செய்தி: ‘‘தமிழ்நாட்டில் எங்களை இந்தியும், சமஸ்கிருதமும் படிக்க விடல….”- மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
சிந்தனை: நிர்மலா சீதாராமன் திருச்சியில் இருக்கும் சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரியில் 1977இலிருந்து 1980 வரை பி.ஏ. பொருளாதாரம் படித்தார். அவருக்கு ஒரு வருடம் சீனியர் என் சகோதரி Padmakumari Chandru. அவர் இந்தியை இரண்டாம் மொழியாக எடுத்துப் படித்தவர். அவருடைய இந்தி ஆசிரியை பெயர் சுகந்தி குந்தலாம்பாள்.
அதே கல்லூரியில் படித்த திருச்சியைச் சேர்ந்த Latha Vedantham இந்தியை இரண்டாம் மொழியாகப் படித்திருக்கிறார். அதற்கு முக்கியக் காரணம் இந்தி படித்தால் உதவித் தொகை கிடைக்கும் என்பதுதான். சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரி வளாகத்திலேயே இருக்கும் சாவித்திரி வித்யாசாலை பள்ளியில் இவருடைய சகோதரி சமஸ்கிருதம் படித்திருக்கிறார்.
சகோதரி பத்மா வேறொரு தகவலையும் சொல்கிறார். அவர் 1970களில் கல்லக்குடியில் இருக்கும் டால்மியா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது சமஸ்கிருதம் படிப்பவர்களுக்கு நடக்கும் சிறப்பு வகுப்பில் சேர்ந்தால் ரூ 20 உதவித் தொகை அளிக்கப் பட்டதாம். (அந்தக் காலத்தில் 20 மிகப் பெரிய தொகை.)
நான் படித்த செயிண்ட் ஜோசப் பள்ளியில் இந்திக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தன். நான் அதில் சேர்ந்து பின் ஓடி வந்து விட்டேன். அதற்குப் பின் உறையூர் அக்ரஹாரத்தில் ஒரு இந்தி டீச்சரிடம் இந்தி கற்றுக் கொள்ள முயற்சி செய்தேன். இந்தியை விட அவர்கள் வீட்டிலேயே காப்பிக் கொட்டையை அரைத்து சுட சுடப் போடப்படும் பில்டர் காப்பி சுவையாக இருந்தது. தொடர்ந்து படிக்கவில்லை (காப்பி போச்சே!.)
ஆனால் எனக்கு பல இந்திப் பாடல்களைப் பாடத் தெரியும். ஆனால் ஒரு சொல்லுக்குக் கூடப் பொருள் தெரியாது.
1965-74 கால கட்டத்தில் பல தமிழ் இளைஞர்களுக்கும் அப்படித்தான்.
பாவலர் வரதராஜன் இந்திப் படப் பாடல்களின் டியூனில் பல பாடல்களை இயற்றியிருக்கிறார். இளையராஜா வரும் வரை இதுதான் நிலைமை!
இந்தி மேல் எனக்கு வெறுப்பில்லை. இந்திதான் என்னை வெறுத்தது என நினைக்கிறேன்.
ஆகவே, நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் கூறியது பச்சைப் பொய்!
– ‘ஃபிரண்ட் லைன்’ மேனாள் ஆசிரியர்,
மூத்த இதழாளர் விஜயசங்கர் ஃபேஸ்புக் பதிவு