சிறீநகர், ஆக.6- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்ட நாளில் தங்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒருங்கிணைந்த காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்கும் அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை ஒன்றிய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி நீக்கியது. அத்துடன் காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரை சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தன. மேலும் காஷ்மீருக்கு மாநில தகுதி வழங்க வேண்டும் என்றும் போராடி வருகின்றன.
இந்த நிலையில் சிறப்பு தகுதி பறிக்கப்பட்ட நினைவு தினம் நேற்று அனுசரிக்கப் பட்டது. இதை பா.ஜனதாவி னர் காஷ்மீர் முழுவதும் கொண்டாடினர்.
அதேநேரம் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து மக்கள் ஜனநா யக கட்சித்தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி பி.டி.அய். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘நான் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டு உள்ளேன். மக்கள் ஜன நாயக கட்சி அலுவலகம் பூட்டப் பட்டுள்ளது’ என தெரிவித்தார்.
மேலும் அவர் தனது எக்ஸ் தளத் தில்,’2019 ஆகஸ்டு 5ஆம் தேதி வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாக மட்டுமின்றி இந்திய ஜனநாயகத்தில் ஒரு கறையாகவும் இருக்கும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
மற்றொரு மேனாள் முதலமைச்சரும், தேசிய மாநாடு கட்சித்தலைவருமான உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில், ‘இந்தநாளை காஷ்மீர் பா.ஜனதா தலைவர்களை கொண்டாட அனுமதித்துவிட்டு, சிறப்பு தகுதி ரத்தை எதிர்க்கும் தலைவர்கள் தங்கள் வீடுகளிலேயே சிறை வைக்கப்பட்டு உள்ளனர்’ என சாடியுள்ளார்.
இதைப்போல தேசிய மாநாடு கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் தன்வர் சாதிக்கும், தன்னை வீட்டுக்காலில் வைத்து இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். மேலும் தனது வீட்டுக்கு வெளியே காவல்துறையினர் காவலுக்கு நிற்கும் ஒளிப்படத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
இவர்களை தவிர அல்தாப் புகாரியின் அப்னி கட்சியின் அலுவலமும் பூட்டப்பட்டு இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு காஷ்மீர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்ட நாளையொட்டி காஷ்மீர் முழுவதும் நேற்று (5.8.2024) பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.