புதுடில்லி, ஆக. 1- “பொதுமக்க ளிடமிருந்து பணத்தைக் கொள்ளை யடிக்கும் சுங்கச்சாவடிகளை நாடு முழுவதும் அகற்ற வேண்டும்” என்று மாநிலங்களவையில் தி.மு. கழக உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத் தினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:–
சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை என்பது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய அடிப்படை உரிமை. அதிகரித்து வரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையும், ஆண்டுதோறும் சுங்கக் கட்டண உயர்வும் தமிழ்நாட்டு மக்கள் உட்பட நாட்டு மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றி வருகின்றன.
தற்போது, தமிழ்நாட்டில் 65 சுங்கச் சாவடிகள் உள்ளன. குறைந்தது அய்ந்து சுங்கச்சாவடிகள் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ தூரத்திற் குள் உள்ளன, மேலும் 20 க்கும் மேற் பட்ட சுங்கச்சாவடிகள் 60 கி.மீ தூர வரம்பை மீறி அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த சுங்கச் சாவடிகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், சுங்கச் சாவடியை மூடுவதாக உறுதி யளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.
சென்னை -– திருச்சி தேசிய நெடுஞ்சாலை 32இல் உள்ள பரனூர் சுங்கச்சாவடி ஒரு தெளிவான உதாரணம். சி.ஏ.ஜி. அறிக்கையின்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.28.54 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும், மேலும், 40 சதவீத சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க விதிகளை பின்பற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணங்களை ஒழுங்கு படுத்த சுயாதீனமான அமைப்பு என்று எதுவும் இல்லை, மேலும் அவ்வப்போது உயர்த்துவதற்கான தற்போதைய சூத்திரம் மிகவும் தன்னிச்சையானது மற்றும் அடிப் படை இல்லாதது என்பதுடன் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் ஈட்ட உதவுகிறது.
முழு சுதந்திரமும்பொது நலனுக்கு எதிரானது, இது ஏழைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிப்பதாகும். இந்த சுங்கச்சாவடிகளில் முதலீடுகள் மற்றும் வசூலிக்கப்பட்ட தொகை களை பகுப்பாய்வு செய்ய ஒரு சுயாதீன தணிக்கையை மேற் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி, வாகனத்தை பதிவு செய்யும்போதே ஒரு முறைக் கட்டணமாக ஒரு சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம் என்பதை முன்மொழிகிறேன்.
இது சுதந்திரமான இயக் கத்திற்கான உரிமையை மதிக்கும் நியாயமான மற்றும் வெளிப் படையான அமைப்பை உறுதி செய்யும்.
-இவ்வாறு பி.வில்சன் பேசினார்.