ஜலதாரா என்பதற்கு என்ன பொருள்?
சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்தில் உள்ள லிங்கத்தின்மீது ஒரு பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக நீர் விழச் செய்து சிவனை குளிரச் செய்யும் அமைப்பிற்கு ஜலதாரா என்று பெயர். உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர சிவனுக்கு ஜலதாரா அபிஷேகம் செய்து பலன் பெறலாம்.
(ஆர்.எஸ்.எஸ். வார இதழ், ‘விஜயபாரதம்’, 9.8.2024, பக்கம் 35)
ஒரு பக்கத்தில் கடவுள் உருவமற்றவர்; அய்ம்புலனுக்கும் தெரியாதவர் என்று சொல்லிக் கொள்வது உண்மையானால், சிவன் கடவுள் என்ற உருவம் எங்கிருந்து குதித்தது? சிவனுக்கு மனைவிகள், பிள்ளைகள் எப்படி வந்தனர் என்ற கேள்வி எழாதா?
அது ஒருபுறம் இருக்கட்டும். சர்வசக்தி வாய்ந்தவன் கடவுள் என்று சொல்லிக் கொண்டு சிவனைக் குளிரச் செய்ய சிவன் சிலைமீது நீர் விழச் செய்வது என்றால், இதனை முரண்பாடு என்பதா? கேலியாகச் சிரிக்கச் செய்வது என்பதா?
சர்வ சக்தி சாமிக்கு உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர சிவனுக்கு ஜலதாரா அபிஷேகம் என்று ‘விஜயபாரதம்’ எழுதுகிறதே! கடுகு மூக்கு அளவுக்குச் சிந்தனை இருந்தால், இப்படி எழுதுவார்களா?
நோய்களைத் தீர்ப்பதற்கு வரம் வேண்டி பக்தர்கள் சிவனைத் தேடி செல்லுகிறார்கள் – நேர்த்திக் கடன் கழிக்கிறார்கள்.
இப்பொழுது சிவனுக்கே உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர சிவனுக்கு அபிஷேகம் என்றால், எத்தகைய நகைச்சுவை!
கடவுளுக்கும் நோய் வரும் என்றால், இது கடவுளை அவமதிக்கும் செயல் அல்லவா!
பூரியில் ஜெகந்நாதருக்கு ஒவ்வொரு நாளும் மருத்துவச் சோதனை செய்யும் செய்தி படத்துடன் அடிக்கடி வெளிவருகிறது.
சிறுபிள்ளைகள் கூட்டாஞ்சோறு சமைப்பது போலவும், மண் வீடு கட்டி விளையாடுவது போலவும் இவை இருக்கின்றன என்றுதானே சொல்ல வேண்டும்.
பிள்ளை விளையாட்டு என வடலூர் இராமலிங்க அடிகள் சொன்னாலும் சொன்னார் – அசல் உண்மையாக அச்சடிப்பது போல அருளி இருக்கிறார்.
– மயிலாடன்