ஆகஸ்ட் 4 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடுத்தகட்ட பணியாக தோழர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அவை மூட நம்பிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100 பொதுக்கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று. இந்த அறைகூவலுக்கு காரணம், மூடநம்பிக்கைகள் மக்களிடையே இன்றளவும் எந்தளவிற்கு உள்ளது என்பதால் தான்.
இதற்கு உதாரணம் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். வேறு மாநிலத்தில் நடந்திருந்தாலும், பெரும்பாலும் இங்கே இதே நிலை தான்.
அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய் என்பது போல
உத்தரப் பிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டம் சவுரா கிராமத்தை சேர்ந்த விகாஸ் துபே என்பவர் தன்னை தொடர்ந்து சனிக்கிழமை தோறும் பாம்பு கடிப்பதாகவும், இது வரை ஏழு முறை கடித்துள்ளது என்றும்,ஒன்பதாவது முறை உன்னை நான் கடிக்கும் போது உனக்கு மரணம் நிச்சயம் என்று பாம்பு கனவில் வந்து சொன்னதாக சொல்லி, என்னை பலி வாங்க துடிக்கும் பாம்பிடமிருந்து காக்கு மாறு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு ஊரையே கதிகலங்க செய்துள்ளான்.
இவரது செயலை பார்த்தும் பழிவாங்க துடிக்கும் பாம்பை நினைத்தும் அந்த ஊர் மக்கள் அனைவரும் பதற்றத்தில், பயத்தில் இருந்த சூழ்நிலையில், அங்கு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் தமிழ்நாட்டை சார்ந்த இந்துமதி அய்.ஏ.எஸ். அவர்கள். அவர் உடனே விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். இரண்டு மருத்துவர் கொண்ட மருத்துவக் குழு அவருக்கு பாதுகாப்பிற்கு ஏற்பாடும் செய்துள்ளார்.
சுகாதார துறை சார்ந்த மருத்துவ குழு, காவல் துறை தனது தொடர் விசாராணையில் ஜூன் 2 .2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரை பாம்பு கடித்தது உண்மை. கடித்த பாம்பை அடித்துக் கொன்று விட்டார்கள். அருகில் இருந்த பொது மக்களும் அதை உறுதி செய்துள்ளார்கள். பாம்பு கடித்த நாள் ஞாயிற்றுக்கிழமை, அன்று அவர் மருத்துவ மனைக்கு சென்று விஷ முறிவு சிகிச்சை பெறும் திரும்பியுள்ளார் என்பனவையெல்லாம் உண்மை.
அதைத் தொடர்ந்து அடுத்த அடுத்த சனிக்கிழமை தோறும் இதே போன்று பாம்பு கடித்து விட்டதாக மருத்துவமனைக்கு சென்றதும் உண்மை, மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததும் உண்மை. ஆனால் பாம்பு கடித்து தான் அவர் சிகிச்சைக்கு சென்றாரா என்றால்? அது உண்மை இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவர் பாம்பு கடித்தாக உடலில் காட்டிய பகுதிகளை ஆய்வு செய்ததிலிருந்தும், அவரிடம் பேசியலிருந்தும், இவர் சொல்வது அனைத்தும் கற்பனை என்று தெரிய வந்தது.
பாம்பு கடித்து நாளிலிருந்து, பாம்பு கடிப்பது போன்ற கனவுகள் படுத்துறங்கும் போது அவருக்கு வந்திருக்கிறது. அந்த கனவில் பாம்பு துரத்துவது போன்றும், பயமுறுத்துவது போன்றும் ,உன்னை பழி வாங்காமல் நான் விட மாட்டேன் என்றும் , சரியாக ஒன்பதாவது வாரத்தில் நான் உன்னைக் கடிக்கும் போது உனக்கு மரணம் நிச்சயம் என்பன போன்ற கனவுகள் அனைத்தும் உண்மையாக நடக்கும் என்று ஆழ்மனம் என்று சொல்லும் மூளையில் பதிந்ததின் விளைவாக பாம்பு பயம் (Snake phobia) என்ற மன அழுத்த நோயால் அவர் ஆட்பட்டுள்ளார் என்பது தெரிய வருகிறது.
அந்நோயினால் வந்த பிரச்சினைதான் இவை அனைத்தும். அவரை பாம்பு கடித்த நாள் ஞாயிற்றுக் கிழமை, அதற்கு முன் நாளிலே,அடிப்பட்ட பாம்பின் இணை தன்னை பழிவாங்கும் என்று காலம் காலமாக நம்பிக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கையின் விளை வாக, பயம் காரணமாக பாம்பு கடித்த நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக சனிக்கிழமை தோறும் பாம்பு கடித்த நேரத்தில் வந்து கடிக்கும் என்று அவருக்கு அவராகவே கற்பிதம் செய்து கொண்டு அதையொட்டியே சிந்தனை ஓட்டம், கற்பனை , கனவு இதன் விளைவாக ஏற்பட்ட பயம் தான் இவருடைய இத்தகைய நடவடிக்கைகள் என்று விசாரணையில் தெரிய வந்தது.
இறுதியாக மருத்துவக் குழு அவரை மனநல மருத் துவமனையில் அனுமதித்துள்ளது. பொதுமக்களி டமும் பாம்பு பழிவாங்கும் என்ற பயத்தையும், பாம்பு பற்றிய உண்மைகளையும் விளக்கி புரிய வைத்துள் ளார்கள்.
நல்ல வேளை இந்த பிரச்சினை தமிழ்நாட்டை சார்ந்த ஆட்சியரிடம் சென்றது அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ பெரியார் பூமியின் பகுத்தறிவு மண் வாசனையை நுகர்ந்திருப்பார். அதனால் தான் இந்த அறிவியல் விசாரணை நடந்துள்ளது. இல்லையென்றால் சிறிது காலத்தில் பாம்பு கடி வாங்கிய விகாஸ் துபே மிகப்பெரிய நாக சாமியாராக அங்கே உருமாறி இருந் தாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் இருப்பது இராமரும், கிருஷ்ணரும் பிறந்ததாக நம்பி அவ்விடத்தில் கோயில் கட்டி வணங்கும் உத்தரப்பிரதேசத்தில்.
அதே போன்று இங்கேயும் பாம்பு பற்றிய கற்பிதங்கள் என்ன தான் நாம் விளங்கினாலும், கடவுள், பேய்களை போன்றே மக்கள் மனதில் மூட நம்பிக்கைகள் ஆழமாக பதிந்து தொடரத் தான் செய்கிறது.
சென்னை கிண்டி பாம்பு பண்ணையை ஆரம்பித்து ரோமுலஸ் விட்டேகர் எழுதிய புத்தகம் இந்திய பாம் புகள். நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவின் வெளியீடு அதில் பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகள் குறித்து எழுதியிருக்கிறார்.
அதில் மக்கள் மனதில் உள்ள பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கைகள் குறித்து சில..
பாம்பு மரகதக் கல்லினை கக்கும்
1.பாம்பை பிடிக்கும் தொழிலை செய்யும் இருளர்கள் நமக்குத் தெரியும். பாம்பு தலையில் நாகமணி இருக்கிறது என்ற கூற்றுக்கு இருளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?அப்படி இருந்தால் நாங்கள் பாம்பு பிடித்து பிழைக்கும் ஏழைகளாக இருக்க மாட்டோம் குபேரர்களாக இருப்போம் என்கிறார்கள்.
2. நீங்கள் ஒரு பாம்பை கொன்றுவிட்டால் அதன் ஜோடி பாம்பு உங்களை தேடிப்பிடித்து பழிவாங்கும் உண்மை யாதெனில் பாம்பை கொல்லும்போது அதன் ஆசனவாயில் இருந்து மஸ்க் சுரப்பி மூலம் திரவம் வெளியாகிறது இதன் வாசனையால் மற்ற பாம்பு கவரப்பட்டு அருகில் வந்து மோப்பம் பிடிக்கும். சாதாரணமாக இத்தகைய வாசனைப் பொருள் இனச்சேர்க்கைக்கு உதவும்
3. பாம்பு புற்றுகளை வணங்குவது, பால் ஊற்றுவது போன்றவைகள் எல்லாம் நம் மக்களின் அறியாமை எந்தளவுக்கு உள்ளது என்பதை காட்டுகிறது என்கிறார்.
பாம்பு பால் குடிக்குமா? இயற்கையில் பாம்புகளுக்கு பால் எங்கிருந்து கிடைக்கும் ?உறிஞ்ச உறுப்புகள் இன்றி தனது பற்களால் பாலை எவ்வாறு உறிஞ்சும்? ஓரிரு தேக்கரண்டி பால் இதற்கு எவ்வாறு வலு அளிக்கும்?
பாம்புகள் புற்றுகளைக் கட்டுவதுமில்லை; அதில் நிரந்தரமாக வாழ்வதும் இல்லை. பின்பு எதற்காக பாம்புகள் புற்றுக்குள் நுழைந்து வெளியில் வருகின்றன என்ற கேள்வி எழலாம்.
புற்றுகள் கறையான்களால் உருவாக்கப்படுபவை. கறையான்கள் கோடிக்கணக்கான முட்டைகளையிட்டு, தன் இனத்தைப் பெருக்கும் இயல்புடையவை. தாய்க் கறையான் இந்தப் புற்றுகளில் தனியான ஓரிடத்தில் இருக்கும். அது, கொழு கொழுவென்று வளர்ந்து பார்ப்பதற்கு மிகப் பெரிதாக இருக்கும்.பாம்புக்கு மிகப் பிடித்தமான உணவுகளுள் ஒன்றே இந்தத் தாய்க் கறையான். அதனை உண்பதற்காவே பாம்பு புற்றுக்குள் சென்று வருகிறது. கறையான் புற்றைத்தான் பாம்புப் புற்று என்று தவறாக எண்ணிக் கொண்டு, அதற்குள் பாலையும் ஊற்றி பூஜை செய்து வருகின்றனர் அறியாத நம் மக்கள்.
4.. இசைக்கு ஏற்ப பாம்புகள் நடனம் புரியும் என்கிறார்கள் காற்றில் மிதந்து வரும் ஒலி அலைகளை பாம்புகள் உணர வல்லவை என சமீப காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இவை இசையை ரசிக்க வல்லவை என்பதற்கு ஆதாரம் இல்லை .சொல்லப்போனால் செயற்கை அதிர்வுகளை இவை விரும்புவதில்லை.பாம்பாட்டியின் மகுடி இசையை வேடிக்கை பார்ப்பவர்கள் ரசிப்பதற்கு மட்டுமே. மேலும் பாம்புக்கு காது கிடையாது.
5..சிலர் பாம்புகளுக்கு மீசை இருப்பதாகவும் சேவல் போன்ற கொண்டை இருப்பதாகவும் கூறுகிறார்கள் இது பாம்பாட்டி கட்டிவிடும் கதைகளை போன்றது இவர்கள் பாம்பு தோல் உரிக்கும் போது பார்த்திருக்கக்கூடும் இது தாடைகளில் இருந்து மேல்புறமாக தோலு ரிக்கும்போது இந்த அபூர்வ காட்சியை கண்டு இருக்கக்கூடும்
6. கண்கொத்திப் பாம்பு கண்ணைக் குத்தும் என்றும் நெற்றியில் தீண்டும் என்றும் சொல்கிறார்கள் ஆனால் நஞ்சற்ற இந்த பாம்பின் கூறிய மூக்கு மிருதுவாகவும் ரப்பர் போன்றும் இருக்கும் – கண்கொத்திப் பாம்பு விரல் அல்லது மூக்கில் கொத்தி கடிபட்டவருக்கு தீவிர வலி உண்டாகுமே தவிர அது யாரையும் கண்ணில் கொத்தியதாக சரித்திரம் இல்லை
7. உழவன் பாம்பு தீண்டினால் தொழுநோய் உண்டாகும் என்பது மற்றொரு கதை இப்பாம்புகளின் உடல் அமைப்பு தொழு நோய்ப்புண் போன்று திட்டுத்திட்டாக இருப்பதால் இந்தக் கதை கட்டப்பட்டிருக்கலாம் உண்மையில் பாம்புகள் பெரும்பாலும் நோயற்ற வாழ்வு வாழ்பவை.
8..தென்னிந்தியாவில் கொம்பேறி மூக்கன் பற்றிய கற்பிதம். அது ஒருவரை தீண்டிய பின் மரத்தின் மீதேறி தீண்டியவனின் பிணம் எரிகிறதா? என்றும் பார்க்குமாம். இதுவும் ஒரு கட்டுக்கதை. (இந்த கட்டுக்கதை யை வைத்து கொம்பேறிமூக்கன் என்று திரைப்படமே எடுத்துள்ளார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் மூட நம்பிக்கை எந்தளவுக்கு ஆழமாக பரவியுள்ளது என்பதை)
9.சாரைப் பாம்புகள் பற்றிய கட்டுக்கதைகள் அதிகம். இவற்றுக்கு வாலில் கொட்டும் கொடுக்கு இருப்பதாகவும் பசுக்களை கொட்டும் என்றும் நெற்பயிரை சாய்த்து விடும் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள் இதன் வால் ஒரு கயிறு போன்று அமைந்துள்ளது என்பதே உண்மை
10..வளையம் போன்ற உடலமைப்புக் கொண்ட பாம்பு தீண்டினால் கடிபட்டவன் உடம்பெல்லாம் கட்டுகள் தோன்றும் என்பதும் கற்பனையே
11.இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் மனிதன் தூங்கும்போது கட்டு விரியன் அவன் மூச்சை அடக்கி விடும் என்று நம்புகிறார்கள்.பண்ணை வேலையாள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கட்டு விரியன் கடித்தால் ஏற்படும் மூச்சுஇழப்பிற்கு இப்படி ஒரு கட்டுக்கதை
12. மகாராட்டிரத்தில் சுருட்டை விரியன்கள் 6 அடி வரை எழும்புமாம். இவை ஆறு இன்ச் (அரை அடி உயரம்)தான் எழும்ப வல்லவை என்பது உண்மை
13.மேற்கு கரையோரப் பகுதிகளில் ஒருவருக்கு தோட்டத்தில் நாகப்பாம்பு இருந்தால் நல்வாய்ப்பு என்று நம்பப்படுகிறது கேரளாவில் பல இந்துக்கள் வீடுகளில் பாம்புக்கு கோயில் கட்டி குலதெய்வமாக வழிபடுகின்றனர்
14.நாகப்பாம்புகள் சாரைப் பாம்புகளுடன் இனச் சேர்க்கை புரியும் என்று கூறுகிறார்கள் உண்மையில் நாகப்பாம்புகள் தமது வகையைச் சார்ந்த பாம்புகளுடன் மட்டுமே இனச்சேர்க்கை புரியும். இவை தன்னினம் உண்ணும் பெரிய சாரை பாம்புகளுடன் இனச்சேர்க்கை செய்யாது
15.பாம்புக்கடிக்கு பலவித நாட்டு முறை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன மந்திரம் ஓதுதல், பச்சிலை வைத்தியம், தொலைபேசி சிகிச்சை என பல முறைகள் உள்ளன .இந்தியாவில் உள்ள ஒரு நம்பகமான சிகிச்சை நஞ்சு முறிவு மருந்து ஒன்று தான். மற்ற சிகிச்சைகள் யாவும் பயத்தை போக்கவும் அதிர்ச்சியில் இருந்து மீளவும் பயன்படுமேயன்றி நஞ்சுமுறி மருந்துக்கு மாற்றாக கொள்ளலாகாது
16. இருதலை மணியனுக்கு வால் மொட்டையாக இருக்கும். எனவே இதற்கு இரு தலைகள் உள்ளன என்று கதை சொல்லப்படுகிறது. இந்த மொட்டை வாலினை வெளிக்காட்டி தலையை மறைத்து கீரி போன்ற விலங்கு களை ஏமாற்றுவது போன்று மனிதர்களையும் இது ஏமாற்றும். சில மூட நம்பிக்கைகள் தான். இவை இேத போல இன்னும் எத்தனையோ உள்ளன.
கடவுள், பேய் போன்று பாம்பை வைத்து
எத்தனை திரைப்படங்கள்
பயம் மனிதனை எத்தகைய நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு உதாரணமே உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்வு.
உத்தரப் பிரதேசம் 100 விழுக்காடு மூட நம்பிக்கைக்கு உத்தரவாதம் உள்ள பிரதேசமாக மாறிவருகிறதோ என்று தோன்றுகிறது. இப்படி தோன்ற காரணம் ஏதோ நமது கற்பிதம் அல்ல, அங்கே நடக்கும் நிகழ்வுகள். அங்கே இருக்கும் பல நூறு கார்ப்பரேட் சாமியார்கள், நிர்வாண சாமியார்கள் அவர்கள் நடத்தும் ஆசிரமங்கள் என்று ஏராளம்.
சமீபத்தில் ஒரு சாமியார் காலடி மண்ணை எடுப்பதற்காக முண்டி அடித்து சென்று இறந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், காசியில் மூழ்கினால் நோய்கள் தீருமென்று நோயுற்ற குழந்தைகள் பல பேர் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்த பரிதாபங்கள், காசிக்கு சென்று மரணித்தால் புண்ணியம் என்று வயது மூத்தவர்களை அங்கே விட்டு விட்டு மரணிக்க செய்வது என்று இப்படி, பக்தியின் பேரில் காசியில் அரங்கேறும் அவலங்கள், மரணங்கள் ஏராளம்.
அங்கே தந்தை பெரியார் போன்று, திராவிடர் கழகம் போன்று அறிவியல் சார்ந்த, பகுத்தறிவு சார்ந்த இயக்கங்களின் பிராச்சாராங்கள் இல்லாத காரணத்தாலும், சாமியார்கள் சொல்லுவது தான் அனைத்தும் உண்மை என்று அவர்கள் சொல்லும் பொய்களை கேட்பதின் மூலமும், மூட நம்பிக்கைகளை பின்பற்றுவதின் மூலமும் வரும் விளைவுகள் இவைகள்.
இந்த மூட நம்பிக்கைகளை நம்பிக் கொண்டிருக்கும் மக்களிடம் மேலும் மூட நம்பிக்கைகளை பரப்பி அவர்கள் ஓட்டுகளை அறுவடை செய்து அரசியல் ஆதாயம் அடையும் பா.ஜ.க.
நானே கடவுள், நான் பரமாத்மாவின் பிள்ளை என்று மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பிரதமர்.
இந்த மூட நம்பிக்கையாளர்களுக்கு தற்போது தான் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலிருந்து மக்கள் விழித்துக் கொண்டு பகுத்தறியும் பாதைக்கு திரும்பினால் அவர்களுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது.
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் தற்போது வட மாநிலங்கள் பக்கம் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. மேலும் அது பரவும் பட்சத்தில் பகுத்தறிவு சிந்தனைகள் உருவாகும், மூடநம்பிக்கைகள் ஒழியும். மூட நம்பிக்கையுள்ள பிரதமர்களின் வருகை குறையும். நாட்டில் மூட நம்பிக்கை இறப்புகள் குறையும்.
ஆசிரியர் ஆணையை ஏற்போம்!
படம் எடுத்து ஆடும் மூட நம்பிக்கைகளை தந்தை பெரியாரின் பகுத்தறிவு தடி கொண்டு அடித்து சாய்ப்போம்.
– பெ. கலைவாணன்
மாவட்டச் செயலாளர், திருப்பத்தூர்
இந்த மூட நம்பிக்கையாளர்களுக்கு தற்போது தான் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலிருந்து மக்கள் விழித்துக் கொண்டு பகுத்தறியும் பாதைக்கு திரும்பினால் அவர்களுக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது. தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் தற்போது வட மாநிலங்கள் பக்கம் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. மேலும் அது பரவும் பட்சத்தில் பகுத்தறிவு சிந்தனைகள் உருவாகும், மூடநம்பிக்கைகள் ஒழியும். மூட நம்பிக்கையுள்ள பிரதமர்களின் வருகை குறையும். நாட்டில் மூட நம்பிக்கை இறப்புகள் குறையும்.