சென்னை, ஆக. 11 அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பதவிக்காலம் நிறைவடைந்ததால், பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலர் தலைமையில் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்ராஜ் இருந்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் கடந்த 10.8.2024 அன்று நிறைவடைந்தது. பொதுவாக, துணைவேந்தர் பதவிக் காலம் நிறைவு பெற்றதும், அந்த பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாக குழு அமைக்கப்படும். அந்த வகையில் பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் குழுவில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரக ஆணையர் ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் உஷா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழகம், மதுரை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். தற்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரின் பதவிக் கால மும் நிறைவு பெற்றுள்ளதால், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.