வல்லம், ஜுலை 27 புதிய தலைமுறை தொலைக்காட்சியும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து வீட்டுக்கொரு விஞ்ஞானி 2024 நிகழ்வினை 20.07.2024 அன்று பெரியார் மணியம்மை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சையின் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் தங்களுடைய அறிவியல் படைப்புகளுடன் வருகை புரிந்தனர்.
தஞ்சை, கும்பகோணம், பட்டுக் கோட்டை, புதுக்கோட்டை என 42 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கெடுத்தும் 250-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. போட்டியானது (ஜீனியர்) இளநிலை 6-ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும் (சீனியர்) முதுநிலை 9 -12 முறையே பங்கு பெற்றனர். இளநிலை அளவில் பங்கெடுத்த மாணவர்களின் படைப்புகளை டாக்டர் ஏ சத்யா, டாக்டர் னு மணிவண்ணன், டாக்டர் அன்பரசு ஆகிய பேராசிரியர்கள் மதிப்பீடு செய்தனர். மேல்நிலை அளவில் உள்ள படைப்புகளை டாக்டர் மு கேசவன், டாக்டர் னு ஜெயசிம்மன், டாக்டர் குமார் ஆகிய பேராசிரியப் பெருமக்கள் மதிப்பீடு செய்தனர். படைப்புகளானது இயற்கை பாதுகாவலர்கள், நிரந்தர தீர்வுகள், நிலம் சார்ந்த தரவுகள், புதுமை பாதுகாப்பு வளங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கும், பாதுகாப்பிற்கும் உதவிகரமான கண்டுபிடிப்புகள் என்ற வகையில் அமைந்திருந்தது.
மாலை 3 மணியளவில் பரிசளிப்பு நிகழ்வானது தொடங்கியது. வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சி குறித்த அறிமுகத்தினை கல்வியியல் துறை முதுநிலை துணைப் பேராசிரியர், முனைவர் செ.அனுசுயா பிரியா செய்தார். வரவேற்புரையினை இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் காயத்ரி அவர்களும், தலைமையுரையினை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேரா பூ.கு.சிறீவித்யா அவர்களும் உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் விழுப்புரம் கிராம தொழில்நுட்ப பள்ளியின் நிறுவனர் ரமேஷ் இயந்திரங்கள் மற்றும் புதுமை அறிவியல் ஆய்வகம் குறித்த தகவல்களை சிறப்புரையாக வழங்கினார். இளநிலை அளவில் பரிசு பெற்ற மாணவர்களுக்கும் முதுநிலை அளவில் பரிசு பெற்ற மாணவர்களுக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மேலாளர் எம்.முத்துக்குமார் அவர்களும், இருநிலை நடுவர்களும் சிறப்பு விருந்தினர் ரமேஷ் அவர்களும் வழங்கினர். இளநிலை அளவில் தஞ்சை அமிர்த வித்யாலயம் பள்ளியின் மாணவர்கள் எம்.கிருத்திக் மற்றும் ஜி.ரித்திக் முதல் பரிசினை தட்டிச் சென்றனர். இரண்டாம் பரிசானது தஞ்சை பிளாசம் புளு பெல் அகாடமியின் எம்.யாழிசை மற்றும் கே.ஆஷ்மா என்ற மாணவிகளும், மூன்றாம் பரிசினை கும்பகோணம் சென். ஆனிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் எம்.முகம்மது ஆசிப் என்ற மாணவனும் வெற்றி பெற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.
முதுநிலை அளவில் தஞ்சை மார்னிங் ஸ்டார் மெட்ரிக்பள்ளி மாணவர்கள் எஸ்.சிறீனிகா மற்றும் எஸ்.பிரகாசினியும் முதல் பரிசு பெற்றனர். இரண்டாம் பரிசினை தஞ்சை கல்யாணசுந்தரம் அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளியின் மாணவர்கள் கே.அருள்மொழிராஜன் மற்றும் எஸ்.அஜய் ஆகியோர் பெற்றனர். மூன்றாம் பரிசினை தஞ்சை நீலகிரி கார்ப்பரேசன் உயர்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.சந்தோஷ் பெற்றார். மேலும் ஒரு தஞ்சை அரசு மரியல் பள்ளி மாணவர்களான ஆர்.தீபனா மற்றும் அஸ்வரன்ராஜ் ஆகியோருக்கு சிறப்புப்பரிசும் வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக வேதியியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் அ.மனோகர் நன்றியுரை கூறினார். மேலும் இந்நிகழ்வானது இயற்பியல் தலைவர் முனைவர் பி.காயத்ரி அவர்களும் வான்வெளிப் பொறியியல் துறைத் தலைவர் கார்த்திக் சுப்ரமணியன் அவர்களும் மேலும் இந்நிகழ்வினை இயற்பியல், வேதியியல் கணிதம் மற்றும் கல்வியியல் துறைகள் இணைந்து ஒருங்கிணைப்பு செய்து நடத்தியது.