பாரீஸ், ஆக.9 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கு பெறும் முன்னரே வினேஷ் போகத்திற்கு மோடி அரசு நெருக்கடி அளித்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 12 அன்று வினேஷ் போகத் பதிவிட்ட டுவிட்டர் எக்ஸ் பதிவில்,
“ஏப்ரல் மாதம் 19 அன்று ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்போகின்றன. கடந்த ஒரு மாத காலமாக நான் சாய் (SAI), டாப்ஸ் (TOPS) உள்பட இந்திய அரசாங்கத்துக்கு எனது பயிற்சியாளர் மற்றும் மருத்துவருக்கு அங்கீகாரம் தந்து அனுமதி அளிக்குமாறு வற்புறுத்தி வரு கிறேன். இந்த அங்கீகாரம் இல்லாமல் அவர்கள் என்னுடன் போட்டியில் இருக்க இயலாது. தொடர்ந்து வற்புறுத்தி யும் எனக்கு எவ்வித பொருத்தமான பதிலும் கிடைக்கவில்லை. எவரும் பதிலளிக்க முன்வரவில்லை. யாரும் உதவிடத் தயாராக இல்லை. எதிர்கால விளையாட்டு
வீரர்கள் இப்படித் தான் நடத்தப்படுவார்களா?
பிரிஜ் பூஷணும் அவரது உதவி யாளர் சஞ்சய் சிங்கும் நான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கின்றனர். இதுவரை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் பிரிஜ் பூஷணுக்கு வேண்டப்பட்டவர்கள்தான்! எனவே அவர்கள் போட்டிக்கு முன்பு எனது குடிநீரில் ஏதாவது கலந்து கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஒருவேளை ஊக்க மருந்தை எனக்குக் கொடுத்து அதன் மூலம் என்னை போட்டியிலிருந்து வெளியேற்ற சதியும் நடக்கலாம். எங்களை மன ரீதியாக துன்புறுத்த அனைத்தும் செய்யப்படுகிறது. ஒரு முக்கியமான போட்டிக்கு முன்பாக இப்படி எங்களை சித்ரவதை செய்வது எப்படி பொருத்தமாக இருக்க முடியும்? பாலியல் தொந்தரவுக்கு எதிராக குரல் எழுப்பியதால் போட்டிக்கு முன்பே எங்களுக்கு எதிராக அரசியல் விளையாடுமா? தேசத்தில் நடந்த பாலியல் குற்றத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்கு தண்டனையா? விளையாடச் செல்வ தற்கு முன்பு எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டு இருந்தார்.
வினேஷ் போகத்திற்கு எதி ராகத் தொடக்கத்திலிருந்தே சதி தீட்டப்பட்டுள்ளது. பதக்கம் பறி போனதில் இந்திய ஒலிம்பிக் நிர்வாகமும் அவர்களை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி களும் உள்ளனர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.
மோடி அரசுக்குப் பஞ்சாப் முதலமைச்சர் கண்டனம்
பல்வேறு சூழ்ச்சிகளால் ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த வினேஷ் போகத்தின் வீட்டிற்கு சென்ற பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பகவத் மான் கூறுகையில்,
‘‘ஒரு தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு இருக்கிறது. வினேஷின் பயிற்சியாளரும், அவரது மாமாவுமான மகாவீர் போகத் 100 கிராம் எடையை குறைக்க முடியை வெட்டினால் கூட நிலைமையை சமாளித்து இருக்கலாம் எனக் கூறினார். அப்படி இருக்கையில் ஒன்றிய விளையாட்டு அமைச்சகம், பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?”என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தை நியாயப்படுத்தும் பாஜக: நாடு முழுவதும் வலுக்கும் கண்டனம்
வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினேஷ் போகத்திற்கு ஆதரவாகவும், தகுதி நீக்கத்திற்கு எதிராகவும் ஒட்டுமொத்த நாடே குரல் கொடுத்து வருகிறது. குறிப்பாக வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தில் சதி இருப்பதாகவும், விளக்கம் அளிக்கக்கோரியும் நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து, வெளிநடப்பும் செய்துள்ளனர்.
ஆனால், வினேஷ் போகத்தின் தகுதிநீக்கத்தை நியாயப்படுத்தும் வேலையில் பாஜகவினர் இறங்கியுள்ளனர். நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி, ‘‘100 கிராம் எடை அதிகமாக இருந்ததற்காக வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். இது நம் அனைவருக்கும் ஒரு பாடம். அவர் அந்த 100 கிராம் எடையை விரைவில் இழக்க வேண்டும். அதனால் வினேசுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது” என கூறினார். ஹேமமாலினியின் இந்தப் பேச்சிற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மேலும் பாஜக அய்டி விங் மற்றும் “கோடி மீடியா” ஊடகங்கள் கடந்த காலங்களில் இந்தியாவின் மேரிகோம் ஒரே இரவில் 2 கிலோ எடையைக் குறைத்தார் என்றும், வினேஷ் போகத் மீது 100% தவறு உள்ளது என அடையாளம் தெரியாத விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் மூலம் கருத்து கூற வைத்து வினேஷ் போகத் தகுதி நீக்க பிரச்சச்சினையை திசை திருப்ப முயன்று வருகின்றனர். பாஜக மற்றும் “கோடி மீடியா”க்களின் இந்த இழிவான செயலுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.
ஓஆர்எஸ் கரைசல்
கொடுத்தது யார்?
வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில்,‘‘ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் கொடுத்தது யார்?” என உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய ஒலிம்பிக் நிர்வாகத்தினரால் வினேஷ் போகத்திற்கு ஓஆர்எஸ் கரைசல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் எடை அதிகரித்துள்ளது. ஓஆர்எஸ் கரைசலை கொடுத்துவிட்டு ஒரே இரவில் 2.7 கிலோ எடையை குறைக்க இந்திய ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகம் திட்டமிட்டது ஏற்கக்கூடியது அல்ல. வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு இந்திய ஒலிம்பிக் நிர்வாகம் அளித்த ஓஆர்எஸ் கரைசல் தான் காரணம்” என அவர்குற்றம்சாட்டியுள்ளார்.