புதுடில்லி, ஆக.3 நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொடுத்து நாட்டுமக்களை குழப்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷசாமீது உரிமைமீறல் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மாநிலங்களவையின் செயல்பாட்டு விதிமுறைகள் மற்றும் நடத்தை விதிமுறைகள் விதி 187–க்கு உட்பட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
30.08.2024 அன்று மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவுகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னெச்சரிக்கை அமைப்புகள் கூறியதையும் மற்றும் முந்தைய எச்சரிக்கைகளையும் கேரள அரசு பயன்படுத்தவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
‘‘7 நாளுக்கு முன்பே , ஜூலை 23 இல் ஒன்றிய அரசு தகவல் அளித்தது. 24, 25 ஆம் தேதியன்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தோம். 27 இல் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் , நிலச்சரிவு ஏற்படும், மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை அளிக்கப்பட்டது. ஆனால், பினராயி விஜயன் அரசு அலட்சியமாக இருந்ததே உயிரிழப்புக்குக் காரணம்‘‘ என்றார். இவை ஊடகங்களில் செய்தியாக வந்தது, ஆனால், உண்மையில் 2024 ஆகஸ்ட் 2 அன்று ‘தி இந்து‘ நாளிதழில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான புள்ளி விவரத்தில் உள்துறை அமைச்சரகம் தாமதமாக கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது தொடர்பான தகவல்கள் சான்றுகளோடு வெளிவந்துள்ளன.
ஒன்றிய அரசு எச்சரிக்கைகளை முன்பே வழங்கியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியவை தவறானவை என்பதும், இதனால் மாநிலங்களவையைத் தவறாக வழிநடத்தினார் என்பதும் தெளிவாக இருக்கிறது. இதன் மூலம், அரசின் அமைச்சர் அல்லது உறுப்பினர் அவையைத் தவறாக வழிநடத்துவது உரிமை மீறல் மற்றும் அவமதிப்பு ஆகும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலைகளில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் மாநிலங்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதி உள்ளார்