சென்னை, ஆக. 4– தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2,438 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அய்டிஅய், 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தெற்கு ரயில்வேயில் 2,438 பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் – 1337 பதவிகள்
2. மத்திய பணிமனை, கோல்டன் ராக் – 379
3. சிக்னல் & டெலிகாம் பணிமனை, போதனூர் – 722 என மொத்தம் 2,438 பயிற்சி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கல்வி தகுதி: அய்டிஅய், பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்கள் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.. பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். அதாவது ஃபிட்டர் பணியிடத்திற்கு குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ ஆய்வக டெக்னிஷியன் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியில் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 15 வயதுக்கு மேற்பட்டவர்களும் 24 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். பிர்ஷர்ஸ் என்றால் அதிபட்ச வயது வரம்பு 22 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
பயிற்சிக் காலம்: பிரஷர்ஸ்கள் (Freshers)
பிட்டர் பணி: 2 ஆண்டுகள் பயிற்சி
வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்): ஓர் ஆண்டு 3 மாதங்கள்
மெடிக்கல் லேப் டெக்னிஷயன்ஸ்: ஓர் ஆண்டு 3 மாதங்கள்
மேனாள் அய்டிஅய் கேட்டகிரி / டெக்னிகல் தகுதி பெற்றிருந்தால் பயிற்சிக் காலம் 1 ஆண்டு ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரயில்வே வாரிய விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தெற்கு ரயில்வே இணையதளத்திற்கு சென்று தேவையான விவரங்களை அளித்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வரும் 12.08. 2024 கடைசி நாளாகும்.
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து அறிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1721574353840-ActApprenticesNotify202425.pdf செய்யவும்.
இந்திய வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை!
ஆகஸ்ட் – செப்டம்பரில்
மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்
புதுடில்லி, ஆக. 4– இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் தலைவர் மிருதுன்ஜெய் மொகபத்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைப் பொழிவு நீண்டகால சராசரி அளவான 422.8 மி.மீ.இ,ல் 106 சதவீதம்இருக்கும். கடந்த ஜூன் 1இல் இருந்து இதுவரை 453.8 மி.மீமழை பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவைவிட 2% அதிகம்.நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழைப் பொழிவு இயல்பாகவும், சில இடங்களில் இயல்பைவிட அதிகமாகவும் இருக்கும்.
வடகிழக்கு, அதையொட்டியுள்ள கிழக்குப் பகுதி, லடாக், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதி, மத்தியில் சில பகுதிகளில் மழைப் பொழிவு இயல்பைவிட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் மழைப்பொழிவு இயல்பைவிட 9 சதவீதம் அதிகம். ஒன்றியப் பகுதியில் மழை 33 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. பருவமழையை நம்பியுள்ள மத்தியப் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது.
கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தின் கங்கை ஆற்றுப் பகுதிகள், வடகிழக்கு பகுதிகளில் மழைப் பொழிவு குறைவாக உள்ளது. அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: கேரளாவின் பல இடங்களில் வரும் 5ஆம் தேதி வரை கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நேற்று (3.8.2024) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.