திருமலை, ஜூலை 27– திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு சமாச்சாரத்தில் புது பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.. இதற்கு என்ன காரணம்?
திருமலை திருப்பதி ஏழுமலையான் என்றாலே, தேவஸ்தானத்தின் பிரசாதமாக எனப்படும் லட்டுதான் நம்முடைய நினைவுக்கு வரும்.. தேவஸ்தானத்தின் சார்பில் பிரத்யேகமாக இதற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில், ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய கட்டணம் செலுத்தி பக்தர்கள் லட்டு வாங்கி செல்வது வழக்கம்.
திருப்பதி லட்டுகள், ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்க காரணமே, உயர் தரத்துடன் இந்த லட்டுகள் தயாரிக்கப்படுவதுதான்.. ஆனால், சமீபகாலமாகவே, இந்த லட்டுகளின் தரமும் சுவையும் குறைந்துவிட்டதாகவும், தேவஸ்தானத்திலிருந்து வாங்கி வரும் லட்டுகள் சீக்கிரத்திலேயே கெட்டுப்போய்விடுவதாகவும் பக்தர்கள் அதிருப்திகளை தெரிவித்து வந்தனர். அதனால் அதன் தரத்தையும் கண்டறிய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தபடியிருந்தனர்.
இதனால், தேவஸ்தானமும், தரமான நெய்யைக் கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.. மேலும், லட்டு தயாரிக்கப்பயன்படும் நெய்யினை, தேசிய அங்கீகார வாரியத் திற்கு ஆய்வக சோதனைக்கும் அனுப்பி வைத்து, அதன் தரத்தை பரிசோதித்தது.
அப்போதுதான், தனியார் நிறுவனம் அனுப்பும் நெய்யில் கலப்படம் இருப்பது தெரிய வந்துள்ளது.. அதாவது அந்த நிறுவனம் அனுப்பிவைக்கும் நெய்யில், காய்கறிக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாம்.. இதைக்கேட்டு தேவஸ்தானமே அதிர்ச்சியடைந்தது. உடனடியாக அந்த நிறுவனத்துக்கும் தடையை விதித்தது. அத்துடன், அந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட நெய்யையும் திருப்பி அனுப்பிவிட்டது.
இதுகுறித்து தேவஸ்தான தலைமை அதிகாரி சியாமளா ராவ் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, “லட்டு பிரசாதத்தின் தரம், சுவை குறைந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற ஊழியர்கள், நிபுணர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அப்போதுதான் நெய்யின் தரம் குறைந்ததால் தரம், சுவை, மணம் குறைந்ததாக சொன்னார்கள்.
இதுதொடர்பான ஆய்விலும் இதெல்லாம் உண்மை என தெரிய வந்தது. லட்டு பிரசாதத்துக்கு டெண்டர் எடுத்திருக்கும் நிறுவனம் தரமற்ற நெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. எப்போதுமே நெய்யை வாங்கும்போது FSSIA போன்ற சான்றிதழ்கள் வைத்திருக்கிறதா என் றெல்லாம் பார்ப்பது வழக்கம்.. இதையும் மீறி ஏதாவது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், பரிசோதனை செய்வோம்.
சம்பந்தப்பட்ட நிறுவனத் துக்கு 8.50 லட்சம் லிட்டர் நெய் வேண்டும் என்று தேவஸ்தானம் ஆர்டர் தந்திருந்தது.. இதுவரை இந்நிறுவனம் 68,000 கிலோ நெய்யை அனுப்பியுள்ளது. இதில் 20 ஆயிரம் கிலோ நெய் மிகவும் தரமற்றதாக இருந்ததால் அதனை திருப்பி அனுப்பி வைத்துள்ளோம். நெய்யில் காய்கறி கொழுப்பு சேர்த்திருப்பதும் தெரியவந்தது. வனஸ்பதியை கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 5 நிறுவனங்கள் தேவஸ்தானத்துக்கு தரமான நெய்யை அனுப்ப டெண்டர் எடுத்துள்ளன.
இதற்காக அந்நிறுவனத்துக்கு தாக்கீதும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கிரிமினல் நடவடிக்கையும் மேற்கொள்ளப் போகிறோம்.. விதிகளை மீறியதற்காக அந்த நிறுவனம் டெண்டரில் பங்கேற்காத வகையில் தடை செய்யப்பட்டுள்ளது. தரமான நெய் கொள்முதல் செய்வது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும். இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது நெய் சப்ளை செய்யும் நிறுவனங்களை அழைத்து, தரமான நெய் வழங்க அறிவுறுத்தியுள்ளோம். மற்ற நிறுவனமும் தரம் குறைந்து வழங்குவது தெரிந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஆனால், சம்பந்தப்பட்ட தமிழ்நாடு நிறுவனமோ, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதாம்.. “நாங்கள் உற்பத்தி செய்யும் நெய் தரமானதாக உள்ளது. எங்கள் தரத்தில் எந்தப்பிரச்னையும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்து உள்ளதாம்.