ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி 1: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் – தகுதி நீக்கம் (dis-qualified) என்பது ஆரம்பத்திலிருந்தே ஒன்றிய அரசின் சதி என்று சொல்லப்படுகிறதே?

– கா.மாமல்லன், கல்பாக்கம்

பதில் 1: அப்படி இருந்தால் – (இருக்கக் கூடாது என்று நம்பும் நிலையில்) அது அதிசயமாகவோ, அதிர்ச்சிக்குரியதாகவோ இருக்காது – பழைய நடப்புகளை மறக்காதவர்களுக்கு.

– – – – –

கேள்வி 2: வடிகால்கள் அமைத்தும் நகரங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படக் காரணம் என்ன?

– ச.செந்தில்குமரன், தருமபுரி

பதில் 2: வீடுகள் – பல இடங்களில் ஏரிகளை வீடுகட்டும் திட்டங்களுக்குரியதாக்கியது அடிப்படைத் தவறு. அவ்வாறு அனுமதிக்கப் பட்டதாலேயே வெள்ளப் பாதிப்பு இருக்கலாம்!

– – – – –

கேள்வி 3: வங்க தேசத்தில் நடந்த வன்முறைகளுக்கு சீன – பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் பின்னணியில் இருந்தன என்பது சரியா?

– அ.கி.வெங்கட்டராசு, சென்னை-12

பதில் 3: அப்படி இருந்தால் அதை வெளியே கொண்டு வந்து நம் மக்களுக்கு உரிய வகையில் தெளிவுபடுத்தி, உலக அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய கடமை – யாருடையது? சொல்லுங்கள்!

– – – – –

கேள்வி 4: “பட்டாம்பூச்சி பூங்கா” (கோவை – வெள்ளலூர்) போன்று தெருவில் அலைந்து திரிகின்ற நாய், பூனைகளுக்கு புகலிடங்கள் அமைப்பதற்குத் தமிழ்நாடு அரசாங்கம் முனையலாம் அல்லவா?

– இரா.ரவி, எண்ணூர்

பதில் 4: நல்ல யோசனை! பட்டிகளை நிரந்தரமாக அமைத்து உள்ளே தனியாக வைப்பது நல்லதுதானே!

– – – – –

கேள்வி 5: தமிழ்நாட்டில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு 7 மாதங்கள் முடிவடைந்த பின்பும் ஒன்றிய பிஜேபி அரசு இதுவரை இழப்பீடு வழங்க மறுப்பது ஏன்?

– மா.மதிவாணன், மதுரை

பதில் 5: உள்ளம் இருக்க வேண்டியவர்களுக்கு அங்கே பள்ளமும் கள்ளமும் அல்லவா இருக்கின்றது! என் செய்ய!! கூட்டுறவுக் கூட்டாட்சியா இது?

– – – – –

கேள்வி 6: இந்தியா முழுமைக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய பா.ஜ.க அரசு மறுப்பதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக கருதலாமா?

– க.வெண்ணிலவன், கன்னியாகுமரி

பதில் 6: உங்கள் யூகம் சரியானதாக இருக்கலாம்!

– – – – –

கேள்வி 7: தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது தொழிற் கருவிகளையும் பாதுகாக்க ஒன்றிய பிஜேபி அரசு எந்தவிதமான முன்னெடுப்பையும் செய்யத் தயங்குவது ஏன்?

– வெ.செங்குட்டுவன், திண்டிவனம்

பதில் 7: காரணம், அது சூத்திரர்கள், பஞ்சமர்கள் தொழில். ‘நமோ’. சூத்திரர்களான பெண்கள் ஈடுபடும் ஒரு தொழில். அக்கிரகாரவாசிகளின் தொழில் அல்லவே! பிறகு எப்படி கவலை வரும்?

– – – – –

கேள்வி 8: ஜப்பானைப் போன்று இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாக்க நம்மால் முடியாதா?

– கல.சங்கத்தமிழன், காஞ்சி

பதில் 8: ஜப்பானைப் போல கட்டுப்பாடு, ஒழுக்கம், பொதுநல உணர்வு பரவிடும் பண்பாடு நம் மக்களிடமோ, அரசுகளிடமோ இல்லையே! அந்தக் குறை நீக்கப்பட்டு பொது ஒழுக்கம் வளர்ந்து சீர்கேடுகளை சரி செய்தாக வேண்டும்!

– – – – –

கேள்வி 9: நாள்தோறும் நடக்கும் சாலை விபத்துகளை ஊடகங்களில் பார்த்தாலும், பாமர மக்கள் பக்தி, பாதயாத்திரை என்ற பெயரில் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனரே? பகுத்தறிவு எங்கே?

– கி.மாசிலாமணி, மதுராந்தகம்

பதில் 9: பகுத்தறிவுப் பிரச்சாரம் தீவிரமானால் விழிப்புணர்வு பெருகும்! முன்பு சென்று சாமான்கள் வாங்கிய கடையில் பொருள்கள் சரியில்லை என்றால், புறக்கணிக்கும் அறிவு, “பக்தியில், கோவில், திருவிழா, பலிகள், தேர்கள் குடை சாய்வது, வேண்டுதலுக்கு சென்றவர் விபத்தில் பலி” போன்றவற்றில் இல்லையே!

“கருணையே வடிவான கடவுள், சர்வசக்தி கடவுள்” என்பதெல்லாம் புரட்டு என்று புத்தி வருவதில்லையே!
தந்தை பெரியார் சொன்னாரே, “பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்” என்ற தத்துவ மொழியை நினையுங்கள். விடை கிடைக்கும்!

– – – – –

கேள்வி 10: எதிர்க்கட்சிகளாக இருந்தால் ஊழல் என்று சொல்லி பாயும் ஏவுகணைகள், அதே கட்சி ஆர்.எஸ்.எஸ். காவி மயத்தில் கலந்தால் – அவை பாய்வதில்லையே? தூய்மை அடைந்துவிடுகிறதா?

– ச.மாயவன், ஆலந்தூர்

பதில் 10: ஒரு குடம் “புனித கங்கா ஜலம்” வாராணாசி தொகுதியிலிருந்து கொண்டு வந்து தயார் நிலையில் அவர்களிடம் ‘ரெடிமேட்’டாக உள்ளதே! பின்னர் தானே ‘ஊழல்’ புனிதமாகி விடாதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *