இம்பால், ஆக.10- மணிப்பூரில் 3 இடங்களில் துப்பாக்கி சண்டை நடந்தது. ஓரிடத்தில் நடந்த சண்டையில் 4 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர்.
மணிப்பூரில் ஒரு ஆண்டுக்கும் மேலாக வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. காக்சிங் மாவட்டத்தில் நேற்று (9.8.2024) 2 ஆயுதம் தாங்கிய கும்பலுக்கு இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இது குறித்து முதலமைச்சர் பைரேன் சிங் கூறியதாவது:-
“2 ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்கள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டன. அவர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதையடுத்து அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அதேபோல நேற்று முன்தினம் (8.8.2024), பிஷ்ணுபூர் மாவட்டத்தில் சி.ஆர். பி.எப். ஆயுதப்படை பிரிவினர் முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி ஏந்திய சிலர், அவர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். 30 நிமிடங்கள் துப்பாக்கி சண்டை நடந்தபோதும் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல டெங்நாவ்பல் மாவட்டம் மோல்நாம் என்ற இடத்தில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று (9.8.2024) மோதல் ஏற்பட்டது. அப்போது 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்த காயங்கள் இருந்தன. அவர்கள் ராணுவ உடை அணிந்த குகி பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
குகி பயங்கரவாத குழு தலைவர் ஒருவரின் வீடும், வேறொரு குகி குழுவினரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர்
முடித்து வைக்கப்பட்டது
புதுடில்லி, ஆக.10- நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்டு 12ஆம் தேதி முடிவடைய இருந்தது. ஆனால் ஒருநாள் முன்னதாக நேற்றே மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறுகையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் செயல்தி றன் 130 சதவீதமாக உள்ளது. சபை அலுவல்கள் 15 நாட்களில் 115 மணி நேரம் நடந்தன. பட்ஜெட் மீது 27 மணி 19 நிமிட நேரம் விவாதம் நடந்தது. விவா தத்தில் 181 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 400 பிரச் சினைகள் எழுப்பப்பட்டன. 86 நட்சத்திர கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. 12 அரசு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், நிதி மசோதா, நிதி ஒதுக்கல் மசோதா, ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கல் மசோதா, விமான மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு நன்றி என்றார்.
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், “மாநி லங்களவை 90 மணி நேரம் நடந்தது. பட்ஜெட் மீது 22 மணி நேரம் விவாதம் நடந்தது” என்று கூறினார்.
கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேனீர் விருந்தில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒருவரை ஒருவர் வரவேற்று உபசரித்தனர். இதில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், கிரண் ரிஜிஜூ, முருகன் மற்றும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, மதிமுக மாநிலங்களவை உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர் சித்தது குறிப்பிடத்தக்கது.