விருதுநகர் சுகாதார மாவட்டம் கடந்த ஓர் ஆண்டு முழுக்க பிரசவ மரணமே இல்லாமல் ‘ஜீரோ பிரசவ மரணம்’ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது எப்படி? இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 7,991 பிரசவங்கள் நடைபெற்ற நிலையில், அதில் ஒரு பிரசவகால உயிரிழப்பும் பதிவாகவில்லை. இதன் மூலம் விருதுநகர் சுகாதார மாவட்டம், தமிழ்நாட்டில் பேறுகால சுகாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையைப் புரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் சுகாதார மாவட்டத்தில் இப்படி பிரசவ கால உயிரிழப்புகளில் ஜீரோ மரணம் பதிவாவது இதுவே முதன்முறை. அந்த வகையில், இதுவொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. சுகாதார மாவட்டம் என்பது வருவாய் மாவட்டத்தில் இருந்து வேறுபட்டது. 30 முதல் 40 வரையிலான ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒன்றிணைந்து சுகாதார மாவட்டம் உருவாக்கப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் (HUD – Helath Unit District) விருதுநகர் சுகாதார மாவட்டமும் ஒன்று. 2022-2023 காலகட்டத்தில் பதிவான 8,483 பிரசவங்களில் ஆறு கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது உயிரிழந்தனர். இந்தநிலையில் 2023-2024 காலகட்டத்தில் பிரசவகால உயிரிழப்பு ஏதும் விருதுநகர் மாவட்டத்தில் பதிவாகவில்லை.
விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் விருதுநகர் மற்றும் சிவகாசி என இரண்டு சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில், சிவகாசி மாவட்டத்தில் அதே காலகட்டத்தில் இரண்டு பிரசவ மரணங்கள் பதிவாகியுள்ளன.
‘ஜீரோ பிரசவ மரணம்’ எனும் சாதனையை விருதுநகர் மாவட்டம் நிகழ்த்தியது எப்படி?
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 2022ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களை ஒரு வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்துள்ளார். பிரசவத்தின்போது மரணம் ஏற்படுவதைத் தடுப்பது, மகப்பேறு சுகாதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை கர்ப்பிணிகளைப் பதிவு செய்தல் முதல் குழந்தைப் பேறு வரை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதன் வாயிலாகவே பிரசவகால மரணங்கள் குறைந்திருப்பதாக சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இது தொடர்பாக பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வி.பி. ஜெயசீலன், வாட்ஸ் ஆப் குழு மற்றும் ‘விருகேர்’ (ViruCare) என்ற செயலி வாயிலாக அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளைக் கூர்ந்து கவனித்ததே இந்தச் சாதனைக்குக் காரணம் என்கிறார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 2022ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களை ஒரு வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்துள்ளார். அதில், மருத்துவர்கள் தாங்கள் பரிசோதிக்கும் கர்ப்பிணிகள், பிரசவங்கள் குறித்த தகவல்களை வழங்குவர். அதில் அதிக ஆபத்து கொண்ட கர்ப்பிணிகள், உடனடியாக மேம்பட்ட சிகிச்சைகளைக் கொண்ட மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள்.
“ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்யும் கர்ப்பிணிகளைத் தொடர்ந்து கண்காணிப்போம். இம்மாவட்டத்தில் உள்ள 45-46 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ அலுவலர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளிட்ட அதிக ஆபத்து கொண்ட கர்ப்பிணிகளைத் தொடர்ந்து கண்காணித்தனர். அந்தக் கர்ப்பிணிகளின் பிரசவ தேதி நெருங்கும் நேரத்தில் நாள்தோறும் பேசி அவர்களை மேம்பட்ட சிகிச்சைகளைக் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேருமாறு வலியுறுத்துவோம்” என்றார் ஜெயசீலன்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட கர்பிணிகளுக்கான ‘விருகேர்’ (ViruCare) எனும் செயலி மூலம் மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களை கண்காணித்து வந்தனர். மேலும், இரும்புச் சத்து குறைவாக உள்ள பெண்களுக்கு ‘இரும்புப் பெண்மணி’ எனும் உள்ளூர் திட்டத்தின் வாயிலாக, இரும்புச்சத்து மாத்திரைகள் முதல் குருதி தேவைப்படும் பெண்களுக்கு குருதி ஏற்றுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த அவசரக்கால மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை வசதிகள் கொண்ட CEmONC எனப்படும் சிகிச்சை மய்யங்களுக்கு ஆபத்து கொண்ட பிரசவங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
செவிலியர்கள் வீடுகளுக்கே சென்று
கர்ப்பிணிகளைப் பரிசோதிக்கின்றனர். கர்ப்பிணிகளைக் கண்காணிப்பதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம சுகாதார செவிலியர் ஜீவராணி என்பவர் கூறுகையில், “கர்ப்பத்தை எவ்வளவு விரைவில் பதிவு செய்கிறோம் என்பது முக்கியம். விருதுநகர் மாவட்டத்தில் 60-65 நாட்களுக்குள்ளாக கர்ப்பத்தைப் பதிவு செய்வதை உறுதி செய்கிறோம். நாங்கள் கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று இத்தகைய பணிகளை மேற்கொள்வதால், அந்த மக்களுக்கு எங்களை நன்றாகத் தெரியும். அதனால் அங்குள்ள பெண்களுக்குத் திருமணமானதும் கர்ப்பமானால் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்” என்றார்.
இதுதவிர, கர்ப்பிணிகள், தட்டம்மை, டிப்தீரியா என இரண்டு தடுப்பூசிகளை செலுத்துகின்றனரா, ஃபோலிக் அமிலத்திற்கான மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்கின்றனரா என்பதை இந்த செவிலியர்கள் கண்காணிக்கின்றனர். மாதந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து முக்கியமான பரிசோதனைகள் குறித்த தகவல்களை வழங்கவில்லை என்றால், இந்த செவிலியர்கள் வீடுகளுக்கே சென்று பரிசோதிக்கின்றனர். குருதி அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஹீமோகுளோபின், ஹெச்.அய்.வி உள்ளிட்ட பல பரிசோதனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
“அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்போம், அவர்களின் வீடுகளுக்கு மாதம் 4 முறைகூடச் சென்று அவர்கள் எப்படி இருக்கின்றனர் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம். அதிக ஆபத்துகொண்ட கர்ப்பிணிகள், நிச்சயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் பிரசவம் பார்க்க வேண்டும் எனக் கூறுவோம்” என்கிறார் செவிலியர் ஜீவராணி. தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்யும் கர்ப்பிணிகளுக்கு அங்கன்வாடிகள் மூலமாக சத்து மாவு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 2,000 மதிப்பிலான ‘கிட்’, நான்கு மாதத்திலும் பின்னர் ஆறு மாதத்திலும் என இருமுறை வழங்கப்படுகிறது. அந்தப் பெட்டகத்தில், ஒரு கிலோ புரோட்டீன் பவுடர், நெய், ஒரு கிலோ பேரீச்சம்பழம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும், ரூ.18,000 பணம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. குழந்தை பிறந்து ஓராண்டு வரை அக்குழந்தையைக் கண்காணிப்பதும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் பணியாக உள்ளது.
‘மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்’ விருதுநகர் மாவட்டத்தை ‘மாதிரியாக’ கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். “தமிழ்நாட்டில் 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அதில், 59% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 75% பிரசவம் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. அதனால், மருத்துவர்கள், செவிலியர்களின் கண்காணிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சுகப் பிரசவத்தை ஊக்குவிக்கிறோம். மருத்துவ காரணங்களுக்காக சிசேரியன் நடைபெறுவதைத் தவிர்க்க முடியாது. விருதுநகரில் தொடங்கிய இந்த மாற்றம் மற்ற மாவட்டங்களிலும் தென்படத் தொடங்கும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.