சக்ரதர்பூர், ஜூலை 30 இன்று (30.7.2024) அதிகாலை ஜார்க்கண்டில் உள்ள சக்ரதர்பூர் அருகே மும்பை-ஹவுரா மெயிலின் சுமார் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது இதுவரை 3 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் விடிந்த பிறகே வேகமெடுக்கத்துவங்கியதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது 20 க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வரு கின்றன.
தென்கிழக்கு ரயில்வேயின் (SER) சக்ரதர்பூர் பிரிவில் உள்ள படபாம்பூ அருகே அதிகாலை 3.45 மணியளவில் விபத்து ஏற்பட்டது. நாக்பூர் வழியாக 22 பெட்டிகள் கொண்ட 12810 மும்பை-ஹவுரா மெயில் படபாம்பூ அருகே தடம் புரண்டது. இவற்றில் 16 பயணிகள் பெட்டிகள், ஒரு ஜெனரேட்டர் பெட்டி மற்றும் ஒரு பேண்ட்ரி கார் தடம் புரண்டன என்று மூத்த தென்கிழக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக சக்ரதர்பூருக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு படபாம்பூவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஹவுராவில் இருந்து மும்பை சென்ற ரயில் ஜார்க்கண்டில் தடம் புரண்டு 2 பேர் உயிரிழந்தது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “நான் சீரியசாக கேட்கிறேன்.. இதுதான் ஆட்சியா? ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்தால் மரணங்கள், படுகாயங்கள் நடக்கின்றன. எவ்வளவு காலம் இதை நாம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம். ஒன்றிய அரசின் அலட்சியத்திற்கு ஒரு முடிவே இல்லையா?” என மம்தா காட்டமாக தெரிவித்துள்ளார்.
சவுத் பீகார் எக்ஸ்பிரஸ் (13288) மாற்றுப் பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசன்சோல் டாடா மெமும் சிறப்பு ரயில் (08173) ஆத்ரா வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 19 ஆம் தேதி (ஜூலை 19) சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகர் வரை செல்லும் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சின் 8 பெட்டிகள், உத்தரப் பிரதேசத்தின் ஜுலாஹி ரயில் நிலையத்துக்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பு உள்ள பிகவுரா என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தத் துயரம் விலகுவதற்குள் ஜார்க்கண்டில் மீண்டும் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.