புதுடில்லி, ஜூலை 28- அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
உத்தரப் பிரதேசத்தில் கான்வா் (காவடி) யாத்திரையையொட்டி, உணவகங்களை நடத்தும் இசுலாமிய உரிமையாளா்கள் தங்கள் பெயரை குறிப்பிட மாநில அரசு கட்டாயப்படுத்துவதாக வெளியான அறிக்கை குறித்து அமெரிக்க செய்தித் தொடா்பாளர் மேத்யூ மில்லரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவா், ‘இதுதொடர்பாக வெளியான அறிக்கைகளையும், இந்த விதிகளை அமல்படுத்த இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதையும் நாங்கள் அறிந்துகொண்டோம்.
தற்போது இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை. உலகில் உள்ள அனைவருக்கும் மதச் சுதந்திரம் உள்ளது என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு. எனவே, அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்துள்ளோம்’ என்றார்.