சிலிகுரி, ஆக.13- மேற்குவங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் பக்டோக்ரா பகுதி உள்ளது. பக்தர்கள் சிலர் இந்த வழியாக சிவன் கோவில் ஒன்றிற்கு ‘பாதயாத்திரை’ சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நெடுஞ்சாலையில் வந்த சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு வந்த அந்த கார், பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறை யினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விபத்தில் இறந்தவர்கள் பிரகலாத் ராய், கோவிந்த் சிங் (வயது 22). அம்லேஸ் சவுத்ரி (வயது 20), கனக் புர்மான் (வயது 22), பிர னாப் ராய் (வயது 28) மற்றும் படகந்த் ராய் என்று தெரியவந்தது. அந்த சொகுசு கார் கோஸ்புக்கூரில் இருந்து சிக்கிம் சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.