புதுடில்லி, ஆக.3- வழக்குரைஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், நாட்டில் மூடநம்பிக்கையையும், சூனியம் வைப்பதையும் ஒழிக்க சட்டம் இயற்றுமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் (1.8.2024) எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
நீதிபதிகள் கூறியதாவது:-
மூடநம்பிக்கை ஒழிப்புக்கான ஒரே தீர்வு, கல்விதான். இத்தகைய விவகாரங்களில் நாடாளுமன்றம்தான் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் மனப்பான்மையை உருவாக்கி, மூடநம்பிக்கையை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் எப்படி உத்தரவிட முடியும்? -இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதைத்தொடர்ந்து, மனுதாரர் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்:
வட மாநில இளைஞர்களை பிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக. 3- 2019 இல் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக சென்னையை சேர்ந்த தருண்மோகன் என்பவர் மீதும் வழக்கு பதிவானது. இந்த வழக்கை ரத்து செய்யும்படி அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 5 ஆண்டுகளாக நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கிடப்பில் போட்டது ஏன்? எனவும், சி.பி.சி.அய்.டி. விசாரணை திருப்தி அளிக்கவில்லை எனவும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று (2.8.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்புடைய வடமாநில வாலிபர்களை பிடிக்க மத்திய விசாரணை அமைப்புகள் மாநில காவல்துறையினருக்கு உதவ வேண்டும். அதன்படி சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் முறையாக விசாரித்து 4 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
பகவான் செயலோ!
பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து பக்தர்கள் மூன்று பேர் பலி!
விருதுநகர், ஆக.3- பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 45), மகேஷ் (35), பவுன்ராஜ் (45). இவர்க ளும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 50 பேர் கொண்ட குழுவாக சங்கரன்கோவிலில் இருந்து பாதயாத்திரையாக விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தனர்.
நேற்று (2.8.2024) அதிகாலையில் சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் இந்த பாதயாத்திரை குழுவினர் சென்றனர். என்.வெங்கடேசுவரபுரம் விலக்கு அருகே வந்தபோது, நெல்லையில் இருந்து மதுரை செல்வதற்காக ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது. அந்த லாரி திடீரென பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.
இதில் பக்தர்கள் சிலர் லாரியில் சிக்கினர். பலர் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினர். உடனே லாரி நிறுத்தப்பட்டது. லாரி ஓட்டுநர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். லாரியில் சிக்கியவர்களை மற்ற பக்தர்கள் மீட்க முயன்றனர். ஆனால், முருகன், மகேஷ், பவுன்ராஜ் ஆகிய 3 பக்தர்களும் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இந்நிகழ்வு தொடர்பாக சாத்தூர் தாலுகா காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை (வயது 29) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.