புதுடில்லி, ஜூலை 25- ‘‘தஞ்சை டெல்டா ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற நிதி ஒதுக்க வேண்டும்’’ என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் மு.சண்முகம் வேண்டு கோள் விடுத்தார்.
இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்கள வையில் திமுக உறுப்பினரும் தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளருமான மு.சண்முகம் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:–
தஞ்சாவூர் – டெல்டா பகுதிகளில் இருக்கக் கூடிய பொதுமக்கள் தஞ்சா வூர் ரயில்வே பாதையை இரு வழிப் பாதையாக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விழுப்புரம் – தஞ்சாவூர் மெயின் லைனில், கும்பகோணம் மயிலாடுதுறை வழியாக இரு வழிப்பாதை அமைக்கப்பட வேண்டும். இந்த பாதை சிதம்பரம், வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற தலங்களை உள்ளடக்கிய பாதையாகும். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரக்கூடிய இடங்களை இந்த ரயில்வே பாதை கடந்து செல்கிறது. இந்த மெயின் லைன் என்பது மிகப் பழைமையான ஒரு பாதையாகும்.
பயணிகள் மற்றும் சரக்குகள் போக்குவரத்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு வழித் தடமாகும் இது. இந்தத்திட்டம் வெகுநாட் களாக கிடப்பிலே போடப்பட்டுள்ளது. இதற்குரிய சர்வே முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழியை இருவழிப் பாதையாக் கினால் பயணிகளின் எண்ணிக்கை கூடும். அவர்களுக்கான பயண நேரம் குறையவும் வாய்ப்பு உண்டாகும். ரயில்வேத் துறை அமைச்சர் அவர்களையும், நிதித்துறை அமைச்சர் அவர்களையும் இந்த நிதிநிலை அறிக்கையில் அதற்குரிய நிதியினை ஒதுக்கீடு செய்து இந்த பாதையை விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஆவன செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
– இவ்வாறு மு.சண்முகம் பேசினார்.