வயநாடு, ஆக.2- வயநாடு நிலச்சரிவில் தப்பிப் பிழைத்த 3,100 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மீட்புப்பணியில் தமிழ்நாடு குழுவும் ஈடுபட்டுள்ளது.
வயநாடு மாவட்டம் மேப்பாடி, முண்டக்கை. சூரல் மலை ஆகிய கிராமங்களில் நிலச்சரிவில் சிக்கிய வர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து முழு வீச்சில் போராடி வருகின்றனர்.
முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு சென்று உயிர் தப்பியவர்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவம னைகளில் அனுமதித்து வருகின்றனர்.
நிவாரண முகாம்கள்
மேப்பாடியில் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, கோட்டநாடு உயர்நிலைப் பள்ளி, நெல்லிமுண்டா அம்பலம் அரங்கு, புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, திருக்கைப்பற்றா அரசு உயர்நிலைப் பள்ளி, காப்பங்கொள்ளி அரோமா இன் மவுண்ட் தியோ பள்ளி உள்பட 8 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட 1,270 பேர் மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குழந்தைகள், கர்ப்பிணிகள்
அத்துடன் முண்டக்கை, சூரல் மலை மற்றும் அருகில் உள்ள அட்டமலை ஆகிய பகுதி களிலும் பாதுகாப்பான இடங்களில் நிவாரணமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட பலர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. வயநாடு மாவட்டத்தில் மொத்தம் 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3,100பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு குழு
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் மீட்புப்பணியை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் கோவை மாவட்ட மேனாள் ஆட்சியரும், வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநருமான டாக்டர் சமீரன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் ஆகியோர் தலைமையில் வட்டாட்சியர் விஜயரங்க பாண்டியன், துணை வட்டாட்சியர் சையது இலியாஸ், வீட்டு வசதி வாரிய உதவி செயற் பொறியாளர் விஜயன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 30.7.2024 அன்று வயநாடு சென்றனர். அங்கு அவர்கள் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். அதோடு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும் சந்தித்து பேசினர்.