இம்பால், ஆக. 5- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித் துள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்தி, குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை நிகழ்ந்து வருகிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தினருக்கும், ஹமார் சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. அங்கு இயல்பு நிலையை மீட்பதற்காக இரு சமூகத்தினர் இடையே கடந்த 1.8.2024 அன்று அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அண்டை மாநிலமான அசாமின் கச்சார் நகரில் சிஆர்பிஎஃப் படைப் பிரிவின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்தச் சந்திப்புக்கு ஜிரிபாம் மாவட்ட நிர்வாகம், அசாம் ரைஃபிள் படைப் பிரிவு, சிஆர்பிஎஃப் படைப் பிரிவு ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. தாடவ், பைடே, மிசோ உள்ளிட்ட சமூகங்களின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
இயல்பு நிலையை மீட்கவும், வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் இரு தரப்பும் முயற்சிகளை மேற்கொள்வது என்று இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஜிரிபாம் மாவட்டத்தில் செயல்படும் பாதுகாப்புப் படையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
எனினும், அமைதி ஒப் பந்தம் ஏற்பட்ட ஒரே நாளில் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. அங்கு துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளும் நிகழ்ந்தன. கைவிடப்பட்ட ஒரு வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
இது தொடர்பாக அதி காரி ஒருவர் கூறுகையில் “அப் பகுதியில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை சாதகமாகப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுதம் தாங்கிய நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்’ என்றார்.
அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இன வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்படாத பகுதியாக இருந்து வந்த ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விவசாயி ஒருவரின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. அதன்பின் அங்கும் வன்முறை நிகழ்வுகள் அதிகரிக்கத் தொடங்கின.
கடந்த ஜூலை மாதத்தில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதனால் அங்கு ஹமார் – மெய்தி சமூக தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதலால் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் தங்கள் வீடு களைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.