சிலருக்குத் தம் பெயரோடு, ஊர் பெயரும் இணைந்திருக்கும். அப்படியான சுவையான வரலாற்று நிகழ்வுகளைத் தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்!
தங்களின் பிறந்த ஊர் மற்றும் பெற்றோர் குறித்துக் கூறுங்கள்?
என் பெயர் மலர்விழி. 1952ஆம் ஆண்டு பிறந்தேன். வயது 72. சொந்த ஊர் தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம். பி.எஸ்.சி. வரை படித்துள்ளேன். தந்தை பெயர் பி.கே.இராமமூர்த்தி. “பெண்ணாகரம் இராமமூர்த்தி” என இயக்கத்தில் அழைப்பார்கள். அம்மா பெயர் சாந்தா. எங்கள் குடும்பமே இயக்க வழியில் வந்ததுதான்!
ஓ… அப்படியானால் சிறு வயதில் இருந்தே நீங்கள் கொள்கையில் இருக்கிறீர்களா?
ஆமாம்! எனது தந்தையார் பெரியார் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள். பெரியாரும், மணியம்மையார் அவர்களும் எங்கள் வீட்டிற்கு இரண்டு, மூன்று முறை வந்து தங்கி இருக்கிறார்கள். எனக்கு மற்றும் எனது இரு சகோதரர்கள் கவுதமன், புகழேந்தி மூவருக்குமே பெரியார் தான் பெயர் வைத்தார்.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அப்போது நான் 7ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். பெரியார் எங்கள் வீட்டுத் திண்ணையில் இருந்தார்கள். அப்போது சாந்தா, சாந்தா என மெல்லிய குரலில் என் அம்மாவை பெரியார் அழைத்தார்கள். “எள்ளுருண்டை எடுத்து வா”, என்று சொன்னார்கள். அம்மா எடுத்துக் கொண்டு சென்றதும், வாங்கி தலையணை அடியில் வைத்துக் கொண்டார்கள். வீட்டிற்குள் இருந்த மணியம்மையார் அவர்கள், இதைக் கவனித்துவிட்டார்கள். அடிக்கடி சாப்பிடக் கூடாது எனக் கடிந்துக் கொண்டார்கள். அப்படியான செயல்களைப் பார்க்கும் வாய்ப்பை நாங்கள் பெற்றுள்ளோம்.
அம்மா குறித்த நினைவுகளை மேலும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
அம்மாவுக்குத் தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கும். பெரியார் எங்கள் வீட்டில் இருந்த சமயத்தில், அம்மாவைப் பார்த்து, “சாந்தா முடி இவ்வளவு இருக்கக் கூடாது. உடனே ‘கிராப்’ வெட்டிக் கொள், 25 ரூபாய் பரிசு தருகிறேன்”, என்றார். சுற்றியிருந்த அனைவருக்கும் ஒரே சிரிப்பு.
எங்களைத் தன்னம்பிக்கையோடு வளர்த்தவர் எங்கள் அம்மா! நான்கு தலைமுறையாகத் தொடரும் எங்கள் குடும்பங்களின் அஸ்திவாரம் அம்மாதான்! சாந்தா அவர்கள் மிகச் சிறந்த இயக்கவாதி என ஆசிரியர் குறிப்பிடுவார்கள். பிள்ளைகள் எல்லாம் நன்கு படித்து ஆங்கிலம் பேசத் தொடங்கிவிட்டனர். என்னிடமும் பேசினால் நான் அதைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என தமது 65ஆம் வயதில் “லிப்கோ டிக்சனரி” வாங்கி அம்மா படித்தார்கள். எனது தந்தையார் மறைந்த 15 ஆவது நாளில், மகளிர் சுற்றுப்பயணம் ஒன்று தொடங்கியது. அதில் பங்கேற்க அம்மா புறப்பட்டுவிட்டார். அதற்குக் காரணமாக இருந்தவர் நமது ஆசிரியர் அவர்கள்! 2015 முதல் எங்கள் அம்மா நினைவுகளில் வாழ்கிறார்!
அப்பா பி.கே.இராமூர்த்தி அவர்கள் என்ன பொறுப்புகளில் இருந்தார்கள்?
தருமபுரி மாவட்டத் தலைவராக எம்.என்.நஞ்சையா அவர்கள் இருந்தபோது, அப்பா மாவட்டப் பொருளாளராக இருந்தார்கள். ஒகேனக்கல் பகுதியில் இயக்கத்திற்கு ஒரு இடம் வேண்டும் என்ற போது, அப்போது இருந்த பெரியார் பெருந்தொண்டர்கள் சேர்ந்து ஒரு இடம் வாங்கினார்கள். அதுதான் இப்போது ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் மன்றமாகும்.
அதேபோல தருமபுரியில் பெரியார் காலத்தில் வாங்கப்பட்ட கட்டடத்தை, ஆசிரியர் அவர்கள் விரிவாக்கம் செய்தார்கள். அதன் பொறுப்பை அப்பாதான் மேற்பார்வை செய்தார்கள். இன்றைக்குத் தருமபுரியில் பெரியார் மன்றமாக அதுவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றப் பணிகளை 2000ஆம் ஆண்டில் முழுவதுமாக முடித்து வரவு, செலவு கணக்கை விரிவாக எழுதி ஆசிரியர் அவர்களுக்கு அப்பா அனுப்பி வைத்தார்கள். பின்னர் இரண்டே நாளில் மாரடைப்பு ஏற்பட்டு அப்பா மறைந்துவிட்டார்கள். அதிர்ச்சியான இந்த மரணம் எங்களை நிலை குலையச் செய்துவிட்டது. ஆசிரியர் அவர்கள் தான் உடனடியாக வந்து, இறுதிவரை இருந்து எங்களுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.
ஆசிரியர் அவர்கள் தருமபுரி நிகழ்ச்சிக்கு வந்துவிட்டால் பெரும்பாலான ஏற்பாடுகளை அப்பாதான் கவனித்துக் கொள்வார்கள். இன்னும் சொன்னால் பல ஊர்களில் இருந்தும் தோழர்கள் வருவார்கள். உசேனி பிரான், பச்சியப்பன், ராதா, பி.கோ.முனுசாமி, வழக்குரைஞர் பழனியப்பன், டாக்டர் சரோஜா, அட்வகேட் கஜபதி சர்மிஸ்டா, பேராசிரியர் வெள்ளையன் உள்ளிட்டோர் வருகை தருவார்கள்.
உங்களின் இயக்கப் பங்களிப்பு என்னவாக இருந்தது?
முழுக்கவும் இயக்கக் குடும்பம் என்பதால், கொள்கைகள் என்பது சிறு வயதில் இருந்தே இயல்பான ஒன்றுதான்! தமிழ்நாட்டின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். டில்லி பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டு விழா, சிறுகனூர் பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா, வைக்கம் நினைவுத் தூண் திறப்பு விழா போன்றவை குறிப்பிடத்தக்கவை. தவிர ஆர்ப்பாட்டங்களிலும் என் பங்கு இருந்திருக்கிறது. காலையில் கைதாகி, மாலையில் விடுவிக்கும் ஒருநாள் போராட்டத்திலும் கலந்துள்ளேன். தருமபுரி மாவட்ட மகளிரணி பொறுப்பாளராகவும் இருந்துள்ளேன்.
குறிப்பாக எங்கள் வீட்டிற்குப் பெரியார் – மணியம்மையார், ஆசிரியர் – மோகனா அம்மா வரும் வாய்ப்புகள் இருந்ததால், அதனையொட்டிய அனுபவங்களும், நினைவுகளும் மனதிற்குள் நீங்காமல் நிலைத்துவிட்டன! அதேபோல மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களின் வருகை, அவர்களுக்கு விருந்து உபசரிப்பு, அப்போது நடக்கும் உரையாடல்கள், சுவையான செய்திப் பரிமாற்றங்கள் என, என் கொள்கை வாழ்க்கை இனிமை நிறைந்தவை!
உங்களின் திருமண வாழ்க்கைக் குறித்துக் கூறுங்கள்?
1975ஆம் ஆண்டு எங்களின் தாலி மறுப்பு, சுயமரியாதைத் திருமணத்தை ஆசிரியர் நடத்தி வைத்தார். இணையர் பெயர் பழனியப்பன். முதுகலை ஆசிரியராகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்றுள்ளார்கள். கோயம்புத்தூரில் வசிக்கிறோம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவர் எழிலன். பல் மருத்துவராகக் கோவையில் இருக்கிறார். அவரின் வாழ்விணையர் பெயர் கீதா. கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இளைய மகன் பெயர் அமுதன். மென்பொருள் பொறியாளராக ஜெர்மனியில் இருக்கிறார். அவரின் இணையர் குறிஞ்சிமலர். மனிதவள அலுவலராக அந்நாட்டிலே பணி செய்கிறார். ஒரு குடும்பத்தில் பெண்கள் கொள்கையில் இருப்பது முக்கியம் என்பதால், இரண்டு மருமகள்களுமே இயக்கக் குடும்பமாகத் தேர்வு செய்தோம். இரண்டு திருமணத்தையும் ஆசிரியர் அவர்கள் தான் நடத்தி வைத்தார்கள். ஜாதி மறுப்பு, தாலி மறுப்பாக, ராகு காலத்தில் நடைபெற்றது.
கொள்கையின் வெற்றியாக நீங்கள் பார்ப்பது என்ன?
பிள்ளைகள் மருத்துவர்களாக வர வேண்டும் என எங்கள் அப்பாவுக்கு ஆசை இருந்தது. அவ்வகையில் புகழேந்தி எம்.பி.பி.எஸ். முடித்தார், கவுதமன் பல் மருத்துவர் ஆனார். கவுதமன் மருத்துவர் ஆனதற்கு முழுக் காரணமே ஆசிரியர் தான். அதேபோல எங்கள் பிள்ளைகளும் உயர்கல்வி முடித்து, உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா என, பெண்ணாகரத்தில் பிறந்து உலகம் முழுவதும் வலம் வர இந்தக் கொள்கையன்றி, இந்த இயக்கமன்றி வேறென்ன காரணம்!
பத்திரிகைகள் படிப்பது, செய்திகள் கேட்பது, யூடியூப் விவாதங்கள் பார்ப்பது என்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். மகன் எழிலனோடு அடிக்கடி அரசியல் விவாதங்களும் செய்வேன். இதுபோன்ற முற்போக்குத் தன்மை இந்தக் கொள்கையால் விளைந்தவையே! பேரன், பேத்திகளுடனும் இந்தக் காலத்திற்கு ஏற்றாற்போல நாம் மாற்றிக் கொள்ள முடிகிறது!
ஆசிரியர் குறித்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும்?
தலைமை நிலையத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என அப்பாவை ஆசிரியர் அவர்கள் அழைப்பார்கள். அந்தக் காலத்தில் பெரியார் சிறுநீர் பை கட்டி இருப்பார்கள். ஒருமுறை அதே நிலையில் எங்கள் வீட்டிற்குப் பெரியார் வந்தார்கள். சிறுநீர் பையை வேறு யாரையும் தொட பெரியார் அனுமதிக்க மாட்டார் எனச் சொல்வார்கள். புலவர், சம்பந்தம், ஆசிரியர் உள்ளிட்ட ஏழெட்டு பேர் மட்டுமே அந்தப் பணியைச் செய்வார்கள். அதில் எங்கள் அப்பாவும் ஒருவர். அந்தளவு அப்பா மீது அப்போதே ஆசிரியர் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
எங்கள் குடும்பத்தில் ஆசிரியர் இல்லாத நிகழ்ச்சி என்பதே கிடையாது. அதேபோல ஒவ்வொரு காலகட்டத்திலும் மோகனா அம்மா அவர்கள் ஆலோசனைகள் வழங்குவதோடு, எப்போதும் ஆதரவாய் இருப்பார்கள்.
ஆசிரியர் அவர்கள் கோயம்புத்தூர் பகுதிக்கு வந்தால் நான் பெரிதும் மகிழ்வேன். ஆசிரியர் அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வது, பணிவிடை புரிவது என்பது மிகுந்த மனநிறைவைத் தருவதாகும்! ஒவ்வொருவரின் திறமைகளையும் அறிந்து பாராட்டுவதும், அங்கீகரிப்பதும் ஆசிரியருக்கு இணை ஆசிரியர்தான்!
இளம் வயது முதல் இயக்கத்தில் இருக்கிறீர்கள். இன்றைய திராவிடர் கழகம் குறித்த
உங்கள் பார்வை என்ன?
பெரியார் காலத்தில் இருந்து, இன்று ஆசிரியரின் காலம் வரை தொடர்ந்து வரும் சமூகநீதி, கல்வியின் தேவை, இடஒதுக்கீடு, பெண்ணுரிமை, மனிதநேயக் கருத்துகள் ஆகியவை தமிழினத்தை உயர்த்தி இருப்பதன் மூலம் பெரியாரும், திராவிடர் கழகமும் உலகளவில் உயர்ந்து நிற்கிறது!
பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பள்ளிப் பருவத்திலேயே பகுத்தறிவுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, கொள்கைத் தீவிரமும், அறிவாற்றலும் மிகுந்து, ஒப்பற்றத் தலைவராக, தமிழர் தலைவராக மிளிரக்கூடிய ஆசிரியர் அவர்களின் தன்னலமற்ற பணி வரலாற்றுச் சாதனை என்றே சொல்ல வேண்டும்”, என மலர்விழி அவர்கள் தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்!