புதுடில்லி, ஆக.13- செந்தில் பாலாஜியின் பிணை மேல் முறையீட்டு வழக்கில், அமலாக்கத் துறைக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் பிணை கேட்டு தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை செந்தில் பாலாஜி சார்பில் வழக்குரைஞர் ராம் சங்கர் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (12.8.2024) தொடங்கியதும், ‘செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு விசாரணை நிறைவடையாமல் பண மோசடி வழக்கு விசாரணையை தொடங்க முடியுமா?. ஊழல் வழக்குகளில் சாட்சிகள் எத்தனை? ஊழல் வழக்கு நிறைவடைய எவ்வளவு காலம் பிடிக்கும்? என அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, ‘இரு வழக்கு களிலும் ஒரே நேரத்தில் விசாரணை நடைபெறலாம். செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் சாட்சிகளை பொறுத்த வரை, முதல் வழக்கில் 21 சாட்சிகளும், 2ஆவது வழக்கில் 100 சாட்சிகளும், 3ஆவது வழக்கில் 200 சாட்சிகளும் உள்ளன.
செந்தில்பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரை ஞரை உச்சநீதிமன்றம் நிய மிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் சாட்சி யங்களை விசாரிப்பது குறித்து முடிவு எடுப்பார்.
லஞ்ச ஊழல் வழக்கில் விசாரணை தாமதம் ஆவதை சுட்டிக்காட்டி பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி பிணை கோர முடியாது. செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச ஊழல் விசார ணையை தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது’ என வாதிட்டார்.
உடனே நீதிபதிகள், ‘அப்படியென்றால், ஊழல் வழக்கில் விசாரணை முடி யாமல், பண மோசடி வழக்கை விசாரிக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி செந்தில்பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையை 3 மாதங்களுக் குள் முடிக்க வேண்டும் என கூறுகிறீர்கள்.
ஊழல் வழக்கில் விசாரணை முடியாமல், பண மோசடி வழக்கு விசாரணை எப்படி தொடங்க முடியும்? அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளார். நீண்ட நாட்கள் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கக்கூடாது. செந்தில் பாலாஜியை விசாரிக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்க மறுக்கிறது’ என வாதிட்டார்.
இதையடுத்து செந்தில்பாலாஜி சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘வழக்கு விசாரணையை நிறைவு செய்ய காலக்கெடு விதிக்க முடியாது.
14 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனுதார ருக்கு மணிஷ் சிசோடியா வழக்கின் தீர்ப்பு பொருந்தும். மனுதாரர் மேனாள் அமைச்சர், 5 முறை சட்டப்பேரவை உறுப்பினர். இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்.
எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். எனவே பிணை வழங்க வேண்டும். அமலாக்கத் துறை ஆவணங்கள் அனைத்தும், ஊழல் புகாரை விசாரிக்கும் ஒன்றிய குற்றப்பிரிவிடம் கேட்டுப் பெற்றவை. ‘பென் டிரைவில்’ அமலாக்கத்துறை சுட்டிக் காட்டும் கோப்பு செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்படவில்லை’ என வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பண மோசடி வழக்கில் மேனாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பிணை மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.