தமிழ்நாட்டில் சமூகநீதி நகராட்சி தூய்மைப் பணியாளரின் மகள் நகராட்சி ஆணையரானார் பணி நியமன ஆணை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

viduthalai
1 Min Read

சென்னை, ஆக.13 தலைமைச் செயலகத்தில் நேற்று (12.8.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர்களுக்கும் பணி நியமனஆணைகளை வழங்கினார்.

அதன்படி நகராட்சி ஆணையருக்கான பணி நியமன ஆணை பெற்ற துர்கா என்பவர் கூறும்போது, ‘‘தமிழ்நாடு அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி படித்தாலே நாம் நல்ல நிலைக்கு உயரலாம். நான் அரசுப்பள்ளி, அரசுக் கல்லூரியில்தான் படித்தேன். டிஎன்பிஎஸ்சி பயிற்சியின்போதும், அரசு பயிற்சி மய்யத்தையும் பயன்படுத்திக் கொண்டேன். தற்போது நான் பணி ஆணை வாங்கப் போகிறேன். என் தந்தை மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகதான் பணியாற்றினார். என் அப்பா நல்ல துணி போட்டதில்லை, என் வளர்ச்சிக்காக அவர் பலவற்றை இழந்தார். நல்ல உணவுகூட அவருக்குகிடையாது. என் அப்பா, என் தாத்தா எல்லோரும் தூய்மைப் பணியாளர்களாக இருந்தார்கள். நான் இன்று நகராட்சி ஆணையராகியுள்ள நிலையில், இன்றில் இருந்து எங்கள் தலைமுறையே மாற்றம் காணப் போகிறது. இந்த வாய்ப்பை அளித்த அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி’’ என்றார்.

இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், ‘‘நகராட்சி ஆணையராக பொறுப்பேற்கும் துர்காவின் பேட்டியை கேட்டு அகமகிழ்ந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்கு துர்கா எடுத்துக்காட்டு. நான் மீண்டும் சொல்கிறேன். கல்விதான் யாராலும்பறிக்க முடியாத சொத்து’’ என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *