எழுத்தாளர் நரேந்திரகுமார் அவர்களை நாம் பாராட்டவேண்டும் என்று சொல்வது,
அவருக்காக அல்ல; நமக்காக– இந்த சமுதாயத்திற்காக – இந்தக் கொள்கையினுடைய வெற்றிக்காக!
நல்ல எழுத்தாளர்களும், நல்ல எழுத்துகளும்,
ஆழமான கருத்துகளும் காலத்தை வென்றவை!
சென்னை, ஜூலை 31 ‘‘எழுத்தாளர் நரேந்திரகுமார் அவர்களை நாம் பாராட்டவேண்டும் என்று சொல்வது, அவருக்காக அல்ல; நமக்காக; இந்த சமுதாயத்திற்காக; இந்தக் கொள்கையினுடைய வெற்றிக்காக! நல்ல எழுத்தாளர்களும், நல்ல எழுத்துகளும், ஆழமான கருத்துகளும் காலத்தை வென்றவை! எத்தனை ஆண்டுகளுக்கு முன் எழுதினார் என்பது முக்கியமல்ல; இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னாலும் இன்னமும் அது பேசப்படக் கூடியதாக இருக்கும். என்றைக்கும் அந்தக் கருத்துகள் நின்று வென்று காட்டக் கூடியதாக இருக்கின்றது. ஆகவேதான் அவரை நாம் பாராட்டினோம். பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், அவரை உற்சாகப்படுத்தினோம்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
புதுமை இலக்கியத் தென்றலின்
ஆயிரமாவது நிகழ்வு!
கடந்த 29.7.2024 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் புதுமை இலக்கியத் தென்றலின் ஆயிரமாவது நிகழ்ச்சி யில் சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது சிறப்புரை வருமாறு:
புதுமை இலக்கியத் தென்றல் ஆயிரமாவது நிகழ்ச்சி விழாவிற்குத் தலைமையேற்று, புதுமை இலக்கியத் தென்றலுக்கு அவர்கள் பொறுப்பேற்ற காலத்திலிருந்து நூறு கூட்டங்களுக்கு மேலாகப் பொறுப்போடு நடத்தி வரக்கூடிய ஆற்றல்மிகு தலைவர் பாவலர் அருமை நண்பர் மானமிகு செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களே,
இந்நிகழ்ச்சியில், அவருக்குத் துணையாக சிறப்பாக இருந்து வரக்கூடிய புதுமை இலக்கிய தென்றல் செயலாளர், அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய செயல்வீரர், நல்ல எழுத்தாளர், இளம் சிந்தனையாளர் வை.கலையரசன் அவர்களே,
என்னுடைய வேலையை மிக எளிமையாக ஆக்கிய எங்களுடைய கழகத் துணைத் தலைவர்!
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மிகச் சிறப்பாக, அருமையாக ‘திராவிட மரபணு’ என்ற சிறப்பான நூலை எழுதி, மற்றவர்கள் சிந்திக்கத் துணியாத கோணத்தில் சிந்தித்து, மற்றவர்களால் எழுத முடியாத ஓர் ஆற்றல் மிகுந்த, வலிமை மிகுந்த எழுத்துகள் – வளையாத பேனா – அதேபோல, வலியை யாருக்குத் தந்தாலும், வலிமைமிக்க எழுத்துகள் என்ற ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற அருமை எழுத்தாளர், புதுமைத் தென்றலாகவும் இருக்கும், புயலாகவும் இருக்கும், எல்லாமும் கலந்திருக்கும் அவருடைய எழுத்திலே என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய அளவிற்கு, சில நேரங்களில் தென்றலாக இருக்கிறது படித்த நேரத்தில், சில நேரங்களிலே அது புயலாக இருக்கிறது, சில நேரங்களிலே அது சுனாமியாகவும் இருக்கிறது அவருடைய எழுத்துகள் – அப்படிப்பட்ட ஓர் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளராக இருக்கக்கூடியவரின் நூலினை மிகச் சுருக்கமான நேரத்தில், அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லி, என்னுடைய வேலையை மிக எளிமையானதாக ஆக்கிய கழகத் துணைத் தலைவர் எங்களுடைய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய கவிஞர் அவர்களே,
நம்முடைய அருமை நண்பர் இல.திருப்பதி அவர்கள், குற்றாலத்தில் இந்தப் புத்தகத்தைக் கொடுத்தார்.
பயணம் செய்யும்பொழுதே புத்தகங்களைப் படிக்க ஆரம்பிப்பேன். அதுபோல், இந்த புத்தகத்தையும் படித்தேன். இது எனக்கு இயல்பான உணர்வு – அந்த உணர்வின் அடிப்படையில் வேக வேகமாக இந்தப் புத்தகத்தைப் படித்தேன். இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனைப்பற்றிய பகுதியையும் படித்தேன்.
பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் சிக்கல் நிறைந்த ஒரு புரட்சி எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஆவார். தந்தை பெரியாரையே, எழுத்தாளர்கள் மாநாட்டில் வம்புக்கு இழுத்தவர்.
தந்தை பெரியாரிடத்தில், ஜெயகாந்தன் அவர்களைப் பார்ப்பனர் என்று தவறாகச் சொன்னார், நம்முடைய இயக்கத்தில் இருக்கக்கூடிய முக்கியஸ்தர் ஒருவர்.
நம்முடைய பாராட்டுதலுக்குரிய எழுத்தாளர், புரட்சிகரமான எழுத்தாளர்!
இந்த சிறப்பான நூலை எழுதிய நம்முடைய பாராட்டுதலுக்குரிய எழுத்தாளர், புரட்சிகரமான எழுத்தாளர் நரேந்திரகுமார் அவர்களே,
இந்த அருமையான நூலை வெளியிட்டு, 1200 நூல்களுக்கும் மேல் பல நூல்களை வெளியிட்டு, அவரே ஒரு பாசறை போன்று, தயாரிப்புத் தொழிற்சாலை போன்று திகழ்கிறார். பணம் வருகிறதா, வரவில்லையா என்பதைப்பற்றி கவலையில்லை. அவருடைய ஓய்வூதி யத்தைக்கூட இதில்தான் போடுகிறார்; அவருக்கு என்னென்ன வருவாய் வருகிறதோ, அதையெல்லாம் புத்தகத்திலேதான் போடுகிறார்.
பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம்!
ஏனென்றால், நெல்லைச் சீமையிலே இருந்து வந்தவர்; பல தொல்லைகளைப் பார்த்தவர்; எல்லை களற்ற அவருடைய ஆவேசம் வேக வேகமாக புத்த கங்களை வெளியிட்டு, துணிவான கருத்துகள் – துணிவோடு அதனை எடுத்துச் சொல்லுகிறார். அப்படிப்பட்டவரை இரண்டாவது முறையாக இங்கே அழைத்துப் பாராட்டுகிறோம். அற்புதமான முனைவர் பேராசிரியர்
காவ்யா சண்முகசுந்தரம் அவர்களே,
அருமைத் தோழர் சகோதரர்
இராசா. அருண்மொழி!
அதுபோலவே, இந்நிகழ்ச்சியில் சிறப்பாக வாழ்த்துரை வழங்கிய தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத் துணைத் தலைவர் நம்முடைய அருமைத் தோழர் சகோதரர் இராசா. அருண்மொழி அவர்களே,
இந்நிகழ்வில் சிறப்பாகக் கலந்துகொண்டு, அனை வருடைய சார்பில் உரையாற்றிய வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களே,
நிகழ்வில் கலந்துகொண்டு, நிறைவாக நன்றியுரை யாற்ற விருக்கக்கூடிய இராவணன் மல்லிகா அவர்களே,
உங்கள் எல்லோருக்கும் அன்பான
ஆயிரமாவது நிகழ்ச்சிக்கான வாழ்த்துகள்!
ஒவ்வொருவரையும் தனித்தனியே விளித்தால் நேரமாகும் என்பதினால், மேனாள், இந்நாள், எந்நாளும் தீவிரமாக இருக்கக்கூடிய நம்முடைய கொள்கைப் பொறுப்பாளர்களே, கொள்கை வீரர்களே, அருமைப் புதுமைத் தென்றல் அமைப்பைச் சேர்ந்த தோழர்களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான ஆயிரமாவது நிகழ்ச்சிக்கான வாழ்த்துகள்.
ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லுவார்கள்; நாம் ஆயிரங்காலத்துப் பயிரைப் பார்த்ததில்லை. ஆனால், ஆயிரங்காலத்து உயிராக இருக்கக்கூடிய நம்முடைய மான உணர்ச்சிக்கும், அறிவுக்கும் மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பைத் தரக்கூடிய ஒரு சிறப்பான பாசறைதான், புதுமை இலக்கியத் தென்றல்.
நம்முடைய நாட்டில் எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவருடைய கருத்துகள் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தவை.
‘‘கலைஞரால் எழுத்தாளர் ஆனேன்!’’
‘திராவிட மரபணு’ நூலினை எழுதிய மிகப்பெரிய புரட்சி எழுத்தாளர் இரா.நரேந்திரகுமார் அவர்களின் ஒரு நூலினைப்பற்றி சொன்னோம். அவருடைய இன்னொரு நூல் ‘‘கலைஞரால் எழுத்தாளர் ஆனேன்” என்ற தலைப்பில் தொகுத்திருக்கின்ற நூலாகும்.
ஒவ்வொரு பக்கத்திலும் பெரியார் இருக்கிறார்!
கலைஞரின் நூற்றாண்டு வெளியீடாக இந்நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. நம்முடைய கவிஞர்
கலி.பூங்குன்றன் அவர்கள்கூட சொன்னார், நேரிடையாக பெரியாரைப்பற்றி எழுதவில்லை என்று சில பேர் நினைக்கலாம்; ஆனால், ஒவ்வொரு பக்கத்திலும் பெரியார் இருக்கிறார் என்று அவர் சொன்னதை நீங்களெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்.
ஆனால், அதுபோன்று இல்லாமல், ‘‘கலைஞரால் எழுத்தாளர் ஆனேன்’’ என்ற இந்த நூல், ஏற்கெனவே எழுதியதுதான்; தொகுப்பு நூல்தான்.
மேயர் சா.கணேசன் அவர்கள் நடத்திய ‘உதயக்கதிர்’ ஏடு!
மேனாள் மேயர் சா.கணேசன் அவர்கள் நடத்திய ‘உதயக்கதிர்’ என்ற வெளியீட்டில், அப்பொழுதே ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார், அக்டோபர், 1982 ஆம் ஆண்டில்.
அவர் எப்படிப்பட்டவர், நரேந்திரகுமார் எந்தப் பாசறையில் இருந்து உருவானவர் அவர் என்பதற்கு அடையாளமாக, அறிவாசான் அய்யா, அன்பார்ந்த அண்ணா என்கிறார்.
அறிவும், அன்பும் மிகவும் முக்கியம்.
அறிவும், அன்பும் இணைந்துதான் அய்யா – அண்ணா!
அந்த இரண்டையும் இணைத்ததினால்தான், நூற்றாண்டு விழா நாயாராக இருக்கக்கூடிய கலைஞர் அவர்கள், மிகப்பெரிய அளவிற்கு, ஒரு திகைப்போடு எதிரிகளுக்கு இருக்கிறார்.
‘‘கலைஞரால் எழுத்தாளர் ஆனேன்’’ என்ற நூலிலிருந்து, நம்முடைய எழுத்தாளரின் எழுத்து நடையைப் பார்க்கவேண்டும் என்பதற்காக சிலவற்றை சொல்கிறேன்.
கருத்துக்குத்தான் அய்யா அவர்கள் எப்பொழுதுமே மரியாதைக் கொடுப்பார்!
‘‘எங்கள் நெஞ்சக் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் இதய வேந்தர்களுக்குப் பிறந்த நாள். கல்லை கட்டாந்தரையாக்கி, கட்டாந்தரையை காடாக்கி, காட்டை கழனியாக்கி, கழனியில் கதிரறுத்த காவிய நாயகர்களுக்குப் பிறந்த நாள்.”
எவ்வளவு அற்புதமான சொல்லாட்சி. அது வெறும் சொற்சிலம்பம் மட்டும் அல்ல. அதோடு கருத்து என்பது மிகவும் முக்கியம். கருத்துக்குத்தான் அய்யா அவர்கள் எப்பொழுதுமே மரியாதைக் கொடுப்பார், இலக்கியத்தில்கூட.
திருச்சியில் நடைபெற்ற எழுத்தாளர்கள் மாநாட்டில்தான் ஜெயகாந்தன், தந்தை பெரியாரிடம் வாதம் செய்தார்.
அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் உரை யாற்றுகிறார். அவருடைய உரையின் தொடக்கத்தைப் பார்த்து எல்லோரும் வியந்து, அசந்து போனார்கள்.
‘‘நான் எழுத்தாளனும் அல்ல; பேச்சாளனும் அல்ல; நான் ஒரு கருத்தாளன்!’’
அய்யா அவர்கள் சொன்னார், ‘‘என்னை, தமிழ்நாடு எழுத்தாளர்கள் மாநாட்டிற்கு அழைத்திருக்கிறீர்கள். நான் எழுத்தாளனும் அல்ல; பேச்சாளனும் அல்ல” என்று சொன்னார்.
தந்தை பெரியாரைப்போல எழுதிக் குவித்தவர்கள் யாரும் கிடையாது; அவர் போன்று பேசுவதில் ஈடு இணை யாரும் கிடையாது.
அப்படிப்பட்டவர், தன்னைப்பற்றி சுய அறிமுகம் செய்துகொள்கின்ற நேரத்தில் சொல்கிறார், ‘‘நான் எழுத்தாளனும் அல்ல; பேச்சாளனும் அல்ல; நான் ஒரு கருத்தாளன்’’ என்றார்.
ஏனென்றால், கருத்துக்குத்தான் தந்தை பெரியார் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்.
உண்மையை, அதன் நிர்வாணத் தன்மையிலே பார்க்கவேண்டும்!
மனிதனுக்கு அடிப்படை உடல்; அதற்கு வேண்டியது உடைதான். மனிதனை ஆய்வு செய்யவேண்டுமானால், உண்மையை, அதன் நிர்வாணத் தன்மையிலே பார்க்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொல்வார்.
அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்கள் வழமையான உடையை அணிந்துகொண்டிருக்க முடியுமா?
அறுவை சிகிச்சைக் கூடத்திற்குச் செல்லும்பொழுது, கூச்சம் நாச்சம் கிடையாது; வெட்கம் கிடையாது. ஏனென்றால், அங்கே போகின்ற நோக்கமே வேறு.
அதுபோன்று ஆய்வுக்கூடம் என்று வரும்பொழுது, அது எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும்பொழுது இந்தக் கருத்தைச் சொல்கிறார்.
‘‘பெரியார் என்றால், அண்ணா நினைவிற்கு வருவார்; அண்ணா என்றால், பெரியார் நினைவிற்கு வருவார். அதனால்தான் என்னவோ, இருவர் பிறந்த நாள்களும் அடுத்தடுத்து வருகின்றன. ஆணிக்குப் பின்னர், ஆடி வருவதுபோல” என்று அவர் உதாரணத்தைச் சொல்லுகிறார்.
‘‘பெரியார் இராமசாமி கல்விக் கூடம்!’’
நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். 1967 இல் அண்ணா அவர்கள் வெற்றி பெற்று, முதல மைச்சராகப் பொறுப்பேற்று மகிழ்ச்சியாக இருக்கின்ற நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில் ஒரு பள்ளிக்கூடம் கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதலமைச்சர் அண்ணா அவர்கள்தான், ‘‘பெரியார் இராமசாமி கல்விக் கூடம்” என்ற கூடத்தைத் திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அய்யாவும் இருக்கிறார்.
அதுதான் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அய்யா, அண்ணா கலந்துகொண்டு பேசிய ஒரு பொது நிகழ்ச்சியாகும்.
அந்த நிகழ்ச்சியில் முதலில் உரையாற்றிய நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்றால், ‘‘இந்தக் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது; அண்ணாவும், அய்யாவும் அருகருகே இருப்பதைப் பார்க்கும்பொழுது” என்றனர்.
அவர் உள்ளத்தில் நான் இருந்தேன்;
என் உள்ளத்தில் அவர் இருந்தார்!
அதற்குப் பிறகு அண்ணா உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘இங்கே உரையாற்றிய நண்பர்கள் தவறாகச் சொன்னார்கள்; நாங்கள் எப்பொழுது பிரிந்திருந்தோம்; இப்பொழுது சேருவதற்கு. அவர் உள்ளத்தில் நான் இருந்தேன்; என் உள்ளத்தில் அவர் இருந்தார்; எப்போதும் இருப்போம்” என்றார்.
எனவே, நம்முடைய நரேந்திரகுமார் அவர்கள் எழுதுகிறார் என்று சொன்னால், அது ஏதோ அவருடைய கற்பனையோ, மற்றவையோ அல்ல.
பேராசான் எழுப்பிய பெருமுழக்கங்கள்!
மேலும் நரேந்திரகுமார் தொடருகிறார், ‘‘பெரியார், ஓ! அவர் ஓர் இனத்தின் ஒட்டுமொத்த வரலாறு. அவருடைய முனகலே பகைவருக்கு முழக்கமாகத் தென்படும். அவரது முழக்கமோ, பேரிடி, பிரளயம்.
அடிவானிலே எழும் பரிதி, ஆயிரம் ஆயிரம் கதிர்களை அள்ளி அள்ளி இறைப்பதைப்போல, வீசி வரும் காற்றிலே வெண்தாடி நடனமிட – அந்தப் பேராசான் எழுப்பிய பெருமுழக்கங்கள், சில்வண்டு பிறவிகளை சிம்புட் பறவைகளாய் சிங்கார சிறகறுத்து சீராகப் பறக்க வைத்தன.”
இதுபோன்ற நடை மிக வேகமாக இருக்கக்கூடிய மிகப்பெரிய கருத்தோட்டம் – இவையெல்லாம் இன்றைய காலகட்டத்தில் புதுமைத் தென்றலாக நமக்குக் கிடைக்கின்றன.
ஆகவேதான், இப்படிப்பட்டவர்களை நாம் பாராட்டவேண்டும் என்று சொல்வது, அவர்களுக்காக அல்ல; நமக்காக – இந்த சமுதாயத்திற்காக – இந்தக் கொள்கையினுடைய வெற்றிக்காக!
‘‘நான் பெரியாரிடம் சிக்கிக்கொண்டேன்!’’ – அண்ணா!
அண்ணா அவர்கள் திருச்சியில் ஒருமுறை உரையாற்றும்பொழுது சொன்னார்,
நான் கல்லூரி படிப்பை முடித்தவுடன், அய்யா அவர்கள் என்னை அழைத்து, ‘‘என்ன செய்யப் போகி றீர்கள்? வேலைக்குப் போகப் போகிறீர்களா?” என்று கேட்டார்.
‘‘இல்லை, நான் வேலைக்குப் போகவில்லை அய்யா!” என்றேன்.
‘‘அப்படியா? சரி, என்னுடன் வந்துவிடுங்கள்” என்று சொன்னார் அய்யா.
‘‘நான் பெரியாரிடம் சிக்கிக்கொண்டேன்!” என்றார் அண்ணா அவர்கள்.
நல்ல எழுத்தாளர்களும், நல்ல எழுத்துகளும், ஆழமான கருத்துகளும் காலத்தை வென்றவை!
ஒரு நல்ல வாய்ப்பாக, எழுத்தாளர் நரேந்திரகுமார் அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் எழுதியவற்றை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் தொகுத்து வரும்பொழுது, அன்றைக்கு அது கவனத்தை ஈர்த்ததா? இல்லையா? என்பதைப்பற்றிக் கவலையில்லை. நல்ல எழுத்தாளர்களும், நல்ல எழுத்துகளும், ஆழமான கருத்துகளும் காலத்தை வென்றவை!
ஆகவேதான், எத்தனை ஆண்டுகளுக்கு முன் எழுதினார் என்பது முக்கியமல்ல; இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னாலும் இன்னமும் அது பேசப்படக் கூடியதாக இருக்கும்.
என்றைக்கும் அந்தக் கருத்துகள் நின்று வென்று காட்டக் கூடியதாக இருக்கின்றன என்பதற்கு இவ்விழா அடையாளம். ஆகவேதான் அவரை நாம் பாராட்டினோம். பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், அவரை உற்சாகப்படுத்தினோம்.
(தொடரும்)