சென்னை ஜூலை 26 தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒவ்வொரு பருவமழைக்கு முன்னரும், பருவமழையினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை என்று ஒவ்வொரு பருவமழையின் போதும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு, எலிக்காய்ச்சல், உன்னிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இன்புளுயன்சா காய்ச்சல் போன்ற பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியும் பணியினை மக்கள் நல்வாழ்வுத்துறையும், தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகிறது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு பொதுவாகவே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது, அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உன்னிக் காய்ச்சல் கடலூர், தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டு வருகிறது. எலிக் காய்சலை பொறுத்தவரை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
மஞ்சள் காமாலையை பொறுத்தவரை சென்னை, திருச்சி, தேனி போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்புளுயன்சா காய்ச்சல் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்புகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2,972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் காய்ச்சல் கண்டவர்களுடைய அறிக்கை பெறப்பட்டு வருகிறது. அப்படி பெறப்பட்ட அறிக்கைகளை எந்த வகையான காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கொசுப் புழு உற்பத்தியாவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 22,384 தினசரி தற்காலிக பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அன்றாடம் புகை மருந்து அடிப்பது, கொசு மருந்து தெளிப்பது, அபேட் தெளிப்பது போன்ற பல்வேறு கொசுப் புழுக்களை தடுக்கும் பணியினை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் 16,005 புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளது. அதற்கு தேவையான மருந்துகள் குறிப்பாக பைரித்திரம் 51,748 லிட்டர், மாலத்தியான் 17,816 லிட்டர் மற்றும் டெமிபாஸ் 33,446 லிட்டர் கையிருப்பில் உள்ளது. கொசுத்தடுப்புப் பணிகளுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்புகள் யாருக்கேனும் ஏற்பட்டால் தன்னிச்சையாக மருத்துவர்களின் பரிந்துரைகள் இல்லாமல் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். யாருக்கேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 104, 108 போன்ற அவசர எண் உதவிகளை நாடவேண்டும்.
இதற்கிடையே, கடந்த வாரம் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைகளை பாதுகாக்கும் பணியில் பொது சுகாதாரத் துறை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் இருந்து வரும் போக்குவரத்து வாகனங்கள், பேருந்துகள், கார்கள் போன்ற அனைத்து வாகனங்களையும், பயணிகளை பரிசோதிக்கும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடுங்கனி (Nadugani), சோழடி (Choladi), தளுர் (Thaloor), நம்பியார்குன்னு (Nambiyarkunnu), பட்டாவயல் (Paatavayal) போன்ற 5 இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை” என்று தெரிவித்தார்.