சென்னை, ஆக. 3- வயநாடு சென்றுள்ள தமிழ்நாடு மருத்துவக் குழுவினர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் அதிக கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகியும், உடல் நல பிரச்சினைகள் ஏற்பட்டும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் இருந்து 10 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் இரண்டு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வயநாட்டுக்கு காய்ச்சல், நோய்த் தொற்று என பேரிடர்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சை உபகரணங்கள் போதிய அளவு இரண்டு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
வயநாட்டில் அமைந்துள்ள கோட்டநாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தமிழ்நாடு மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த ஆக்சிஜன் அளவு, நாடி துடிப்பு, உடல் எடை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றன. 500க்கும் அதிகமான பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் விநியோகிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சூழலை நமது மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கூடுதல் வசதிகள் வேண்டும்என்று கோரினால், கேரளத்தை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களில் இருந்து கூடுதல் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தண்ணீரை சேமித்தல் குறித்து
கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை, ஆக. 3- நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கொண்டாடினர்.
இந்தக் கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக, ‘நீரைச் சேமித்தல்’ என்கிற கருப்பொருளை மய்யப்படுத்தி மாணவிகளின் ‘கும்மியாட்டம்’ உட்பட பல கிராமிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. உலகின் பழைமையான தாள வாத்தியங்களில் ஒன்றான ‘தப்பு’வின் தாள அடிகளுடன் ஆடப்படும் ‘தப்பாட்டம்’; குழு நடனத்தின் மற்றொரு பிரபல வடிவமான ‘ஒயிலாட்டம்’ ஆகிய நாட்டுப்புற நடனங்களை நிகழ்த்தினர்.
இது குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் கூறுகையில், “நதிகள் செழிப்பின் ஆதாரங்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு மிக முக்கியமானவை. பழங்காலத்திலிருந்தே தமிழ் கலாச்சாரத்தில் நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இருந்தபோதும், உலகம் முழுவதும் பரவியுள்ள சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கருத்தில்கொண்டு, நதிகள் மற்றும் பிற நீர்நிலைகள் மீதான மரியாதை, கடந்த காலத்தைவிட இன்றைக்கு மிக அதிகமாக தேவைப்படுகிறது. எனவே, எங்கள் கல்லூரியில் தண்ணீரை சேமித்தல் தொடர்பான விழாவை ஏற்பாடு செய்து நீர் பயன்பாடு, நீர்நிலைகளின் பாதுகாப்பு, அவற்றுக்குப் புத்துயிர் அளித்தல் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அந்த விழாவுடன் தொடர்புடைய கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவிகளை ஊக்குவிக்கிறோம்” என்றார்.