மேட்டூர்,ஆக.4 கருநாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,65,000 கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு 1,71,000 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது. கருநாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இதனை தொடர்ந்து இருஅணைகளில் இருந்தும் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இந்த நிலையில் இரண்டு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. நேற்று (3.8.2024) காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 97 ஆயிரத்து 749 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 47 ஆயிரத்து 915 கனஅடியும் என மொத்தம் 1 லட்சத்து45ஆயிரத்து 664 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று (3.8.2024) காலை நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் படிப்படியாக மேலும் அதிகரித்து மாலை 4 மணியளவில் விநாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,70,000 கனஅடியாகவும் காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,65,000 கனஅடியாகவும் நீர்வரத்து சரிந்துள்ளது. இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், அய்வர்பாணி, அய்ந்தருவி ஆகிய அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணி களுக்கு ஒகேனக்கல் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1,70,500 கனஅடியாக இருந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் 1,73,000 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை 8மணி நிலவரப்படி வினாடிக்கு 1,71,000 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடியும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 1,48,500 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடியும் என மொத்தம் 1,70,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.15 அடியாகவும், நீர் இருப்பு 93.71 டிஎம்சியாகவும் உள்ளது. தொடர்ந்து காவிரி கரையோர பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.