ப.சிதம்பரம் கேள்வி
மானாமதுரை, ஜூலை 30 மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், இஞ்சாலைக் கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ப.சிதம்பரம் வழங்கிய ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத் திறப்பு விழா 28.7.2024 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட் சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.
மேனாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் ஆரம்ப சுகாதார நிலைய கட் டடத்தை திறந்து வைத்துப் பேசியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசின் பங்குத் தொகையாக அறிவித்த நிதியை இது வரை வழங்கவில்லை. தற்போது மெட்ரோ ரயில் திட்டம் மாநில அரசின் நிதியில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்துக்கான தனது பங்குத் தொகையை வழங்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. இது நாட்டுக்கு சீர்கேட்டை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
விழாவில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்திசிதம்பரம், மானா மதுரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னையில் ஒரு வாரத்தில் குண்டர் சட்டத்தில் 16 பேர் சிறை
சென்னை, ஜூலை 30 சென்னையில் கடந்த ஒரே வாரத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 22 முதல் 28-ஆம் தேதி வரையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என 16 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் கூறுகையில், “பொது மக்களின் நலனே முக்கியம். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.