புதுடில்லி, ஆக. 7- கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போதைய மற்றும் மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 132 அரசியல் தலைவா்கள் மீது பணமோசடி வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்திருப்பதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு நேற்று (6.8.2024) தெரிவித்தது.
இதுதொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சவுத்தரி அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2019, ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரையில் தற்போதைய மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்எல் சி-க்கள் உள்பட 132 அரசியல் தலைவா்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டில் 15 பணமோசடி வழக் குகளைத் தொடா்ந்தது. 2020-இல் 28 வழக்குகள், 2021-இல் 26 வழக்குகள், 2022-இல் 34 வழக்குகள், 2023-இல் 26 வழக்குகள், நடப்பாண்டில் ஜூலை 31-ஆம் தேதிவரை மூன்று வழக்குகள் பதி வாகியுள்ளன.
இந்த வழக்குகளில் 2020-ஆம் ஆண்டு ஒரு வழக்கிலும் கடந்த 2023-ஆம் ஆண்டு இரண்டு வழக்குகளிலும், என மொத்தம் மூன்று வழக்குகளில் மட்டும் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்தது.
அதேபோல, 132 வழக்குகளில் 2020-ஆம் ஆண்டு ஒரே ஒரு வழக்கில் மட்டும் தண்டனை அறிவிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.