வயநாடு பேரிடர்: 8 மணி நேரம் போராடி நான்கு குழந்தைகளை மீட்ட வனத்துறையினர் – முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு

viduthalai
2 Min Read

வயநாடு, ஆக. 4– வயநாடு நிலச்சரிவில் குகையில் சிக்கிய 4 பழங்குடியின குழந்தைகளை தங்களது உடலில் கட்டிக் கொண்டு பத்திரமாக மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.

இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தொடர்ந்து 5ஆவது நாளாக மீட்பு படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்தியாதற்போதுவரை 1000-க்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தோண்ட தோண்ட உடல்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, வனத்துறையினர், தன்னார்வலர்கள் என பலரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நிலச்சரிவால் மலை உச்சியில் இருந்த குகைக்குள் சிக்கித் தவித்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரை கேரள வனத்துறை அதிகாரிகள் துணிச்சலாக மீட்ட நிகழ்வு பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

கல்பெட்டா பகுதியின் வன அலு வலரான கே.ஹாஷிஸ் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு ஒன்று முதல் நான்கு வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் அடங்கிய பழங்குடியின குடும்பத்தை மீட்டனர். கிட்டத்தட்ட இந்த மீட்பு பணி 5 மணி நேரம் நடைபெற்றது. பழங்குடியினரை மீட்பதற்கான செங்குத்தான பாதையில் பலத்த மழைக்கு மத்தியிலும் வனத்துறையினர் மரங்கள் மற்றும் பாறைகளில் கயிறுகளை கட்டி மலையேறியுள்ளனர்.

பழங்குடி குழந்தைகளை மீட்ட வனத்துறையினர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “குழந்தைகள் சோர்வாக இருந்தனர், முதலில் நாங்கள் எடுத்துச் சென்ற பொருள்களை அவர்களுக்கு கொடுத்து உணவளித்தோம். பின்னர், நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, அவர்களின் தந்தை எங்களுடன் வர ஒப்புக்கொண்டார், நாங்கள் குழந்தைகளை எங்கள் உடலில் கட்டிக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றோம்” என தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *