புதுடில்லி, ஆக.10- எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நாடா ளுமன்றத்துக்குள் சந்திக்க தமிழ்நாடு மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராகுல் காந்தி, வரவேற்புக்கூடத்துக்கு சென்று அவர்களை சந்தித்தார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை ஒன்றிய அரசின் கவனத்துக்கு தமிழ்நாடு மீனவ சங்க பிரதிநிதிகள் கொண்டு சென் றிருக்கிறார்கள். பா.ஜனதா மற்றும் தி.மு.க. உதவியுடன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில், மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் டில்லிக்கு வந்தனர். டில்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள 178 படகுகள் மற்றும் 93 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பங்கேற்று பேசினார்கள்.
ராகுல்காந்தி சந்தித்தார்
இதனைத்தொடர்ந்து அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்திப்பதற்காக நாடாளுமன்றம் சென்றனர்.
சந்திப் புக்கான நேரத்தை ராகுல்காந்தி ஏற்கெனவே வழங்கியிருந்தார். அதன்படி நாடாளுமன்ற வர வேற்புக்கூடத்தில் அவர்கள் காத்திருந்தனர். அதனைத் தாண்டி அவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை.
இதனால் ராகுல்காந்தி, தான் வழக்கமாக வெளியேறும் மதுரவாயிலில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரம் வரவேற்புக் கூடத்துக்கு நடந்து சென்று மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்தார். அவர்களின் கோரிக்கையை கவனமுடன் கேட்டு, அதை நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதி அளித்தார். மீனவர்களுடனான ராகுல் காந்தி சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
சந்திப்பது எனது வேலை
சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த ராகுல்காந்தி செய்தியாளர்களி டம் பேசுகையில், “யாரையும் சந்திப்பது நமது உரிமை. ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை. இதற்கு முன்பு விவசாயிகளைப் பற்றி நான் சொன்னபோது அவர்களைத் தடுக்கவில்லை என்று சபாநாயகர் சபையில் கூறினார்.
ஆனால், தற்போது மீனவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இது இலங்கையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினை. அதைப்போல குழந்தைகள் நல அமைப்பினரும் என்னை சந்தித்தனர். இதுபோன்ற மக்களை சந்திப்பது எனது வேலை. நான் அதை தொடர்ந்து செய்வேன்” என்று கூறினார்.