கேள்வி 1: 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த முழுமையான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி கூறுகிறாரே? விளையாட்டுத்துறையும், வெளியுறவுத்துறையும் இவர் கையிலா இருக்கிறது?
– மு.குமரன், திருத்தணி
பதில் 1: அவர் எப்படி இதனை அறிவிக்கத் தகுதி படைத்தவர்? ஒன்றிய அரசின் செய்தித் தொடர்பாளராகவோ அல்லது அரசின் அங்கீகரிக்கப்பட்ட பேச்சாளராகவோ எப்போது அவர் ஆனார்? Extra-Constitutional Authority ஆக அவர் மோடி ஆட்சியில் தொடர்வது, அறிவிப்பு தருவது என்பது இந்த ஆட்சி அம்பானிகள், அதானிகள் ஆட்சிதான் என்பதை நிரூபிக்கவில்லையா?
– – – – –
கேள்வி 2: வில்வித்தைப் போட்டிகளில் உயர்ஜாதியினர் மட்டுமே வீரர்களாக உள்ளனர் என்று புள்ளிவிவரம் கூறுகிறதே? வில்வித்தையில் 36 ஆண்டுகளாக பதக்கம் எதுவும் வெல்லவில்லையே – ஏன்?
– மா.செங்குட்டுவன், வேளச்சேரி
பதில் 2: துரோணாச்சாரியார்கள் ஆதிக்கம் மறைந்து உண்மையான ஏகலைவன்களின் காலம் விரைவில் வரும்; காலம் மாறுவது தொலை தூரத்தில் இல்லை!
– – – – –
கேள்வி 3: பதவி ஓய்வு பெற்ற ஒருவரை மீண்டும் யு.பி.எஸ்.இ. தலைவராக நியமித்துள்ளார்களே? அந்த பதவிக்கு தகுதியானவர்கள் யாருமே இல்லையா?
– செ.வேல்முருகன், தருமபுரி
பதில் 3: பிரதமர் மோடி பார்வையில் – குஜராத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களே முழுத் தகுதிக்குரிய முதன்மையாளர்கள் போலும்!
– – – – –
கேள்வி 4: 3.0 மோடி ஆட்சி மிகவும் களைப்படைந்த ஆட்சியாக மாறிவிட்டதா?
– ச.மணிமாறன், மதுரை
பதில் 4: 3.0 மோடி ஆட்சி; போகப் போகப் தெரியும். புரியாத புண்ணாக்குகளுக்குப் (புண் நாக்குகள்) புரியும்.
– – – – –
கேள்வி 5: மகாராட்டிரா, பீகார், உள்ளிட்ட மாநிலங்களின் இட ஒதுக்கீடு சட்டங்களில் கைவைத்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு கொண்டுவந்த இடஒதுக்கீடு சட்டங்களுக்கு மட்டும் எப்போதுமே பச்சைக்கொடி காட்டுகிறதே?
– வே.ஏகலைவன், நெல்லை
பதில் 5: சட்டம் இயற்றப்பட்ட முறை, திராவிட –- கலைஞர் ஆட்சியின் ஆளுமையின் அற்புதம் அது. (சமூகநீதி சதிராடும் மண்ணாயிற்றே இது.)
– – – – –
கேள்வி 6: கடந்த ஆண்டு தங்களுக்கு – இந்த ஆண்டு தங்கள் உற்ற நண்பருக்கு ‘தகைசால் தமிழர் விருது’ – எப்படி உணர்கிறீர்கள்?
– தே.கன்னியப்பன், திண்டிவனம்
பதில் 6: எனக்கே மீண்டும் ஒரு தடவை விருது தரப்பட்டது போல் – குமரியாருக்குத் தந்த ‘தகைசால் தமிழர் விருது’ குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
சரியானவர்கள் தந்த சரியான தேர்வு இது!
– – – – –
கேள்வி 7: ரூ.2000 கோடி செலவில் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் 20 ரூபாய் வாளியை வைத்து ஒழுகும் மழை நீரைப் பிடிக்கின்றனரே?
– வே.செந்தாமரை, நாமக்கல்
பதில் 7: ஒன்றிய மோடி அரசின் செயல்திறன் பெருமைகளில் இதுவும் ஒன்று! (2000 கோடி அல்ல; 910 கோடி என்று நினைவு).
– – – – –
கேள்வி 8: இவ்வளவு மோசடிகள் நடந்திருந்தும் நீட் தேர்வு மூலமே மருத்துவ சேர்க்கையை உறுதிப்படுத்தி உள்ளார்களே?
– மா.காளிதாஸ், மதுராந்தகம்
பதில் 8: அசல் அநியாயம் – அப்பீலில் அதுவே ‘காயம்’ (காயம் – உறுதி செய்து நிரந்தரமாவது) என்ற கிராம மக்களின் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!
– – – – –
கேள்வி 9: கிருத்திகைக்கு வாழ்த்து கூறிய ஆளுநர் இனி அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, நவமி, அஷ்டமி, சோமவாரம்(சிவனுக்கு உகந்த திங்கள்) விஷ்ணுவிற்கு உகந்த சுக்கிரவாரம்(வெள்ளிக்கிழமை) போன்றவற்றிற்கும் வாழ்த்து கூறுவாரா?
– தா.வெற்றிமுரசு, சென்னை
பதில் 9: அவர் இங்கேதான் இன்னமும் ஆளுநராக இருக்கிறார் என்று நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பது எப்படி? எனவேதான் ஆடி அமாவாசை ஆளுநர் இப்படி செயல்படுகிறார் போலும்!