அதானி போலி நிறுவனத்துடன் ‘செபி’ தலைவருக்குத் தொடர்பு! ஹிண்டன்பர்க் பரபரப்பு புகார்!

3 Min Read

மும்பை, ஆக.11 அதானி நிறுவனத்துக்கும் ‘செபி‘ தலைவருக்கும் இடையேயான உறவை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ளது.
அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனத்தில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத் (செபி) தலைவர் மாதவி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கிய அதானி குழுமம், பலநூறு கோடி ரூபாய் ரகசிய பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டது.

ஹிண்டன்பர்க் நிறுவனம்
வெளியிட்ட அறிக்கை

இந்நிலையில், அம்பானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதவிக்கும், அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று (10.8.2024) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது:
‘கடந்த 18 மாதங்களுக்கு முன்னதாக, கார்ப்ரேட் வரலாற்றின் மிகப்பெரிய மோசடியில் அதானி நிறுவனம் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டிருந்தோம். முக்கியமாக மொரிசீயஸில் இயங்கும் போலி நிறுவனம் பல்லாயிரக்கணக்கில் மோசடி செய்தது குறித்து அம்பலப்படுத்தப்பட்டது. ஆனால், செபி தரப்பில் எவ்வித ஆக்கப் பூர்வ விசாரணையும் நடத்தப்படாமல், எங்களை நேரில் ஆஜராக கோரி ஜூன் 2024 இல் கடிதம் அனுப்பப்பட்டது.

செபியின் தலைவர் மாதவி – அவரது கணவர் தவால் புச்

அதானி குழுமத்தின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படாததற்கு அந்த குழுமத்துடன் மாதவிக்கு தொடர்பு இருக்கலாம் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம். தற்போது, மொரிசீயஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மோசடியில் ஈடுபட்ட போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதவியும், அவரது கணவர் தவால் புச்சும் பங்குகள் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனத்தில், மாதவி மற்றும் தவால் புச் பெயரில் கடந்த 2015 ஜூன் 5ஆம் தேதி பங்குகள் பெறக்கூடிய அய்பிஇ பிளஸ் ஃபண்ட் 1 (IPE Plus
Fund 1) 2 கணக்கை தொடங்கியுள்ளனர்.

கடிதம்மூலம் கோரிக்கை!

இந்த கணக்கின் முதலீட்டுக்கு தங்களின் ஊதியத்தைப் பயன்படுத்து வதாகவும், நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு செபியின் முழுநேர உறுப்பினராக மாதவி பொறுப்பேற்ற நிலையில், 2018 பிப்ரவரி 26ஆம் தேதி வெளியான ஒரு கடிதத்தில், இவர்கள் பங்கின் மதிப்பு 8.72 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2018 பிப்ரவரி 25ஆம் தேதி தங்களின் பங்குகளை விற்பனை செய்யும்படி நிறுவனத்துக்கு தவால் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.’
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தவால் புச், ‘எங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டை மறுக்கிறோம், எந்த உண்மையும் இல்லை. எங்களின் நிதி சார்ந்த விடயங்கள் வெளிப்படைத் தன்மையுடனே உள்ளது. இதுகுறித்து முழு விளக்கத்தை அளிப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளாக
விசாரணை!

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியதை அடுத்து, உச்சநீதி மன்ற உத்தரவின்பேரில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்ட செபி, அதானி குழுமம் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜ ராகி ஹிண்டன்பர்க் நிறுவனத்தை விளக்கம் அளிக்கக் கோரி செபி அழைப்பாணை அனுப்பியிருந்த நிலை யில், செபி தலைவரின் பங்குகள் குறித்து ஹிண்டன்பர்க் புதிய அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி யுள்ளது. ஏற்கெனவே கடந்தாண்டு ஹிண்டன்பர்க்கின் அறிக்கையை தொடர்ந்து, அதானி நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்த நிலை யில், நாளை (12.8.2024) பங்குச்சந்தை தொடங்கியவுடன் மீண்டும் அதானி குழு மத்தின் பங்குகள் சரிவை காணும் என்று முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *