பீகார் பிஜேபி கூட்டணி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கின் லட்சணம் இதுதான் ரூபாய் 850 கோடி மதிப்புள்ள கதிரியக்க ரசாயனம் சோதனையில் சிக்கியது

viduthalai
3 Min Read

பாட்னா, ஆக. 10- அணு குண்டுகளை தயாரிக்க பயன்படும் கதிரியக்க செயற்கை ரசாயன தனிமமான கலிபோர்னியம், பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.850 கோடி ஆகும். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் குசாய்கட் நகருக்கு அருகே உள்ள பல்தேரியில் மாநில காவல் துறையின் சோதனை சாவடி அமைந்துள்ளது. இங்கு காவல்துறையினர் கடந்த 8ஆம் தேதி வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3பேரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் ஒரு குடுவையை மறைத்து வைத் திருப்பதும், அதில் சற்று பள பளப்பு தன்மையுடன் கருங்கல் போன்ற பொருள் ஒன்று இருப்பதும் தெரியவந்தது. பின்னர், ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பொருள், கலிபோர்னியம் என்று தெரியவந்தது. இது, அணுகுண்டு தயாரிக்க பயன்படும் கதிரியக்க செயற்கை ரசாயன தனிமம் என்பதால் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோபால்கஞ்ச் காவல் துறை கண்காணிப்பாளர் சுவார்ன் பிரபாத்கூறியதாவது: பல்தேரி சோதனைச் சாவ டியில், சிறப்புஅதிரடி படையினர், டிஜிட்டல் நுண்ணறிவுபிரிவினர், உள்ளூர் காவலர்கள் இணைந்துகடந்த 8ஆம் தேதி வாகன சோதனை நடத்தினோம். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 50 கிராம் கலிபோர்னியம் பறிமுதல் செய்யப்பட்டது. பன்னாட்டு சந்தையில் இதன் ஒரு கிராம் மதிப்பு ரூ.17 கோடி. அந்த வகையில் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள 50 கிராம் கலிபோர்னியம் விலை ரூ.850 கோடி ஆகும்.

மூளை புற்றுநோய் உள்ளிட்ட கொடியநோய்களுக்கு கதிரியக்க கலிபோர்னியம் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். அணுஉலைகளில் இதை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதேநேரம், இதை பயன்படுத்தி அணுகுண்டும் தயாரிக்க முடியும்.

பறிமுதல் செய்யப்பட்ட கலிபோர்னியம், சென்னை அய்அய்டியில் உள்ள சோதனைக் கூடத்துக்கும், புதுச் சேரியில் உள்ள அணுசக்தி நிறுவனத்துக்கும் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சோதனைகளில், பிடிபட்டது கதிரியக்க கலிபோர்னியம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உத்தரப்பிரதேசம் குஷிநகரை சேர்ந்த சோட்டிலால் பிரசாத் என்பவர் முதன்மை குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இணையதளம் மூலமாக கலிபோர்னியத்தை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். கைதாகியுள்ள மற்ற இருவர், பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த சந்தன் குப்தா, சந்தன் ராம் என தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பீகார் காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது பீகாரில் கலிபோர்னியம் பிடிபட்டுள்ளது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சோட்டிலால் பிரசாத், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். எனவே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிடிபட்டகலிபோர்னியம் தொடர்பான வழக்கு விவரங் களை உத்தர பிரதேச காவல்துறையினரிடம் கேட்டுள்ளோம். கலிபோர்னியத்தை தனிநபர்களால் வாங்கவோ, விற்கவோ முடியாது. இது கடத்தல்காரர்களுக்கு எப்படி கிடைத்தது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய புலனாய்வு அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, குஜராத்தில் இருந்து வந்ததா?

பறிமுதல் செய்யப்பட்ட கலிபோர்னியம், புதுச்சேரி அல்லது குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். கடத்தல்காரர்களிடம் சென்னை அய்அய்டியின் சான்று இருந்தது. இதுதொடர்பாக சென்னை அய்அய்டி பேராசிரியர் மோகனை தொடர்பு கொண்டு பேசினோம். அந்த சான்று போலியானது என்று அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *