ஊசிமிளகாய்
இன்றும், நேற்றும் (11, 12.8.2024 ஆகிய நாள்களில்) ஏடுகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் வந்துள்ள நெஞ்சை உருக்கும் துயரச் செய்திகள் இதோ:
1. திருத்தணி அருகே கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி; கார் – லாரி மோதல்
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த அய்ந்து பேரும், செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர்கள். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் சாமி தரிசனம் முடித்து, பிறகு சித்தூரில் (ஆந்திர மாநிலம்) உள்ள பிரசித்தி பெற்ற ஒரு கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்தக் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கண்ட்டெய்னர் லாரிமீது நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி; 2 பேருக்குப் பலத்த காயம்.
2. திருச்செந்தூரில் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் – கடலில் குளிக்கச் சென்ற இரு பெண்கள், திடீரென்று வந்த அலையில் சிக்கி, மீள முடியாது தவித்த போது, மேற்பார்வை காவல் துைற கடல் பாது காப்பாளர்கள் குதித்து, அவர்களைக் காப்பாற்றி கரை சேர்த்தனர். இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
3. இன்று (12.8.2024) காலைச் செய்தி – பீகார் கோவில் வழி பாட்டு நெரிசலில் சிக்கி ஏழு பேர் பலியாயினர்.
இப்படி நாள்தோறும் வரும் எண்ணற்ற செய்திகளுக்குப் பஞ்சமில்லை!
மறைந்தவர்கள் மனிதர்கள்! பக்தர்களாக இருந்தாலும் மனித உயிர்கள் ஆகும்!
கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களான நம்மைப் போன்றவர்களும், மனிதாபிமான அடிப்படையில் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலும், தேறுதலையும் சொல்லி தேற்றக் கடமைப்பட்டவர்கள்.
என்றாலும், பக்திப் போதையினால் இப்படி செல்வோரின் நம்பிக்கை எதனடிப்படையில்?
கடவுளிடம் வேண்டினால், நாம் விரும்புவதைத் தருவார்; நம்மைக் காப்பாற்றி உயர்த்துவார் என்ற நம்பிக்கை அடிப்படையில்தானே செல்லுகின்றனர்?
அப்படியிருக்க இப்படி அன்றாடம் நூற்றுக்கணக்கில் – இந்தியா முழுவதிலும் மட்டுமல்ல – கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு உலகம் முழுக்க ஏற்படுகிறது. அதுபற்றி பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு எந்த கடவுள் பக்தராவது சிந்தித்ததுண்டா?
குடிகாரனுக்கு எப்படி குடியை விட முடிய வில்லையோ, அப்படித்தானே இந்த ‘பக்தி போதை’யும்?
கடவுளை நம்புவோர்களே, கோபப்படாமல், சற்று நிதானமாக நாம் கேட்கும் கேள்விக்கு விடை கண்ட பிறகு, உங்கள் கடவுள் நம்பிக்கையைத் தொடருங்கள்.
1. ‘‘எல்லாம் வல்ல’’ கடவுளால், இம்மாதிரி நடவாமல் தடுக்க ஏன் முடியவில்லை?
2. ‘கடவுள் கருணையே வடிவானவர்’ என்று இல்லாத ஒன்றுக்கு இணையற்ற பெருமை பேசுகிறீர்களே, அந்தக் கடவுள் ‘‘கருணையே வடிவானவர்’’ என்று பிரச்சாரம் செய்யப்படும் கடவுள் – கருணாமூர்த்திகள், ஏன் இவற்றைத் தடுக்க முன்வரவில்லை? கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்!
கேரள மாநில நிலச்சரிவு என்ற தேசியப் பேரிடர்பற்றி ஆராயும்போது, 400–க்கும் மேற்பட்டடோர் பலி; இன்னமும் தேடும் பணி தொடரும் அவலம்.
நிவாரணப் பணி – மழை மீண்டும் என அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு!
எங்கே?
‘‘கடவுளின் தேசத்தில்’’ (‘‘God’s own Country’’) அங்கேதான் சபரிமலை அய்யப்பன், குருவாயூரப்பன் முதல் பற்பல சாமிகள். மேலும் பகவதியம்மன் பெருமை என்ன மற்றவர்களுக்குக் குறைந்ததா?
என்றாலும், பக்தர்களை பதம் பார்க்கலாமா?
எனவே, கடவுள் நம்பிக்கையை – பகுத்தறிவோடு மறுபரிசீலனை செய்து, மனிதனின் தனி அடை யாளமான பகுத்தறிவைப் பயன்படுத்திடுங்கள்.
ஏன் பகுத்தறிவாளர்களுக்கு அப்படி நடப்பதில்லையா? என்ற எதிர்க்கேள்வி போட்டு தப்பிக்க முயலாதீர்கள். அது எடுபடாது.
காரணம், இயற்கை, நாளும் நடைபெறும் சாதாரண, அசாதாரண நிகழ்வுகள் மனிதனின் கவனக் குறைவால், திறமையின்மையால், அலட்சியத்தால் நடைபெறுவது என்ற விளக்கம் பகுத்தறிவாளர்களுக்கானது. எனவே, விபத்துகளும் அதனால்தான்.
கோவிலுக்குப் போவோரைக் காப்பாற்ற வேண்டியது அந்தக் கடவுள்களின் முக்கியப் பொறுப்பல்லவா, யோசியுங்கள் திறந்த மனதோடு!