உ.பி.யின் அடுத்த கட்ட மதவெறித் தாண்டவம்!

3 Min Read

மசூதி மற்றும் தர்காக்களை திரைச் சீலை கொண்டு மூடிய உ.பி., உத்தராகண்ட் மாநில நிர்வாகங்கள், சிவபக்தர்களின் காவடி பயணத்தையொட்டி போட்ட உத்தரவுகள் பெரும் பிரச்சினையைக் கிளப்பி உள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் காவடி செல்லும் சாலையில் உள்ள மசூதிகள், தர்கா உள்ளிட்டவை திரைப்போட்டு மூடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் ஜூலை மாதம் பவுர்ணமி முதல் ஆகஸ்ட் மாத பவுர்ணமிவரை ஊரில் உள்ள ஆறு மற்றும் குளத்து நீரை தூக்கிக் கொண்டு அரித்துவார் சென்று அங்குள்ள லிங்கத்தின் மீது ஊற்றி விட்டு, அங்கிருந்து கங்கை நீரை ஊருக்குக் கொண்டு வந்து ஊரில் உள்ள சிவன் கோவிலில் ஊற்றுவார்கள்; இந்தக் காவடி பயணம் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிகவும் பிரபலம்.

இந்த ஆண்டு ஷ்ரவண மாதம்; ஜூலை 22ஆம் தேதி இந்த யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை இந்த யாத்திரை என்பது நடைபெற உள்ளதாம்.

இந்தக் காவடி பயணத்தையொட்டி அம்மாநில அரசுகள் போட்ட உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதாவது காவடிகள் செல்லும் வழிகளில் உள்ள உணவகங்களின் பெயர் பலகைகளில் உரிமையாளரின் பெயர் விவரம் குறிப்பிடப்பட வேண் டும் என்று உத்தரப் பிரதேச சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் மற்றும் உத்தராகண்ட்

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் உத்தரவிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனாலும் உத்தரவுகள் திரும்பப் பெறப்படவில்லை.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் அந்த விவகாரம் முடிவுக்குவந்தது.

இந்நிலையில், தான் உத்தராகண்ட்டின் அரித்து வாரில் நடந்த நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் அரித்துவாரில் காவடிகள் செல்லும் சாலையில் உள்ள உள்ள மசூதிகள் மற்றும் தர்காக்கள் திரைப்போட்டு மூடப்பட்டுள்ளன. மஜார் மற்றும் மசூதிகள் வெளியே தெரியாத அளவுக்குக் திரைச்சீலை போட்டு மூடப்பட்டுள்ளன.

இதுதொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இஸ்லாமிய அமைப்பினர் இதற்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும் மசூதி மற்றும் தர்க்காக்களை மறைக்க கட்டப்பட்டுள்ள திரைச்சீலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

முன்னதாக இதுபற்றி அம்மாநில அமைச்சர் சத்பால் மகராஜ் கூறுகையில், ‘‘காவடி எடுத்துச் செல்லும் பக்தர்களின் உணர்வுகளை மதிப்பதற்காகவும், அமைதியை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. புதிதாக கட்டடங்கள் கட்டும்போது திரைச்சீலைகள் போட்டு மறைப்பது போன்ற நடவடிக்கை தான்” என்று இதனை நியாயப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நயீம் குரேஷி கூறுகையில், “இதுபோன்ற மோசமான நிலையை நான் வாழ்நாளில் பார்த்தது இல்லை. முஸ்லிம்களாகிய நாங்கள் எப்போதும் சிவபக்தர்களை காவடி திருவிழாவிற்கு வரவேற்கிறோம், அவர்களுக்குப் பல்வேறு இடங்களில் சிற்றுண்டி ஏற்பாடு செய்கிறோம். அரித்வாரில் சிற்றுண்டி வழங்குவது என்பது இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்படி இருக்கும்போது திரைச்சீலை கலாசாரம் வருத்தமளிக்கிறது” என விமர்சனம் செய்தார்.

பி.ஜே.பி. ஆட்சியில் குறிப்பாக உ.பி. சாமியார் ஆட்சியில் மதவெறிக் கோரத் தாண்டவம் – நிர்வாண ஆட்டம் போடுகிறது.

மதம் – மத உணர்வு என்பது தனிப்பட்டவரின் உரிமை. இதில் அரசு தலையிடுவது அடாவடித்தனமே!
அரசமைப்புச் சட்டத்தின் பேரில் உறுதிமொழி எடுத்துப் பதவியை ஏற்றவர்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான மதச் சார்பின்மையை காலில் போட்டு மிதிப்பது என்பது மிகப் பெரிய அராஜகம் – பாசிசம்!
உத்தரப்பிரதேச மக்கள் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சரியான சவுக்கடித் தீர்ப்புக் கொடுத்தும் – புத்தி கொள் முதல் பெறவில்லை என்று தெரிகிறது.

நீதிமன்றங்களே தானாக முன் வந்து இதற்கொரு முடிவை ஏற்படுத்தாவிட்டால் நாடு ரணகளத்தின் பக்கம் தள்ளப்படக் கூடிய அபாயம் இருக்கிறது – எச்சரிக்கை!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *