தஞ்சாவூர், ஆக.1 டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை நேற்று (31.7.2024) காலை திறக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூலை 28-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், படிப்படியாக உயா்த்தப்பட்டு வருகிறது.
இந்தத் தண்ணீா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கல்லணைக்கு வந்தது. இதையடுத்து, கல்லணையிலிருந்து புதன்கிழமை காலை 9.20 மணியளவில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்டோர் திறந்து வைத்து, மலா்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினா். அப்போது, கல்லணையிலிருந்து வினாடிக்குக் காவிரியில் 1,500 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 500 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 400 கன அடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
ஒரு வாரத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர்
இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் நேரு தெரிவித்தது: இந்தத் தண்ணீா் நிகழ் குறுவை சாகுபடிக்கும், நிலத்தடி நீா் உயா்வதற்கும், ஏரி, குளங்களை நிரப்புவதற்கும் பயன்படும். மேலும், டெல்டா மாவட்டங்களில் 7.95 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலான பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் கடைமடைப் பகுதி வரை தண்ணீா் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வாரத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் சென்றடையும் என்றார் நேரு.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
ரூபாய் 358 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டடம்
முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
சென்னை, ஆக.1 சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவுமுகமை (ஜிகா) நிதியுதவியுடன் ரூ.358.87 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் (பொ) பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர்,செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: நகர்ப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரஅமைப்பு இயக்கம் மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமைஇணைந்து பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வடசென்னை பகுதி ஏழை,எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த மருத்துவமனையில் 6 தளங்களை கொண்ட கட்டடமாகவும், 441 படுக்கைகளுடனும் அமை கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அய்பிரிட் ஆபரேஷன் தியேட்டர் வகையிலான ஒரு கூட்டு அறுவை அரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. 13 அறுவை சிகிச்சை அரங்குகள், எம்ஆர்அய் போன்ற அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் இங்குவரவுள்ளன. பணிகள் முடிவடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரை வில் திறந்து வைப்பார். கேரள மாநிலம் வயநாட்டுக்கு உதகமண்டலம் மாவட்டத்தில் இருந்து 2 வாகனங்களில் 10 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கூடுதல் உதவிகள் தேவைப்பட்டால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.