கல்யாணம்?
இன்ன மண்டபத்தில் நடக்கவிருக்கிறது.
மணமகள் சொந்தக்காரா, அசலா என்பது போன்று பல கேள்விகளைக் கேட்பார். அழைப்பிதழைப் பிரிக்காமலேயே கேட்பார்.
பிறகு திருக்குறளார் அவர்கள், அவரே வேடிக்கையாக சொல்வார், ‘‘இவ்வளவையும் கேட்கக்கூடாது என்பதற்காகத்தான் அழைப்பிதழை அச்சடித்துக் கொடுத்திருக்கிறார்” என்று.
உடனே அழைப்பிதழைக் கொடுத்தவர், ‘‘அந்த அழைப்பிதழைக் கொடுக்கிறீர்களா?” என்று.
ஏன்? என்று இவர் கேட்டார்.
‘‘அதில் உள்ள தகவல்களைத்தான் உங்களுக்குச் சொல்லி விட்டேனே. இந்த அழைப்பிதழை அடுத்த வருக்குக் கொடுக்கலாம் என்றுதான் கேட்கிறேன்” என்றார்.
தந்தை பெரியார் கைப்பட எழுதிய மூன்று அறிவுரைகள்!
துணைவர்களே, உங்கள் இருவரது வாழ்க்கையானது முதலாவதாக ஒருவருக்கொருவர் உள்ளம் கவர்ந்து ஒன்றிய நண்பர்களாக வாழவும்.
இரண்டாவதாக, ஒருவருக்கொருவர் மானம் பாராது, பணிவிடையாளர்களாக அமைந்த வாழ்வாகவும்,
மூன்றாவது, கருத்து வேறுபாடு என்று ஒன்று இருப்பதாகவே அறியாதார் வாழ்வாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இது யாருடைய சொல் தெரியுமா?
தந்தை பெரியார் அவர்கள், கைப்பட எழுதிய மூன்று அறிவுரைகள்.
இதில் எங்கேயாவது மதம் இருக்கிறதா?
இதில் ஏதாவது ஜாதி இருக்கிறதா?
மனிதம் இருக்கிறது; வெற்றி இருக்கிறது. இதில்தான் சமூகம் வளரக்கூடிய முன்னேற்றம் இருக்கிறது; வளர்ச்சி இருக்கிறது.
ஆகவே, இம்மணமக்கள் எல்லா வகையிலும் சிறப்போடு, இந்த மணவிழா உறுதிமொழி கூறி நடத்திக் கொள்கிறவர்கள் – ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக வாழவேண்டும்.
எஜமானன் – அடிமை என்பது கிடையாது.
ஆண் – பெண் பேதம் என்ற நிலை கிடையாது.
உற்ற நண்பர்களாக வாழவேண்டும் என்பதுதான்.
அதனால்தான், இணையேற்பு விழா என்று சொல்கி றோம். எனவே, நீங்கள் இந்தக் கொள்கையைப் பின்பற்று கின்ற நேரத்தில், நீங்கள் இந்தக் குடும்பத்திற்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை; இந்தக் கொள்கைக்கும், இந்த இயக்கத்திற்கும் பெருமை சேர்க்கின்றீர்கள் என்ற அளவிலே வாழ்ந்து காட்டுங்கள் என்று மணமக்களை கேட்டுக்கொள்கிறேன்.
மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்!
மணமக்களுக்கு வேண்டுகோள் அல்ல – அறி வுரைதான்.
நீங்கள் நன்றாகப் படித்தவர்கள். நல்ல பொறுப்பில் இருக்கிறீர்கள். மேலே வளரவேண்டும், வளருவீர்கள். ஆனால், உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான்.
ஒன்று, வாழ்க்கையில் சிக்கனத்தையும், எளிமை யையும் கடைபிடியுங்கள்.
உங்கள் பெற்றோரை என்றைக்கும் நீங்கள் மறக்காதீர்கள். நல்ல நினைவில் வைத்துக்கொண்டு, அவர்களிடம் அன்பு காட்டுங்கள்; பாசம் காட்டுங்கள். அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது பணத்தையோ, பொருளையோ அல்ல. என்றைக்கும் நம்முடைய பிள்ளைகள் நம்மிடம் பாசம் காட்டவேண்டும் என்பதைத்தான்.
பல நேரங்களில், வளர்ந்தவர்கள் இதை மறந்து விடுகிறார்கள். ஆனால், நம்மைப் போன்ற கொள்கைக் குடும்பங்களில் அதுபோன்ற நிலை இல்லை.
ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவதுபோன்று…
கொள்கையற்றவர்கள் குடும்பங்களில், ஆடம்ப ரத்திற்காகத் திருமணம்; பணத்திற்காக திருமணம்; வரதட்சணை என்று சொல்லி விலைக்கு வாங்குகிறார்கள். ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவதுபோன்று, மண மகனை விலைக்கு வாங்கக்கூடிய சூழல் இருக்கிறது.
அவற்றையெல்லாம் தவிர்த்த நிலையில்தான் இங்கே! அருமை மணமக்கள் தெளிவானவர்கள்; நல்ல கருத்துச் செறிவானவர்கள்.
ஆகவே, மணமக்கள் உறுதிமொழி கூறி, வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சியை நடத்திக் கொள்கிறார்கள்.
(மணமக்கள் உறுதிமொழி கூற, மணவிழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார்).
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.