ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு நிலை அளித்திட்ட அரசமைப்புச்சட்டப் பிரிவு 370 ஒன்றிய அரசால் நீக்கப்பட்டு, அதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அய்ந்து நீதிபதிகள் அமர்வில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. பிரிவு 370 நீக்கம் செல்லாது என்பதாக மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் வாதம் புரிந்து வருகிறார். பிரிவு 356அய் முறையற்ற வகையில் பயன்படுத்தி ஒன்றிய அரசு ஜம்மு & காஷ்மீர் மாநில அமைச்சரவையைக் கலைத்துள்ளது. இது அரசமைப்புச்சட்ட நெறிகளுக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் புறம்பானது, அளவுக்கு அதிகமான அதிகார மீறலாகும். ஜம்மு & காஷ்மீர் மாநில அமைச்சரவையினை மாநில அமைச் சரவையின் பரிந்துரை மற்றும் ஆலோசனையின்றி கலைப்பதற்கு அந்த மாநில ஆளுநருக்கு அதிகாரமில்லை. மாநில அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை ஆளுநர் ஒன்றிய அரசுக்கு அதிகார வழங்கலாக (delegation) அளித்துள்ளார். தமக்கே தொடக்க நிலை அதிகாரம் இல்லை என்ற நிலையில் ஆளுநர் தமக்கு இல்லாத அதிகாரத்தை இன்னொருவருக்கு வழங்க இயலாது என்பதுதான் ஆட்சி அதிகாரக் கோட்பாட்டின் அடிப்படை எனும் வாதத்தினையும் கபில்சிபல் எடுத்து வைத்து வருகிறார்.
இப்படி வாதிடுகையில், மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அவை உறுப்பினரும் உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதியுமான ரஞ்சன் கோகாய் கூறியதை கபில்சிபல் மேற் கோளாக எடுத்துரைத்தார்.
தலைநகர் டில்லி அரசில் பணிபுரியும் ‘ஏ’ குரூப் அரசுப் பணியாளர்கள் மீதான கட்டுப்பாடும் அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இல்லை. ஒன்றிய அரசிற்கு அதன் மூலம் நியமனம் பெற்ற துணை நிலை ஆளுநருக்குமே என்பதான ஒரு சட்ட மசோதா குறித்துப் பேசும்பொழுது மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் “அரசமைப்புச்சட்டத்தின் அடிக்கட்டுமானம் என்பது சந்தேகத்திற்குரிய நீதி பரிபாலனம் ஆகும்” (Basic Structure of the constitution is of doubtful jurisprudence) என்று குறிப்பிட்டதை கபில்சிபல் உச்சநீதிமன்ற வழக்கில் கூறுகிறார்.
அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம் என்பது பற்றி 1973-ஆம் ஆண்டில் 13 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கேசவானந்தா பாரதி வழக்கில் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப் பட்டது. இந்த அரசமைப்புச் சட்டக் கட்டுமானத்தில் மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், நீதித்துறை – சட்டமன்றம் ஆகிய இரண்டும் தனித்தனியாக அதிகாரங்களைப் பெற்றவை என்பது உள்ளிட்ட பல கூறுகள் அடங்கும்.
இந்தக் கட்டுமானம் என்பது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாற்ற முடியாதது என்பதும் அந்தத் தீர்ப்பில் உள்ளது.
மக்களவையில் மேனாள் தலைமை நீதிபதி குறிப்பிட்டதை “உங்களுடன் பணியாற்றியவரான” (Colleague) என்று உச்சநீதிமன்ற அமர்வு வழக்கில் கபில்சிபல் வாதாடினார்.
நீதி பரிபாலனத்தில் உடன்பணிபுரியும் நீதி பதிகளின் கூற்றுக்கு சட்டரீதியான முக்கியத் துவம் உண்டு. அடிப்படையில் மேனாள் தலைமை நீதிபதியைக் குறிப்பிட்டு, அவரது கூற்றுக்கு சட்ட முக்கியத்துவம் உண்டு என்ற பொருளில் கபில்சிபல் வாதிட்டார்.
உடனே உச்சநீதிமன்ற அமர்வின் தலைவரான இந்நாள் தலைமை நீதிபதி, நீதிபதியாக பணி யாற்றும் வரைதான் ஒருவர் உடன் பணியாளர் (Colleague). பணிநிறைவு பெற்ற நிலையில், மேனாள் நீதிபதி கூற்று ஒருவரது அபிப்பிராயம் என்பதாகவே கருதப்படும். இது இன்று நீதிபதியாக இருந்து வருங்காலத்தில் பணிநிறைவு பெற்ற பின்னர் நாங்கள் கூறும் கருத்திற்கும் பொருந்தும். எனவே மேனாள் தலைமை நீதிபதியின் கூற்று நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது எனும் பொருளில்“any reference to a colleague needs to be a ‘sitting colleague’. Once we cease to be judges, whatever we say they are just opinions and not binding”.
‘பழைய நினைப்புத்தான் பேராண்டி’ என்னும் போக்கில் மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உதிர்த்த சொற்களுக்கு விளக்கம் (Interpretation) தந்திருக்கும் இன்றைய தலைமை நீதிபதியின் கூற்று பிற்காலத்தில் முக்கியமான ஒன்றாக மாறும்.
– வீ. குமரேசன்