செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூலை 25- தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வழக்குரைஞர் ராம் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின்போது, செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி சோதனையிட்டது. அதில் ‘எச்பி ஹார்டு டிஸ்க், லேப்டாப், எஸ்.எஸ்.டி. மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகிய 5 சாதனங்களை கைப்பற்றியது. இருப்பினும் பென் டிரைவில் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டும் கோப்பு செந்தில்பாலாஜி வீட்டில் நடத்திய சோதனையின்போது இல்லை என வாதிடப்பட்டது.

இதனையடுத்து நேற்று (24.7.2024) நடத்தப்பட்ட விசாரணையின்போது, நீதிபதிகள் ‘ரூ.67.74 கோடிக்கான பண மோசடிக்கான புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் கோப்பு கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இல்லை என்பது செந்தில் பாலாஜியின் வாதமாக உள்ளதே, இந்த கோப்பு எப்படி அமலாக்கத் துறைக்கு கிடைத்தது?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சோஹிப் ஹுசைன், ‘இந்த பென் டிரைவ் போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதான லஞ்ச வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றியது. இதுதொடர்பான தகவலை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கேட்டு பெற்றது’ என வாதிட்டார்.

மீண்டும் நீதிபதிகள், ‘கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் அந்த கோப்பு இருந்ததா?’ என கேட்டனர். வழக்குரைஞர் சோஹிப் ஹுசைன், ‘செந்தில் பாலாஜியின் வீ்ட்டில் அந்த பென் டிரைவ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என பதில் அளித்தார்.

இதற்கு நீதிபதிகள், ‘கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், அதில் பணமோசடி புகார் தொடர்புடைய கோப்பு இருந்ததையும் அமலாக்கத் துறை நிரூபிக்க வேண்டும்’ என தெரிவித்து விசாரணையை 25.7.2024 இன்று பிற்பகல் 3 மணிக்கு தள்ளி வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *