புதுடில்லி, ஆக.13- சிபிஅய் கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த 21.3.2024 அன்று அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த பிணைக்கு டில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சி.பி.அய். கைது செய்தது.
கடந்த ஜூலை 12ஆம் தேதி அமலாக்கத் துறை வழக்கில், கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது. ஆனால், சிபிஅய் வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தன்னை சிபிஅய் கைது செய்ததற்கு எதிராகவும், இடைக்கால பிணை கோரியும் டில்லி உயா்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அப்போது எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் சிபிஅய் கைது செய்ததாக கூற முடியாது என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் சிபிஅய் கைது செய்ததை ரத்து செய்ய டில்லி உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஈராக்கின் – அறிவியலுக்குப் புறம்பான முடிவு!
ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டதற்கு எதிராக அந்நாட்டுப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“இந்தப் பிரச்சனையில் அய்.நா.சபையும்,உலக சுகாதார அமைப்பும் தலையிட்டு குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும். அறிவியலுக்கு புறம்பான இராக் அரசின் முடிவுக்கு எதிராக அனைவரும் குரலெழுப்புவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.