கடலூர், ஆக.11 கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
“தமிழ்நாட்டில் தாழ்தள பேருந்துகள் இயக்காமல் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில் முதற்கட்டமாக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாற்றுத் திறனாளிகளுக்காக தாழ்தள பேருந்தை சென்னை மாநகராட்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அடுத்த கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து பிற பகுதிகளுக்கு தாழ்தள பேருந்து இயக்க வேண்டுமானால் அந்தப் பகுதிகளில் உள்ள சாலையை ஆய்வு செய்து படிப்படியாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக இந்த மாதம் கடைசியில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். பின்னர் முழு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை. ஆனால் தி.மு.க.ஆட்சி வந்த பிறகு முதலமைச்சர் உத்தரவின் பேரின் முதற்கட்டமாக ரூ. 1850 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்டமாக நிதி வழங்க நிதிதுறையிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பாதுகாப்பாக பேருந்தில் பயணம் மேற்கொள்வதற்கு போக்குவரத்து துறை மற்றும் வட்டார போக்குவரத்து சார்பில் அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று உரிய முறையில் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வருங்காலங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெய்சிறீராம் சொல்லுவார். அமைச்சர்களும் ஜெய் சிறீ ராம் என சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அண்ணாமலை சரியான முறையில் அப்டேட் ஆகவில்லை.
ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடி ராமரை கைவிட்டு விட்டார். அதற்கு மாறாக தற்போது ஜெய் ஜெகநாத் என்பவரை கைப்பிடித்து உள்ளார். மேலும் பதவி ஏற்பதற்கு முன்பு பிரதமர் உள்ளிட்ட அனைவரும் ஜெய் சிறீ ராம் என கூறினார்கள். தற்போது பதவி ஏற்புக்கு பிறகு பிரதமர் மோடி ஜெய் சிறீ ராமை விட்டுவிட்டு ஜெய் ஜெகநாத் என முழக்கம் ஏற்படுத்தி கட்சி தாவி விட்டார். ஆகையால் அண்ணாமலை சரியான முறையில் அப்டேட் ஆன பிறகு அதற்கான பதில் தெரிவிக்கிறோம்.”
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.