சென்னை, ஆக. 6- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, வட தமிழ்நாட்டில் பெரும் பாலான இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. சில இடங்களில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வடகுத்து பகுதியில் 13 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
பருவ மழை தீவிர மடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு கடலோர பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் 11ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ. வேகம்) லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட் டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 9ஆம் தேதி வரை மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.