படம் பிடிக்கும் மலேசியத் தமிழர்
மலேசியா மற்றும் சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் வரலாற்று ஆசிரியராக இருந்தவரும், வரலாற்று ஆர்வலருமான
வா.சந்திரசேகரன் எழுதியுள்ள ‘மலாயா முதல் மலேசியா தமிழர்கள் வரலாறு அடையாளத்தைத் தேடி’’ என்ற புத்தகத்தை 2023ஆம் ஆண்டு டிசம்பரில் மலேசியா ஜோகர் பாருவில் உள்ள சந்திரசேகரன் பப்ளிஷிங் ஹவுஸ் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் தமிழர்களின் வரலாற்றில் 1930–க்குப் பிறகு நிகழ்ந்த பெரும் மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர் அதன் காரணங்களை ஆராய்கிறார். அதில் பெரியார் இயக்கத்தின் பங்கைப் பின்வருமாறு விவரித்துள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கால கட்டத்தில் இதனை நாம் அறிந்து கொள்வதும், புரியாதோர் சிலர் புரிந்து கொள்வதும் அவசியமாகும்.
மலாயாவைத் தனது நிரந்தர இடமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை சாதாரணமாக, மிக எளிதில் உருவாகி விடக் கூடிய மனமாற்றம் கிடையாது.
தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த மன மாற்றத்திற்கான இன்னொரு காரணம் 1929இல் தந்தை பெரியாரின் மலாயா வருகையாகும். சிங்கப்பூரிலும் மலாயா முழுமையிலும் பெரியார் கலந்து கொண்ட கூட்டங்கள் மூலம் எந்தத் தலைவரும் செய்திராத அரியதொரு காரியத்தைப் பெரியார் செய்தார். அடிமட்ட தமிழ்த் தொழிலாளர்களை நேரடியாகப் பெரியார் சந்தித்ததுதான் அது! பெரியாரின் வருகை தமிழர்களிடையே புதிய சிந்தனையையும் புத்துணர்ச்சியையும் ஊட்டியது. மலாயாவையும் சிங்கப்பூரையும் தம் தாய் நாடாக ஏற்று வாழுமாறு சென்ற இடங்களில் எல்லாம் பெரியார் வலியுறுத்தினார். அவருடைய எழுச்சிமிகு பேச்சால் கவரப்பட்ட
கோ. சாரங்கபாணி (கோ.சா.) சிங்கப்பூரில் ‘முன்னேற்றம் என்ற பத்திரிகையை 1929-லும், தமிழ் முரசு என்ற முதல் தமிழ் தினசரியை 1935-லும் தொடங்கினார். அது மட்டுமல்லாது. 1932-ஆம் ஆண்டு, தமிழர் சீர்திருத்தச் சங்கம் என்ற ஓர் அமைப்பையும் பெரியாரின் சீர்திருத்தச் சங்கத்தைப் பின் பற்றித் தொடங்கினார் கோ.சா. தமிழர் சீர்திருத்தச் சங்கம், மலாயா-சிங்கப்பூர் தமிழர்களை ஒன்றுபடுத்தி தமிழர் எழுச்சியை எழுப்புவதில் பெரும் பங்காற்றி உள்ளது.
பெரியார் வருகையின் தாக்கம் பற்றித் தொழிலாளர் இலாகா அதிகாரிகள் அளித்திருக்கும் அறிக்கை இதனை உறுதி செய்வதாக உள்ளது. இது தொழிலாளர் இலாகாவின் மாதாந்திர அறிக்கையில் (ஜூன் 1956, பக்.13) காணக்கிடைக்கிறது. 1930-களின் இறுதியில் தொடங்கிய தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் பெரியாரின் வருகையை ஒட்டி ஏற்பட்ட தாக்கங்களின் விளைவு என்று அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். தொழிலாளர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற இளம் தலைவர்கள் அதற்குப் பெரிதும் பங்காற்றியிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இது ஏற்றுக் கொள்ளத் தக்க செய்தியாகவே இருக்கிறது.
ஏனெனில், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அநியாயத்திற்கு எதிராகப் போராடும் மனநிலை 1930-கள் தொடக்கம் ஆரம்பித்திருக்கிறது. பெரியாரின் மலாயா வருகை 1929-இல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பெரியார் கொள்கைகளின் ஊடுருவலுக்கும் தோட்டத் தொழிலாளர்களின் மனநிலை மாற்றத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
இதற்கு முன்னால் உருவாக்கப்பட்ட இந்தியர் சங்கங்கள், ஆங்கிலத்தில் படித்த இந்தியர்களால் நிறுவப்பட்டு அடிமட்டத் தமிழர்களின் நலனில் பெரிதும் அக்கறை காட்டாமல் இருந்தன. அவை பெரும்பாலும் மேல்தட்டு கலை, பண்பாட்டுக் கூறுகளில் மட்டும் அக்கறை செலுத்தி வந்தன. இந்தக் குறையைக் களையும் முகமாகத்தான் பெரியாரின் வருகையை ஒட்டி உருவாக்கப்பட்ட தமிழர் சீர்திருத்தச் சங்கங்களும் திராவிட இயக்கமும் ஆகும் .
இப்படியாக, பெரியாரின் வருகை மலாயாத் தமிழர்களின் வரலாற்றில் ஓர் அழுத்தமான சுவட்டைப் பதிவு செய்துள்ளது. இன்றைக்குத் தமிழர்கள் சிலரே பெரியார் தமிழர்களின் எதிரி போலவும் பெரியார் தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று கேள்வி கேட்கும் அவல நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதற்குக் காரணம் நமது வரலாறு இங்கு சரியாகப் பதிவு செய்யப்படாததுதான் ஆகும்.
பெரியாரைப் பற்றிய தகவல் தமிழ்ப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் புத்தகங்களில் இருப்பதைக் கூட கேள்விக்குள்ளாக்கி அந்தத் தகவல்களை நீக்கும்படி கோரி, சமயம் சார்ந்த இந்திய அமைப்புக்கள் அண்மையில் கோரிக்கை விடுத்தது மிகவும் வருந்தத்தக்கது. மலேசியத் தமிழர்களின் வரலாறு மலேசிய அரசாங்கத்தால் முறையாகப் பதிவு செய்யப் படவில்லை என்கிற பொதுவான குறை இருக்கும் நிலையில், இந்திய அமைப்புக்கள் கூட அதற்குத் துணை போவதை என்னவென்று சொல்லுவது!
தகவல்: மு. கோவிந்தசாமி
பெரியார் பன்னாட்டமைப்பு, மலேசியா