பிணை மனுக்களை கையாளுவது எப்படி?
நீதிபதிகளுக்கு விளக்கிய தலைமை நீதிபதி!
பெங்களூரு, ஜூலை 29 ‘பிணை மனுக்களின் விசாரணை யின் போது நீதிபதிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும்’ என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
கருநாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சந்திரசூட் பேசியதாவது:
விசாரணை நீதிமன்றங்களில் பிணை பெற வேண்டிய வர்கள், அது கிடைக்காமல் போனால், அவர்கள் உயர்நீதி மன்றங்களை நாடுவார்கள். உயர்நீதிமன்றங்களில் பிணை கிடைக்கவில்லை என்றால், இதன் விளைவாக, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இந்தத் தாமதம் மனுதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை அதிகரிக்கிறது.
பிணை மனுக்களின் விசாரணையின் போது நீதிபதிகள் பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வழக்கின் உண்மை தன்மையையும் அறிய பொது அறிவு தேவை. ஒவ்வொரு வழக்கின் நுணுக்கங்களையும் நீதிபதிகள் நன்கு ஆராய வேண்டும். எங்களுக்கு முன் வைக்கப்படும் மிகச்சிறிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லாதது.
இவ்வாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார்.
டில்லி பயிற்சி மய்யத்தில் மூன்று மாணவர்கள் பலி
பாதுகாப்பற்ற கட்டுமானத்திற்கு சாதாரண மக்கள் உயிரிழப்பதா?
ராகுல் காந்தி கண்டனம்
புதுடில்லி, ஜூலை 29- தலைநகர் டில்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டில்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் தனியார் அய்ஏஎஸ் பயிற்சி மய்யத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்துவந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து பயிற்சி மய்யத்தில் பயின்று வந்த 3 பேர் பலியானது தொடர்பாக அய்.ஏ.எஸ் பயிற்சி மய்ய உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். டில்லியில் உள்ள வேறு ஏதேனும் அய்.ஏ.எஸ் பயிற்சி மய்யங்களில் தரைதளம் இருந்தாலும் அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்றும் டில்லி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- ‘‘டில்லி தனியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் கீழ்தளத்தில் வெள்ள நீரில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்தது, மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தது மிகவும் வாய்ப்புக்கேடானது. டில்லி மழையில் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமை, அதை அமைத்து தருவது அரசாங்கத்தின் பொறுப்பு. பாது காப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத்திட்டமிடல், நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை உள்ளிட்டவற்றை பெற சாமானியக் மக்கள் ஒவ்வொரு நிலையிலும் தங்கள் உயிரை நீத்து விலை கொடுக்கிறார்கள். டில்லி தனியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தில் 3 மாணவர்கள் உயிரி ழப்புக்கு நிர்வாக உட்கட்டமைப்பின் ஒட்டுமொத்த தோல்வியே காரணமாகும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடவுள் விட்ட வழியோ!
திருத்தணி பக்தர் காவடி
எடுத்துச் சென்ற பொழுது
ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருப்பத்தூர், ஜூலை 29- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பி.கஸ்பா கே.எம்.சாமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 45), கட்டட மேஸ்திரி. இவருடைய மனைவி கவி யரசி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஜெகன் ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதம் பிறந்ததில் இருந்து நோன்பு இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 27.7.2024 அன்று மாலை அவர் காவடி எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் திருத்தணிக்கு சென்றார். வாலாஜா பேருந்து நிலையத்தில் இருந்து மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் பாதியில் திரும்பி மீண்டும் ஆம்பூருக்கு வந்துள்ளார்.
பின்னர் ஆம்பூர் ரயில் நிலையம் அருகில் நடராஜபுரம் பகுதிக்கு சென்று சென்னை- பெங்களூரு மார்க்கத்தில் சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உஷாராணி மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி, உடற்கூராய்வி்ற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஜெகன் காவடியை சாலையோரம் வைத்து விட்டு தண்டவாளம் அருகில் நின்று கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி அப்பகுதி மக்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.