மானிடம் போற்றும் மகத்துவம் கொண்டார்
தாயிதம் தந்த தோளுடைப் பெரியார்!
தன்னிதம் போணாத் தகையாற் சிறந்த
அன்னை யெம்மணி யம்மையின் வழியில்
தமிழினத் தொண்டை தலைமேற் கொண்ட
தமிழர் தலைவர் தகைசால் தமிழர்
ஆசிரியர் நமக்காய் ஆக்கித் தந்த
வீசு தென்றலாய் வெம்மடம் தணிக்கும்
புதுமை இலக்கியத் தென்றல் மன்றின்
பொதுமை படைக்கப் பொழிந்திடும் தொண்டின்
ஆயிர மாவது அரிய நிகழ்வின்
அரங்கம் அமைத்தோம்! அனைவரும் வருக!
இருபத்தி ஒன்றாம் அகவையின் வயது!
இடைநில் லாதே இயங்கிய துணிவு!
இலக்கியம் நாடகம் இன்னிசை பேச்சு
முழங்கிய சங்கம்! முத்தமிழ் அரங்கம்!
நூல்பல கொண்ட நுண்ணியம் துலங்க
ஆழ்பொருள் விளக்கிய ஆய்வுக் களங்கள்!
தென்றலின் இனிமை தேக்கிய பாங்காய்க்
கன்னலும் கனலும் கலந்தளி நிகழ்வு!
தென்றலுக் கேது தேங்கிடும் ஓய்வு?
தொண்டருக் கேது துவளுந் தோள்கள்?
தொடரோட் டத்தில் தீச்சுட ரேந்தித்
தடைபல தாண்டித் தம்பணி செய்த
பொறுப்பா ளர்க்கும் புகழ்சேர்த் தார்க்கும்
விருப்பாய்க் கொடையை அளித்தோ ருக்கும்
நன்றி நவிலும் நற்பொழு தாக
இந்த நிகழ்வு இனிதரங் கேறும்!
கழகத் தலைவர் சிறப்புரை யாற்றும்
அழகின் நிகழ்வே ஆயிர அரங்கு!
அனைவரும் வருக! ஆதர வளிக்கும்
துணையென வருக தோள்கொடுத் தருள்க!
புதுமை இலக்கியத் தென்றல்
புதுக்கித் தன்னைப் புரியும் வினையே!
– செல்வ மீனாட்சி சுந்தரம்
தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்