மீட்புப் பணியில் இந்திய ராணுவம் தீவிரம்
திருவனந்தபுரம், ஆக.3 கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-அய் தாண்டக்கூடும் என்று கேரளஅரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ஆம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்று (2.8.2024) 4-ஆவது நாளாக மீட்புப் பணி தொடர்ந்தது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ கூறும்போது, “பாதிக்கப்பட்ட இடங் களில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணி ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. இப்போது உடல்களைதேடும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறோம். எனினும், தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் தேடி வருகிறோம்” என்றார்.
இதுபற்றி ராணுவ மீட்புப் படை வீரர்கள் கூறியதாவது: பொதுவாக, கட்டடங்களுக்குள் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை கண்டறிய தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்துவோம். தற்போது, தெர்மல் ஸ்கேனரை பயன் படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். உயிரோடு இருக்கும் மனிதர்கள், விலங்குகளை இந்த கருவி மூலம் கண்டறிய முடியும்.
முண்டக்கை பகுதியில் ஒரு கடை இருந்த இடத்தில் தெர்மல் ஸ்கேனரில் சிக்னல் கிடைத்தது. அங்கு மணல் குவியல், பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ குழுவினரும் நிகழ்வு இடத்தில் முகாமிட்டுள்ளனர். அங்குமனிதர்கள் அல்லது விலங்குகள் புதைந்திருக்க வாய்ப்பு உள்ளது.
தெர்மல் ஸ்கேனர் மட்டுமன்றி, ட்ரோனில்ரேடார் பொருத்தி தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மீட்புப் பணியில் மோப்ப நாய்களையும் பயன்படுத்தி வருகிறோம். நிலச்சரிவால் உருவான மண்மேடுகளில் யாராவது சிக்கி உள்ளனரா என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் சுற்றிவருகின்றன. எங்களோடு இணைந்து தன்னார் வலர்கள், பொதுமக்களும் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வயநாடு ஆட்சியர் மேகாசிறீ கூறும்போது, “ஏற்கெனவே 6 மோப்ப நாய்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட 4 மோப்ப நாய்களும் பணியில் இணைந்துள்ளன” என்றார்.
கேரளாவில் 2-ஆவது நாளாக முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செய லாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று முண்டக்கை பகுதியை பார்வையிட்டனர். ராணுவ அதிகாரி களிடம் கள நிலவரத்தை கேட்டறிந்தனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று வயநாட்டில் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றார்.
கேரள முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இது வரை 279 உடல்கள் பிரேத பரிசோ தனை செய்யப்பட்டுள்ளன. இதில் 107 உடல்கள் உறவினர்களால் அடை யாளம் காணப்பட்டுள்ளன’ என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9,328 பேர் மீட்பு
கேரள வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் கூறும்போது, “ராணுவம், மாநிலகாவல் துறை உட்பட 1,300-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 94 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
150 வீடுகள் கட்டப்படும்
திருச்சூரில் செய்தியாளர்களிடம் கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் பிந்து நேற்று கூறியபோது, “தேசிய நாட்டு நலப்பணி திட்டம் மூலம் வயநாடு பகுதிகளில் 150 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும். வயநாடு மீட்பு பணியில் முக்கிய பங்காற்றிய என்எஸ்எஸ், என்சிசி மாணவ, மாணவி களை பாராட்டுகிறேன்” என்றார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை பகுதிகளை இணைக்கும் வகையில் ராணுவத்தினர் 190 அடி நீளத்துக்கு தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். இதற்கான இரும்பு தளவாடங்கள் பெங்களூருவில் இருந்து 20 லாரிகளில் கொண்டு வரப்பட்டன. மெட்ராஸ் இன்ஜினீயரிங் குழுவை சேர்ந்த 144 அதிகாரிகள் 31 மணி நேரத்தில் இந்த புதிய பாலத்தை அமைத்தனர்.
இந்தகுழுவின் தலைவர் மேஜர் சீதா கூறும்போது, “எங்கள் வீரர்கள் இரவு, பகலாக உழைத்து மிக குறுகிய காலத்தில் பாலத்தை அமைத்துள்ளனர். முதல் நாளில் 25 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாலத்தை கடந்து சென்றன” என்றார்.
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 344 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 281 பேரை காணவில்லை. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படு கிறது. எனவே, நிலச்சரிவு உயிரிழப்பு 500-அய் தாண்டக்கூடும் என்றுகேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
‘கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதிகளில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. வயநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.